சரீரம் நிஷப்தபதியின் திருப்பாவை உற்சவமும் 33வது ஆண்டு விழாவும், கௌரவிப்பு நிகழ்வும்.......

 சரீரம் நிஷப்தபதியின் திருப்பாவை உற்சவமும் 33வது ஆண்டு விழாவும், கௌரவிப்பு நிகழ்வும்.......

சரீரம் நிஷப்தபதி ஸ்ரீ லங்கா தேசிய மன்றத்தினால் மட்டக்களப்பு தாளங்குடாவில் அமைந்துள்ள கிருஷ்ணர் ஆலயத்தில் மார்கழி திருப்பாவை உத்சவமும், நிஷப்தபதியின் 33வது ஆண்டு விழா நிகழ்வும் திங்கட்கிழமை (02.01.2023) நடைபெற்றது.
சரீரம் நிஷப்தபதி ஸ்ரீ லங்கா தேசிய மன்றத்தின் இஸ்தாபகர் கலாநிதி கர்மயோகி ஆறுமுகம் லோகேஸ்பரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முதலில் கிருஷ்ணர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சங்காபிஷேகம் இடம்பெற்றது.
மகா விஷ்ணு சமேத சீதேவி, பூதேவிகளுடன் அருள் பாலிக்கும் சரீரம் நிசப்தபதி ஆலயத்தில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டு விசேட யாக பூசைகளும் இடம்பெற்றன.
இதன்போது பொருளாதார நெருக்கடியிலும் மக்களுக்கு அர்ப்பணிப்புடன் ஊடகப் பணியாற்றிவரும் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 22 தமிழ் மற்றும் முஸ்லிம் ஊடகவியலாளர்கள் விருது வழங்கி கௌரவிக்ககப்பட்டனர். மேலும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெத்தினம், கிழக்குப் பல்கலைக் கழகத்தின் வேந்தர் பேராசிரியர் மா.செல்வராசா, மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் புண்ணியமூர்த்தி, மாவட்ட தகவல் அதிகாரி வ.ஜீவானந்தன் மற்றும் சிவாச்சாரியார்களும், சரீரம் நிஷப்தபதி ஸ்ரீ லங்கா தேசிய மன்றத்தினரால் இதன்போது விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டதுடன், சமூக சேவையாளர்கள் பலரும் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.
இவ்வாலயத்தில் ஆண்டு தோறும் பல்வேறு விழாக்கள் நடைபெற்றாலும் மார்கழி மாதத்தில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பு வாய்ந்ததாக பக்தர்களினால் கருதப்பட்டு வருவதானது விசேட அம்சமாகும்.
சரீரம் நிஷப்தபதி ஸ்ரீ லங்கா தேசிய மன்றத்தினால் கடந்த 33 வருடங்களாக கிழக்கு மாகாணத்தின் பல்வேறுபட்ட பகுதிகளிலும் நளிவுற்ற மக்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்டு செயலாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.







Comments