உலகின் மிக வயதான மனிதரான அருட்சகோதரி 118 ஆவது வயதில் காலமானார்......
உலகின் மிக வயதான மனிதர் அறியப்பட்ட, பிரெஞ்சு கன்னியாஸ்திரி ஒருவர் தனது 118 ஆவது வயதில் காலமானார். லூசில் ரென்டன் எனும் இக்கன்னியஸ்திரி அருட்சகோதரி அன்ட்ரே எனவும் அறியப்பட்டவர். பிரான்ஸில் 1904 ஆம் ஆண்டு பெப்ரவரி 11 ஆம் திகதி அவர் பிறந்தார். பிரான்ஸின் டவ்லோன் நகரிலுள்ள மருத்துவ மனையொன்றில் நேற்று (17) புதன்கிழமை அவர் காலமானார் என பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே ஐரோப்பாவின் மிக வயதான நபராக விளங்கியவர் இக்கன்னியாஸ்திரி. ஜப்பானியரான கேன் டனேகா கடந்த வருடம் தனது 119 ஆவது வயதில் காலமானதையடுத்து, கன்னியஸ்திரி லூசில் ரென்டன் உலகின் மிக வயதான மனிதரானார். அவர் உலகின் மிக வயதான மனிதர் என 2022 ஏப்ரலில் கின்னஸ் சாதனை நூல் வெளியீட்டாளர்கள் உத்தியோகபூர்வமாக அங்கீகரித்தனர்.
2021 ஆம் ஆண்டு கன்னியாஸ்திரி ரென்டன் தங்கியிருந்த மருத்துவமனையில் 81 பேருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டபோது, அவருக்கும் கொவிட்19 ஏற்பட்டது எனினும் அவர் உயிர்தப்பினார். வேலை செய்வதும் மற்றவர்களை கவனித்துக்கொள்வதும் தன்னை நீண்டகாலம் உயிர்வாழச் செய்தது என லூசில் ரென்டன் தெரிவித்திருந்தார். 'வேலை செய்வதே என்னை உயிருடன் வைத்திருந்தது. 108 வயதுவரை நான் வேலை செய்தேன்' என கடந்த வருடம் செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
Comments
Post a Comment