கலைந்த கனவும், அரபு வசந்தமும் - ஒரு பார்வை........

 கலைந்த கனவும், அரபு வசந்தமும் - ஒரு பார்வை........



கிறிஸ்டியானா ரொனால்டோவா அல்லது லயனல் மெஸ்ஸியா என்பது கால்பந்து ரசிகர்களுக்கிடையே பலகாலமாக விவாதத்தில் இருக்கும் ஒரு கேள்வி. இருவருமே உலகின் தலை சிறந்த வீரர்கள் தான் என்று தென்னை மரத்துக்கு ஒரு குத்து, ஏணிக்கு ஒரு குத்து குத்தும் என்னைப் போன்ற கால்பந்து ரசிகர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள். கிறிஸ்டியானா ரொனால்டோவிடம் ஒரு பேட்டியில் 'உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் நீங்களும் லயனல் மெஸ்ஸியின் அர்ஜெண்டைனாவும் இறுதி ஆட்டத்தில் ஆடுகிறீர்கள். இரண்டு அணிகளும் 2 -2 என்கிற சமநிலையில் இருக்கிறீர்கள். ஆட்டத்தின் கடைசி நொடியில் நீங்கள் ஒரு கோல் போட்டு உலகக் கோப்பையைக் கைப்பற்றுகிறீர்கள். அது உங்களுக்கு எப்படி இருக்கும்?' என்று கேள்வி கேட்கப்படுகிறது.

ரொனால்டோ சிறிது நேரம் கற்பனையில் ஆழ்கிறார். பிறகு 'ஓ... அது அற்புதமாக இருக்கும். எனக்கு அதற்கு மேல் என் வாழ்க்கையில் எதுவுமே தேவையில்லை, நான் அந்த நொடியே என் கால்பந்து விளையாட்டிலிருந்து விடைபெற்றுக்கொள்வேன்' என்று சொன்னார். எனக்கே கூட உலகக் கோப்பையின் இறுதி ஆட்டத்தில் இந்த இருவருடைய அணிகளும் மோதினால் எப்படி இருக்குமென்று ஒரு கனவு இருந்தது.

என் ஆங்கில ஆசிரியர் சொன்னது போலத்தான். அந்தக் கனவு கனவாகவே போய்விட்டது. எனவே கனவிலிருந்து வெளியே வருவோம். ஏனெனில்  மொரோக்கோவுடனான காலிறுதிப் போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் போர்ச்சுகல் அணி தோல்வியுற்று போட்டியிலிருந்து வெளியேறிவிட்டது. 37 வயதான CR7க்கோ இதுவே இறுதியான உலகக்கோப்பை போட்டியாக இருக்கக்கூடும்.

சுவிட்சர்லாந்துக்கு எதிரான கடந்த போட்டியைப் போலவே இந்த முறையும் ரொனால்டோ ஆட்டத் துவக்கத்தின் போது பெஞ்சில் அமர வைக்கப்பட்டு கடந்த போட்டியில் கதாநாயகன் கன்ஸலோ ரமோஸ் களமிறங்கினார். ஆட்டத்தை போர்ச்சுகலின் புரூனோ ஃபெர்னாண்டஸ் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார். அவரே மொரோக்கோவுடனான ஆட்டத்தின் மையமாக இருந்தார். எதிரணியில் மொராக்கோ வழக்கம் போல 5 பேர் கொண்ட சிவப்பு தடுப்புச் சுவரை இந்த ஆட்டத்திலும் எழுப்பியிருந்தது. அதற்கும் பின்னால் கோல்கீப்பர் யாஸினி அதே சிரித்த முகத்துடன் காத்திருந்தார்.

போர்ச்சுகல் அணியினர் மொராக்கோவின் இந்த சுவரை ஊடுறுவ ஆட்டத்தின் திசையைத் தொடர்ந்து மைதானத்தின் இரு ஓரங்களுக்கும் மாற்றிக்கொண்டே இருந்தார்கள். அது பலனளிக்கவும் செய்தது தான். புரூனோ ஃபெர்னாண்டஸ், ஃபெலிக்ஸ் ஆகியோர் தொடர்ந்து மொராக்கோ கோல் போஸ்ட்டை நோக்கி பந்துகளை அனுப்பிக்கொண்டே இருந்தார்கள். அவற்றில் சில கோல்போஸ்டின் கம்பங்களை உரசியபடி சென்றன. மற்றவற்றை யாஸினி கோல் போஸ்டுக்கு வெளியே வழியனுப்பி வைத்தார். மொராக்கோவுக்கான போட்டியில் போர்ச்சுகலுக்கான நா ளாகவே இல்லை என்று மட்டுமே நம்மால் சொல்ல முடியும். முதல் போட்டியில் ஹாட்ரிக் கோலடித்த கன்ஸலோ ரமோஸுக்கும் இந்தப் போட்டியில் சரியான வாய்ப்புகள் அமையவில்லை. தொடர்ந்து போர்ச்சுகலின் கோலடிக்கும் முயற்சியகள் தோல்வியடைந்து கொண்டிருக்க, கிடைத்த வெகு சில வாய்ப்புகளில் அதிரடி காட்டியது மொராக்கோ. 

ஆட்டதின் 42 வது நிமிடத்தில் மொராக்கோவின் நெஸைரி உயரத் தவ்வி தலையால் முட்டி கோலடித்தார்.  அது ரொனால்டோவின் சிக்னேச்சர் ஷாட்களில் ஒன்றின் பிரதி போலவே இருந்தது. ஆனால் ரொனால்டோவோ பெஞ்ச்சில் அமர்ந்து அதைப் பார்த்து நொந்து கொண்டிருந்தார். இடைவேளையின் போது 1 – 0 என்ற கணக்கில் மொராக்கோ முன்னிலை பெற்றது.

ஆட்டத்தின் ஐம்பதாவது நிமிடத்திலேயே ரொனால்டோ களமிறக்கப்பட்டார். விரைவிலேயே விங்கரான ரஃபேல் லெயோவும் உள்ளே வந்தார். ஒரு கோலாவது போட்டு ஆட்டத்தைச் சமன் செய்துவிட வேண்டும் என்கிற போர்ச்சுகலின் எண்ணம் தொடர்ந்து சப்ஸ்டிடியூட்களை ஸ்ட்ரைக்கர்களாக அவர்கள் களமிறக்கியதிலேயே தெரிந்தது. ஆட்டத்தின் 82 வது நிமிடத்தில் ஃபெலிக்ஸ்இ 90 வது நிமிடத்தில் ஒற்றை ஆளாக ரொனால்டோ என இருவர் அடித்த பந்துகளையும் மொராக்கோ கோல்கீப்பர் யாஸினி அபாரமாகத் தடுத்து நிறுத்தினார்.

ஆட்ட நேரம் முடிந்து வழங்கப்பட்ட 10 நிமிட இஞ்சுரி டைமில் மொராக்கோ வீரர் வலித் செடிரா இரண்டாவது மஞ்சளட்டை வாங்கி வெளியேற, மொராக்கோ 10 பேர் கொண்ட அணியானது. அந்த நேரத்தில் கிடைத்த ஒரு ஃபிரீ கிக்கை ரொனால்டோ அடிப்பார் என எதிர்பார்க்க அவரோ புரூனா ஃபெர்னாண்டஸைக் கை காட்டினார். ஒரு வேளை பெஞ்சில் அமர வைத்த கோபமோ என்னவோ. புரூனோ அதை வீணாக்கினார். கடைசி நொடியில் பெபே தலையால் முட்டி கோலடிக்கும் வாய்ப்பும் வீணாக, மொராக்கோ அரை இறுதிக்குள் நுழைந்தது. மொராக்கோவின் ஆட்ட முறையின் மீதும் சில விமர்சனங்கள் கால்பந்து ஆர்வலர்களால் முன்வைக்கப்படுகின்றன. ஒரு படத்தில் சீட்டு விளையாடும்போது 'பத்தும் ஜோக்கரா வந்தா என்னப்பா செய்யறது?' என்று ஒரு நகைச்சுவை வசனம் வரும். அது போல 'களத்திலிருக்கும் 10 ஆட்டக்காரர்களும் தடுப்பாட்டமே ஆடினால் நன்றாகவா இருக்கும்?' என்ற கேள்வி அதிலொன்று. அதில் உண்மை இல்லாமலுமில்லை.

இரண்டாவது, கடந்த எட்டு போட்டிகளில், இந்த உலகக்கோப்பை போட்டிகளில் ஐந்து போட்டிகளில் எந்த அணியாலும் உடைக்க முடியாதபடிக்கு மொராக்கோவின் பின்கள வீரர்களும், கோல்கீப்பர் யாஸினியும் அமைத்திருக்கும் தடுப்புச்சுவர். அந்தச் தடுப்புச் சுவரை ஏற்கனவே பெல்ஜியம், கனடா, ஸ்பெயின், போர்ச்சுகல் என்று பலரைத் தடுத்து நிறுத்தியிருக்கிறது. 'இந்த சுவரு இன்னும் எத்தனை பேரைக் காவு வாங்குமோ?' என்கிற கேள்வியும் எழாமலில்லை.

அதே நேரம், இத்தனை வருட உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் அரை இறுதிக்குள் நுழையும் முதல் ஆப்பிரிக்க/அரபு அணியாக மொராக்கோ சரித்திரத்தில் தனது பெயரைப் பொறித்து, இத்தனை வருட கால ஐரோப்பிய, தென்னமெரிக்க அணிகளின் ஆதிக்கத்தை கேள்விக்கு உள்ளாக்கியிருக்கிறது. ஒரு விதத்தில் கால்பந்து விளையாட்டின் ரசிகனாக நான் மொராக்கோவின் இந்த எழுச்சியை ரசிக்கவே செய்கிறேன்.

மொராக்கோவின் முக்கியமான தடுப்பாட்டக்காரர்களில் நால்வர் காயம்பெற்று, ஒருவர் சிவப்பு அட்டை வாங்கியிருக்கும் நிலையில், அரை இறுதியில் மொராக்கோவின் தடுப்பாட்டம் எந்த அளவுக்கு வலிமையாக இருக்கும் என்பதுதான் இப்போது மில்லியன் டாலர் கேள்வி.



Comments