75ஆவது சுதந்திர தினத்தை குறைந்த செலவில் பெருமையுடன் கொண்டாடுவோம்.......

 75ஆவது சுதந்திர தினத்தை குறைந்த செலவில் பெருமையுடன் கொண்டாடுவோம்.......

குறைந்த செலவில் பிரம்மாண்டமாகவும், பெருமையாகவும் சுதந்திர தினத்தைக் கொண்டாடுவது தொடர்பான கலந்துரையாடல் நேற்று (26) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

அதன்படி, 75ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, பெப்ரவரி 02 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை பல சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. அதற்கமைய விசேட தலதா பூஜை மற்றும் மஹாபிரித் சொற்பொழிவு, சர்வமத நிகழ்வுகள், சுதந்திர சதுக்கத்தில் கலாசார நிகழ்ச்சி, காலி முகத்திடலில் நடைபெறும் பாரம்பரிய சுதந்திர தின பிரதான நிகழ்வு, தேசிய பூங்காக்கள் மற்றும் தேசிய மிருகக்காட்சிசாலை போன்றவற்றுக்கு இலவச அனுமதி, யாழ் கலாசார மையம் திறப்பு, கண்டி பெரஹர, தேவேந்திரமுனையில் இருந்து பருத்தித்துறை வரையிலான விசேட சைக்கிள் சவாரி போன்ற பல நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்குத் தேவையான செலவுகளை மதிப்பிடும் போதும் நடைமுறையில் அதற்கான செலவுகளை மேற்கொள்ளும் போதும் நாட்டின் தற்போதைய நிதி நிலைமை குறித்து கவனம் செலுத்துவது, அரசியல் தலைமை மற்றும் அதிகாரிகளின் பொறுப்பாகும் என்றும் அதற்கேற்ப செலவினங்களைக் குறைத்து செயற்படுமாறும் ஜனாதிபதி இங்கு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.

75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு ஒதுக்கப்பட்ட பண ஒதுக்கீடு தொடர்பில் மக்கள் மத்தியில் பாரிய எதிர்ப்பு நிலவுவதை நினைவு கூர்ந்த ஜனாதிபதி, அது குறித்து அவதானம் செலுத்தி அதற்கான செலவினங்களை குறைப்பதற்கு முயற்சி எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

'75ஆவது சுதந்திர தினத்தை நாம் கொண்டாட வேண்டும். அதை செய்யாவிட்டால் சுதந்திர தின கொண்டாட்டத்தை கூட நடத்த முடியாது என்று உலகம் நினைக்கும். அதே போன்று நாம் சுற்றுலாப் பயணிகளையும் முதலீட்டாளர்களையும் கவர வேண்டும். நம் நாட்டைப் பற்றி நல்லதொரு எண்ணத்தை உருவாக்க வேண்டும். எனவே முடிந்தவரை செலவுகளைக் குறைத்து இந்த சுதந்திர தினத்தை கொண்டாடுவோம்.

சுதந்திர தின விழாவுடன் இணைந்து நகர்ப்புற காடுகளை உருவாக்கும் வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. துபாயில் நடைபெறும் காலநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாட்டில் (COP28) கலந்து கொள்வதற்கு முன் இந்த நடவடிக்கைகளைத் தொடங்க எதிர்பார்க்கிறோம். மேலும், சில புதிய நிறுவனங்களும் தொடங்கப்பட உள்ளன. அது தொடர்பிலான சட்டங்களை இயற்றி பணிகளை ஆரம்பிக்க ஆகஸ்ட் மாதம் ஆகலாம். மேலும், காலநிலை மாற்றம் குறித்த பல்கலைக்கழகத்தை தொடங்க திட்டமிட்டுள்ளோம், இது நாட்டுக்கு நீண்டகால நன்மைகளை கொண்டு வரும். எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த நடவடிக்கைகளுக்கு முழுமையாக செலவழிப்பதற்கு திறைசேரியில் பணம் இல்லை. எனவே, முக்கிய நடவடிக்கைகளுக்கு பணம் ஒதுக்கும் போது, ஏனைய நடவடிக்கைகள் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும்.'என்றும் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில், பிரதமர் தினேஷ் குணவர்தன, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க மற்றும் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி, பாதுகாப்பு, வெளிவிவகாரம், கல்வி, புத்தசாசன மற்றும் கலாசார அலுவல்கள், வெகுசன ஊடகம், நிதி ஆகிய அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திறைசேரி உள்ளிட்ட துறைசார் நிறுவனங்களின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Comments