11 கோடி ரூபாவிற்கும் அதிகம் பெறுமதியான தங்கங்களுடன் விமான நிலையத்தில் பெண் ஒருவர் கைது.....

 11 கோடி ரூபாவிற்கும் அதிகம் பெறுமதியான தங்கங்களுடன் விமான நிலையத்தில் பெண் ஒருவர் கைது.....

சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு 11 கோடி 15 இலட்சத்து 50 ஆயிரம் பெறுமதியான தங்கத்தால் செய்யப்பட்ட கடன் அட்டைகள் உள்ளிட்ட பல்வேறு தங்க நகைகளுடன் பெண் ஒருவர் சனிக்கிழமை (14) அதிகாலை  கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க பிரிவின் அதிகாரிகள் குழுவொன்றினால்  கைது செய்யப்பட்டுள்ளதாக  சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சந்தேகநபர்   சென்னையில் இருந்து அதிகாலை  கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தாக  தெரிவித்த போதிலும் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது முதலில் துபாயில் இருந்து இந்தியாவின் சென்னைக்கு வந்து பின் அங்கிருந்து இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்போது  30 வயதுடைய  கம்பஹா பிரதேசத்தைச் சேர்ந்த  பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரின் பயணப் பையில் இருந்து  6 கிலோ 500 கிராம் எடையுள்ள 24 கரட் தங்கத்தால் செய்யப்பட்ட 27 கடனட்டைகள், கழுத்தணிகள், வளையல்கள் மற்றும் மோதிரங்கள் ஆகியவை மீட்கப்பட்டுள்ளன.

இவற்றின் மொத்த பெறுமதி  11 கோடியே 15  லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் என்று சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுதவிர பொதியிடப்பட்ட நிலையில் 200 கிராம் எடையுள்ள தங்க ஜெல் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டதுடன் அவற்றின் பெறுமதி  இதுவரை மதிப்பிடப்பட வில்லை.

சம்பவம் தொடர்பில் சுங்க திணைக்களத்தினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Comments