யுனிசெப் அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி மட்டக்களப்பிற்கு விஜயம்......
ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் நிதியமான யுனிசெப் அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி கிறிஸ்டியன் ஸ்கூக் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) நவரூபரஞ்சினி முகுந்தன் தலைமையிலான பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (10) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த வருடம் (2022) ஒக்டோபர் மாதத்திலிருந்து ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் நிதியமான யுனிசெப் அமைப்பினால், முன்பள்ளிகளுக்கு அனுசரணை வழங்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வரும், நிகழ்ச்சித்திட்டமான ‘வறுமையினால் ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்களின் போஷாக்கு மற்றும் வளர்ச்சி மட்டத்திற்குப் பாதிப்பு ஏற்படாது பேணுதல் தொடர்பாக மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களின் சுகாதாரத் துறை மற்றும் கல்வித்துறை சார்ந்த அதிகாரிகள் தத்தம் பிராந்தியங்களில் மேற்கொள்ளும் செயற்பாடுகளின் நிலைப்பாடு தொடர்பாக முன்வைத்தனர்.
இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் சிறுவர்களின் போஷாக்கு, உளவள செயற்பாடுகள், போதைப்பொருட்களுக்கு எதிரான பாடசாலை மட்டச்செயற்பாடுகள் என்பன குறித்து மட்டக்களப்புப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன் சமர்ப்பித்தார்.
பொருளாதார தளம்பல் காரணமாக மாவட்டத்தில் அதிகரித்து வரும் பாடசாலை இடைவிலகல், சிறுவர் துஷ்பிரயோகம், கிராமங்களிலிருந்து நகர்ப்புறங்களுக்கான மாணவர்களின் புலம்பெயர்வு, மாணவர்களின் உளப் பாதிப்புக்கள், தாய்மார் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக புலம்பெயர்தல் போன்றவை தொடர்பாக கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணியமூர்த்தி உட்பட வைத்திய அதிகாரிகள், கல்வித்துறை உயர் அதிகாரிகள், யுனிசெப் அமைப்பின் உத்தியோகத்தர்கள் மற்றும் துறைசார் நிபுணர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment