கிரான் - வாகரை வனப் பகுதியில் விசேட அதிரடிப் படையினர் சுற்றிவளைப்பு உழவு இயந்திரம், மரக் குற்றிகள் மீட்பு....
கிரான் - வாகரை வனப் பகுதியில் விசேட அதிரடிப் படையினர் சுற்றிவளைப்பு உழவு இயந்திரம், மரக் குற்றிகள் மீட்பு....
வாழைச்சேனை வட்டார வன காரியலாயத்திற்குட்பட்ட கிரான் மற்றும் வாகரை பிரதேச வனப் பகுதியில் விசேட அதிரடிப் படையினரின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது சட்ட விரோதமான முறையில் கொண்டு செல்லப்பட்ட மணல் ஏற்றிய உழவு இயந்திரங்கள் மற்றும் பெறுமதி வாய்ந்த முதிரை மரக் குற்றிகள் என்பன கைப்பற்றப்பட்டதாக வாழைச்சேனை வட்டார வன அதிகாரி நா.நடேசன் தெரிவித்தார்.
இதன்போது சந்தேக நபர்கள் 08 பேர் கைது செய்யப்பட்டதுடன் உழவு இயந்திரங்கள்-07, முதிரை மரக்குற்றிகள்-22 என்பன கைப்பற்றப்பட்டதாக தெரிவித்தார்.
கிரான் பிரதேச வடமுனை பகுதியின் தொப்பிகல காட்டுப் பகுதியில் செல்லுபடியான அனுமதிப் பத்திரமின்றி மணல் ஏற்றி சென்ற சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு உழவு இயந்திரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இதே போன்று வாகரை கதிரவெளி ஒதுக்கக் காட்டில் உழவு இயந்திரத்தில் கொண்டு செல்லப்பட்ட முதிரை மரக் குற்றிகளும் உழவு இயந்திரமும் கைப்பற்றப்பட்டன. சந்தேக நபர்கள் தப்பி ஓடியுள்ளனர்.
குறித்த பிரதேசத்தில் தொடர்சியாக இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுவதாக அறிந்து மட்டக்களப்பு மேலதிக மாவட்ட வன அதிகாரி எம்.ஏ.ஜாயா வாழைச்சேனை வட்டார வன அதிகாரி நா.நடேசன் ஆகியோர்களின் பணிப்புரையின் பேரில் பகுதி வன உத்தியோகஸ்த்தர்கள் வாகரை விசேட அதிரப் படையினருடன் இணைந்து இவ் நடவடிக்கையினை மேற்கொண்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
Comments
Post a Comment