இலங்கையில் மார்ச் 9இல் உள்ளூராட்சி சபை தேர்தல்: எதிர்க்கட்சிகள் சந்தேகம் நீங்குமா?
இலங்கை பொருளாதார ரீதியில் பல்வேறு சவால்களை எதிர்நோக்கியுள்ள இந்த தருணத்தில் சவாலுக்கு மத்தியில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் மார்ச் மாதம் 9ம் தேதி உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேர்தலை நடத்தாதிருப்பதற்கு அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக எதிர்கட்சிகள் குற்றஞ்சுமத்தி வருகின்ற சூழலில். தேர்தலுக்கு தயாராகுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சிக்கு அறிவித்துள்ளார்.
தேர்தலை நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி, தமது கட்சி உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் முகாமைத்துவ சபை, கட்சியின் தலைவரும், ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்றைய தினம் கூடிய போதே, ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கட்சிகள் ஒன்றிணைவு:
நாட்டிலுள்ள பிரதான அரசியல் கட்சிகள், ஒவ்வொரு கட்சிகளுடனும் இணைந்தும், தனித்தும் இந்த முறை தேர்தலில் போட்டியிடுகின்றன. இதன்படி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும், மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் இணைந்து இந்த முறைத் தேர்தலில் போட்டியிடுகின்றன.
தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி சபைகளிலும் இணைந்தும், தெரிவு செய்யப்பட்ட ஏனைய உள்ளூராட்சிகளில் பிரிந்தும் இந்த இரண்டு கட்சிகளும் போட்டியிடுகின்றன. தமது கட்சி தேர்தலை எதிர்நோக்கும் விதம் குறித்து, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான பஷில் ராஜபக்ஷ கருத்து தெரிவித்தார்.
''ஐக்கிய தேசியக் கட்சியுடன் அனைத்து இடங்களிலும் இணைந்து போட்டியிடவில்லை. பெரும்பாலான இடங்களில் வெவ்வேறாக போட்டியிடுகின்றோம். நாங்கள் 252 உள்ளூராட்சி சபைகளில், நேரடியாக எமது மொட்டு சின்னத்தில் போட்டியிடுகின்றோம். ஏனைய உள்ளூராட்சி சபைகளில் வெவ்வேறு சின்னங்களில் போட்டியிடுகின்றோம். யாழ்ப்பாணத்தில் வீணை சின்னத்தில் போட்டியிடுகின்றோம். கிழக்கு மாகாணத்தில் படகு சின்னத்தில் போட்டியிடுகின்றோம். குதிரை, தேயிலை கொளுந்து போன்ற சின்னங்களிலும் போட்டியிடுகின்றோம். பெரும்பாலான இடங்களை நாங்கள் கைப்பற்றுவோம்' என பஷில் ராஜபக்ஸ குறிப்பிட்டார்.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து பிரிந்த சிலர், இம்முறை ஹெலிகொப்டர் சின்னத்தில் சுதந்திர மக்கள் கூட்டணி என்ற பெயரில் போட்டியிடுகின்றனர். இந்த கூட்டணியுடன், சில உள்ளூராட்சி சபைகளில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இணைந்து போட்டியிடுகின்றது. ஏனைய பகுதிகளில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, தனித்து போட்டியிடுவதாக அந்த கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவிக்கின்றார்.
இதேவேளை, மலையகத்தின் பிரதான கட்சியாக விளங்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இருவேறு பகுதிகளில் வெவ்வேறு சின்னங்களில் போட்டியிட தயாராகியுள்ளது. இதன்படி, கண்டி மாவட்டத்தில் தமக்கு சொந்தமான சேவல் சின்னத்திலும், ஏனைய மாவட்டங்களில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்தும் போட்டியிடுவதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பான பாரத் அருள்சாமி தெரிவித்தார்.
இதேவேளை, தேர்தலை நடத்துவதற்காகவே, தேர்தலுக்காக அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவிக்கின்றார். தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தேர்தலை நடத்துவோம் என தம்மிடம் உறுதியளித்ததாகவும் அவர் குறிப்பிடுகின்றார். தேர்தலை நடத்துவதற்காகவே, வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் கூறுகின்றார்.
பிரதான எதிர்க்கட்சியாக விளங்கும் ஐக்கிய மக்கள் சக்தி, இம்முறை தேர்தலில் தமது கூட்டணி கட்சிகளுடன் மாத்திரம் ஒன்றிணைந்து, ஐக்கிய மக்கள் கூட்டணியில் போட்டியிடுகின்றது.
தமது கட்சி தேர்தலில் போட்டியிடும் விதம் தொடர்பில் அந்த கட்சியின் தமிழ் பிரிவு ஊடகப் பேச்சாளர் உமாச்சந்திரா பிரகாஷ், பிபிசி தமிழுக்கு கருத்து தெரிவித்தார்.
''எமது நாட்டின் கட்டமைப்பில் அடித்தள கட்டமைப்பு என்பது உள்ளூராட்சி சபைகள். வடிகானமைப்பு திட்டங்கள், குப்பை முகாமைத்துவம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை முகாமைத்துவம் செய்வதற்கான அங்கீகாரம் இருக்க வேண்டும். நாட்டில் பணம் இல்லை என கூறி, அதற்கு தடை விதிப்பதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. எமது நாட்டின் சுதந்திர தினத்தை கொண்டாட வேண்டியது அவசியம். எனினும், நாடு இருக்கின்ற பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் ஒரு நாள் கொண்டாட்டத்திற்காக பல மில்லியன் செலவிடுகின்றோம். ஆனால் தேர்தலை பிற்போடுமாறு கூறுவது அரசாங்கத்தின் பிற்போக்கு தனமான விடயம். 2018ம் ஆண்டு உள்ளூராட்சி சபைகளை கைப்பற்றிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அதிகாரம் தொடர்ந்தும் இருக்கின்றது என்பதை காண்பிப்பதற்காக, ரணில் விக்ரமசிங்க செய்யும் திட்டமாகவே நாம் இதனை பார்க்கின்றோம். தேர்தலை பிற்போடுவதற்காக அத்தனை வழிகளையும் அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. ஆனால், ஜனநாயகம் உயிர்ப்புடன் இருக்கின்றது என்ற நம்பிக்கையுடன தேர்தலுக்காக காத்திருக்கின்றோம்' என ஐக்கிய மக்கள் சக்தியின் தமிழ் பிரிவு ஊடகப் பேச்சாளர் உமாச்சந்திரா பிரகாஷ் தெரிவிக்கின்றார்.
தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள், ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்தே இம்முறை தேர்தலை கூட்டணியாக எதிர்நோக்குகின்றன.
இதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கு மக்களை பிரதிநிதித்துவப்படுப்படுத்தும், பிரதான கூட்டமைப்பாக விளங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இந்த தேர்தலில் பிளவடைந்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான கட்சியாக விளங்கிய இலங்கை தமிழரசு கட்சி, கூட்டமைப்பிலிருந்து விலகி, இம்முறை தேர்தலை தனித்து எதிர்கொள்கின்றது. இந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை, ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்குழுக்கள் தமது கைவசப்படுத்தியுள்ளனர்.
இதன்படி, சித்தார்த்தன் தலைமையிலான தமிழீழ மக்கள் விடுதலை கழகம் (புளொட்), செல்வம் அடைகலநாதன் தலைமையிலான தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ), கதிர் தலைமையிலான ஜனநாயக போராளிகள் கட்சி, சுரேஷ் பிரேமசந்திரன் தலைமையிலான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, ஸ்ரீகாந்தா தலைமையிலான தமிழ்த் தேசியக் கட்சி ஆகிய கட்சிகள் கூட்டமைப்பை தமதாக்கிக் கொண்டுள்ளன.
தேர்தல் நடத்தப்படுமா?
தேர்தல் செலவீன ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் இலங்கை நாடாளுமன்றத்தில் கடந்த 19ம் தேதி பெரும்பான்மை வாக்குகளில் நிறைவேற்றப்பட்டது. எனினும், இந்த சட்டமூலம் கொண்டு வரப்படுவதன் ஊடாக, தேர்தலை பிற்போட முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அண்மையில் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
''இலங்கையில் தேர்தல் தொடர்பில் புதிய சட்டம் ஒன்று உருவாகியுள்ளது. புதிய சட்டத்தின் பிரகாரமே தேர்தல் நடத்தப்பட வேண்டும் என கோரி, நாட்டிலுள்ள எந்தவொரு பிரஜையும் நீதிமன்றத்தை நாட முடியும். அப்போது நிச்சயமாக என்ன நடக்கும்?. ஆம், என்ற தீர்ப்பை நீதிமன்றத்தினால் வழங்க வேண்டிய நிலைமை ஏற்படும். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள புதிய சட்டத்தின் பிரகாரம், இந்த தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு நீதிமன்றம் கூறும்.' என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவிக்கின்றார்.
எனினும், குறிப்பிட்ட தேதியில் தேர்தலை நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுஇ உயர்நீதிமன்றத்தில் அறிவித்தது. இதன்படி, எதிர்வரும் மார்ச் மாதம் 09ம் தேதி உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பை உயர்நீதிமன்றம் வெளியிட்டது. தேர்தல் நடத்துவது தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமல் ஸ்ரீ ரத்நாயக்க, ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
''மார்ச் மாதம் 9ம் தேதி தேர்தலை நடத்துவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் அனைத்தும் தயார்ப்படுத்தப்பட்டுள்ளன. நிதி அமைச்சின் செயலாளருக்கு வரவு செலவுத்திட்டம் மற்றும் பொருளாதாரம் சவாலானதாகவே காணப்படுகின்றது. இதற்கு முன்பிருந்த செயலாளர்களும் இந்த சவால்களை எதிர்நோக்கியிருந்தார்கள். இந்த நாட்டு மக்களின் ஜனநாயக உரிமை இது. அதற்கு பொறுப்பானவர்கள் பொறுப்பு கூற வேண்டும்' என அவர் கூறுகின்றார்.
நன்றி :சமூக ஊடக பிபிசி தமிழ் பிரிவு
Comments
Post a Comment