சிறுநீரக விற்பனை மோசடி மற்றுமொரு தரகர், 2 கிராம அலுவலர்கள் கைது...

 சிறுநீரக விற்பனை மோசடி மற்றுமொரு தரகர், 2 கிராம அலுவலர்கள் கைது...

வறிய குடும்பங்களை இலக்கு வைத்து, பணம் தருவதாகக் கூறி ஏமாற்றி பொரளை பிரதேசத்திலுள்ள தனியார் வைத்தியசாலையில் இடம்பெற்ற சிறுநீரக விற்பனை மோசடி நடவடிக்கை தொடர்பில் மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொரளை பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த சந்தேகநபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, குறித்த விடயம் தொடர்பில் பிரதான தரகராக செயற்பட்ட கொழும்பு 13,ஆமர்வீதி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லொண்ரிவத்த பிரதேசத்தில் 32 வயதான நபர் ஒருவர் நேற்று (16) பிற்பகல் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, குறித்த விடயம் தொடர்பில் இருநபர்களுக்கு போலி சான்றிதழ் வழங்கி சிறுநீரக கடத்தல்காரர்களுக்கு உதவி, ஒத்தாசை புரிந்தமை தொடர்பில் கொலன்னாவை மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே பிரதேச செயலகங்களுக்குட்பட்ட 2 கிராம சேவை பிரிவுகளை சேர்ந்த 59 வயதான 2 கிராம அலுவலர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இராஜகிரிய, கடுவெல பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.

குறித்த விடயம் தொடர்பில் கடந்த மாதம் 41 வயதான, கஜீமாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த பிரதான தரகர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வறிய குடும்பங்களைச் சேர்ந்த நபர்களை இலக்கு வைத்து சட்டவிரோதமான முறையில் ஏமாற்றி பிரபல வைத்தியசாலை ஒன்றில் சிறுநீரக தானம் செய்து அதற்காக  பணம் செலுத்தாமை தொடர்பில் பொரளை பொலிஸ் நிலையத்தில் பெண் ஒருவர் உள்ளிட்ட 05 பேர் மேற்கொண்ட முறைப்பாடுகள் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments