75 வது தேசிய சுதந்திர தின கொண்டாட்டத்திற்கான முன்னேற்பாடுகள் மட்டக்களப்பில் பூர்த்தி!!

 75 வது தேசிய சுதந்திர தின கொண்டாட்டத்திற்கான முன்னேற்பாடுகள் மட்டக்களப்பில் பூர்த்தி!!

பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதி சனிக் கிழமை காலை 9.00 மணிக்கு மட்டக்களப்பில் நடைபெறவுள்ள 75 ஆவது தேசிய சுதந்திர தின விழா தொடர்பான முன்னேற்பாடுகள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா அவர்களின் தலைமையில் இடம் பெற்று வருகின்றது.
பொது நிருவாக அமைச்சின் சுற்று நிருபத்திற்கமைவாக அநாவசிய செலவுகளை குறைக்கும் வண்ணம் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. குறித்த நிகழ்வில் தேசிய கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டதை தொடர்ந்து பிரதான நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு 75,000 மரக்கன்றுகள் நடும் நோக்கில் 45000 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக மரநடுகை இடம்பெற்றுவரும் நிலையில் அதிதிகளினால் கோட்டை பூங்கா வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படவுள்ளது.
முப்படையினரின் ஒத்துழைப்பு மற்றும் பாடசாலை மாணவர்களின் பாண்ட் வாத்திய குழு, சாரணர்கள் மற்றும் கடெற் அணியினரின் அணிவகுப்பு மரியாதையுடன் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது.
அத்தோடு பெப்ரவரி 1ஆம் மற்றும் 2ஆம் திகதிகளில் கல்லடி கடற்கரை, கோட்டை பூங்கா வீதி, மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தை அண்டிய வாவியோரங்களில் உள்ள கழிவுகளை அகற்றுவதற்காக முப்படையினர், மாவட்ட இளைஞர் சேவைகள் மன்றம், மட்டக்களப்பு மாநகர சபை மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களும் இணைந்து சிரமதான பணியினை மேற்கொள்வதற்காக திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments