கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக அகிலா கனகசூரியம் (02.01.2023) கடமைகளை பொறுப்பேற்றார் ........
கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளராக அகிலா கனகசூரியம் அவர்கள் தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக (02.01.2023) அன்று பொறுப்பேற்றுக் கொண்டார். 02.01.2023 அன்றைய தினம் கிழக்கு மாகாண ஆளுநரிடம் தனது நியமனக் கடிதத்தினை பெற்றுக்கொண்டு கிழக்கு மாகாண கல்வி அலுவலகத்தில் முதலாவது கையொப்பத்தினை இட்டு தமது கடமைகளை சுபவேளையில் ஆரம்பித்தார்
இலங்கை அரச சேவையில் பல்வேறு பதவி நிலைகளில் கடமை புரிந்துள்ள இவர் ஆசிரியையாக, வலயக்கல்வி பணிப்பாளராக, மாகாண கல்வித் திணைக்கள பிரதி திட்டமிடல் பணிப்பாளராக கடந்த காலங்களில் பணியாற்றி தற்போது கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
தனது ஆசிரியர் சேவையினை தொடர்ந்து கல்வி நிர்வாக சேவையில் 1999ஆம் ஆண்டு தை மாதம் இணைந்து கொண்ட இவர் 24 வருடங்களாக கல்வி நிர்வாக சேவையில் சேவையாற்றி வருவதோடு கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தில் நீண்ட காலமாக திட்டமிடல் பணிப்பாளராக கடமையாற்றியுள்ளார்.
2016ம் ஆண்டு இலங்கை கல்வி நிருவாக சேவை தரம்-1 அதிகாரியாக நியமிக்கப்பட்ட இவர் தான் வலயக்கல்வி அதிகாரியாக கடமையாற்றிய வலயங்களின் கல்வித்துறை வளர்ச்சியில் பெரும் பங்காற்றியுள்ளார். குறிப்பாக கிழக்குமாகாண கல்வி வலயங்களில் சவால் மிக்க கல்வி வலயமாக காணப்பட்ட மூதூர் கல்வி வலயம், மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய முன்னேற்றத்திற்காக அரும் பாடு பட்டு அதில் வெற்றியும் கண்டுள்ளமை கடந்தகால பரீட்சை பெறுபேறுகள் எடுத்துக்காட்டுகின்றன.
இன்றைய பதவி ஏற்பு நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திஸாநாயக்க அவர்கள் கலந்து கொண்டதுடன் கிழக்குமாகாண நிர்வாக அதிகாரிகளும் கல்வி நிர்வாக அதிகாரிகளும் மாகாண கல்வித்துறை சார்ந்த பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment