மட்டக்களப்பு மாவட்ட விவசாய குழுக் கூட்டம் - 2023.......

 மட்டக்களப்பு மாவட்ட விவசாய குழுக் கூட்டம் - 2023.......

மட்டக்களப்பு மாவட்டத்தின் இவ்வருடத்திற்கான (2023) விவசாய குழுக் கூட்டம் அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (25) இடம்பெற்றது.
விவசாயத்தை பிரதான தொழிலாகக் கொண்ட மட்டக்களப்பு மாவட்டத்தில், மீண்டும் அசேதனப் பசளை அறிமுகப்படுத்தப்பட்டு, தற்போது விவசாயம் முன்னேற்றமடைந்து வரும் நிலையில், இம்முறை சிறுபோகத்தை ஆரம்பிக்க எதிர்பார்க்கப்படுகிறது.
பெரும்போக விவசாயத்தின் முன்னேற்ற அறிக்கையினையும், விவசாயிகள் எதிர்கொண்ட தொழில்நுட்பம் சார்ந்த பிரச்சினைகளும் அவற்றிற்கான தீர்வுகளும், நெற்செய்கைக்கான செலவு மதிப்பீடு, சிறுபோக பயிர்ச்செய்கைக்கான தொழில்நுட்ப நடவடிக்கைகள், நெல் அறுவடை இயந்திரத்திற்கான செலவு மற்றும் நெல்லுக்கான விலை நிர்ணயம் போன்றவை குறித்து கலந்துரையாடப்பட்டது.
பெரும்போகத்தில் எரிபொருள் விநியோகம் தமக்கு இலகுவாகக் கிடைத்ததாகவும், பெற்றோலை பெற்றுக்கொள்வதில் அவ்வப்போது சிக்கல் காணப்பட்டதாகவும், விவசாயிகள் தெரிவித்தனர்.
அத்துடன் பெரும்போகத்தின் நீர்ப்பாசன அபிவிருத்தித் திட்டங்களையே சிறுபோக விவசாயத்திற்கும் பயன்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
மேலும் பெரும்போகத்திற்காக மத்திய வங்கியினால் அங்கீகரிக்கப்பட்டு, வங்கிகளால் வழங்கப்பட்ட கடன் மற்றும் உரமானியத்திற்கான உதவு தொகை விவசாயிகளை சென்றடைந்திருந்ததாகவும், எனினும் மக்கள் வங்கியில் கணக்கு பேணும் விவசாயிகளுக்கு இதுவரை உரமானியம் கிடைக்காமை குறித்த முறைப்பாடு இதன்போது முன்வைக்கப்பட்டது.
இம்முறை சிறுபோகத்திற்கான விதை நெல்லை மார்ச் முதலாம் திகதியிலிருந்து விவசாயிகளுக்கு வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இக்கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்களான சுதர்ஷினி ஸ்ரீகாந்த், நவரூபரஞ்சினி முகுந்தன் (காணி), கிழக்கு பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் பத்திநாதன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணியமூர்த்தி, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எல்.ஆர்.குமாரசிறி, கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் கே.ஜெகன்நாத் ,பிரதி விவசாய பணிப்பாளர் (விரிவாக்கம்) வீ.பேரின்பராஜா, மட்டக்களப்பு பிராந்திய நீர்ப்பாசன பணிப்பாளர் என்.நாகரெத்தினம், பிரதேச செயலாளர்கள், உயர் அதிகாரிகள், விவசாய மற்றும் கால்நடை அமைப்புக்களின் குழுத்தலைவர்கள், மற்றும் விவசாய அமைப்புக்களின் உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.





Comments