மட்டக்களப்பு மாநகர சபையின் ஜனவரிக்கான 69ஆவது அமர்வு...............
மட்டக்களப்பு மாநகர சபையின் 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக்கான 69ஆவது சபை அமர்வு, மாநகர முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் சபா மண்டபத்தில் (05) திகதி நடைபெற்றது.
இதன்போது, நிதிக் குழுவின் சிபாரிசுகள் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகாரம் பெறப்பட்டதுடன், மாநகர முதல்வரின் அறிவிப்பில் பன்சல வீதி மற்றும் அருணகிரி வீதிகளின் விஸ்தரிப்புக்காக காணிகளை விட்டுத்தந்த குடியிருப்பாளர்களுக்கு 3 வருடங்களுக்கு ஆதனவரி விலைக்கழிப்புச் செய்வதற்காக அனுமதியை சபையில் முன்வைத்துப் பெற்றுக்கொண்டார்.
தனியார் துறையினர் வாவியின் மேல் Solar Panel மின் சேமிப்புக் கட்டமைப்பை நிறுவிப் பிறப்பிக்கப்படும் மின்சாரத்தை மின்சார சபைக்கு வழங்குவதற்காக சபையில் அனுமதியைக் கோரிய போது, சபையோர் அதை மறுத்து மாநகர சபையின் நிதியின் மூலம் அக்கட்டமைப்பை நிறுவி அதில் வரும் வருமானத்தை வரியிறுப்பாளர்களின் நலன்களுக்கு பாவிக்க முடியுமென்று சபையினர் கேட்டுக்கொண்டமைக்கமைய, மாநகர சபையின் மூலம் நிர்மாணிப்பதாகத் தெரிவித்தார்.
அத்துடன், உள்ளூர் நிலையான அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் மற்றும் மாநகர நிதியுடன் பொதுச்சந்தை வளாகத்திலுள்ள கட்டடங்களின் உட்கட்டமைப்புகளை புனரமைப்பதற்கான அனுமதியும் பெறப்பட்டது.
2023ஆம் ஆண்டுக்கான நிலையியல் குழுக்களான நிதி, வேலை, சுகாதாரம், நூலகக் குழுக்கள், விசேட குழுக்களான காணி, அனர்த்த முகாமைத்துவம், கலை, விளையாட்டு மற்றும் பெண்கள் நலன் மேம்பாட்டுக் குழுக்களுக்கான உறுப்பினர்கள் சபையில் தெரிவு செய்யப்பட்டதுடன், அக்குழுக்களின் உறுப்பினர்கள் ஒன்றுகூடி அதன் தலைவர்களைத் தெரிவு செய்து குழுத் தலைவர்களின் பெயர்களை ஒரு வாரத்துக்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
Comments
Post a Comment