கின்னஸ் சாதனை புரிந்த பரதநாட்டிய கலைஞர்களுக்கு மட்டக்களப்பில் கௌரவம்.....

 கின்னஸ் சாதனை புரிந்த பரதநாட்டிய கலைஞர்களுக்கு மட்டக்களப்பில் கௌரவம்.....

பரதநாட்டியத்தில் கின்னஸ் சாதனை படைத்த மட்டக்களப்பைச் சேர்ந்த பரதநாட்டிய கலைஞர்களுக்கு விழித்தெழு பெண்ணே அமைப்பினால் கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.
விழித்தெழு பெண்ணே அமைப்பின் பணிப்பாளர் சசிகலா நரேந்திரன் தலைமையில் மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ மண்டபத்தில் நேற்று (11) திகதி இடம்பெற்ற நிகழ்விற்கு கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் புளோரன்சா பாரதி கென்னடி பிரதம விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்துள்ளார்.
உலகநாடுகளில் சிதறிக்கிடக்கும் பரதநாட்டியம் பயிலும் மாணவிகளுக்கிடையிலான ஆற்றல் மற்றும் திறமையினை வெளிக்கொணரும் விதமாக "தமிழ் அன்னை வர்ணம்" எனும் தொனிப்பொருளில் சர்வதேச மட்டத்தில் நிகழ்நிலையூடாக நடனம் அரங்கேற்றம் நடத்தப்பட்டதுடன், இந் நிகழ்வில் மட்டக்களப்பில் இருந்து பங்குபற்றி சாதனைபடைத்த 40 நடனக்கலைஞர்கள் கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.
கலை மாமணி மதுரை ஆர்.முரளிதரன் அவர்களின் நெறியாக்கத்தில் 850 நடன கலைஞர்கள் நிகழ்நிலையூடாக பங்கேற்றியிருந்த இந் நிகழ்வில் நாற்பது நடுவர்கள் நடுவனம் புரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழ் அன்னையைப் போற்றிய பாடலுக்கு பரதநாட்டிய நடனக் கலைஞர்கள் நடன அரங்கேற்றத்தினை நிகழ்த்தி தமிழ் மொழிக்கு மரியாதை செலுத்தி சர்வதேச மட்டத்தில் தமது திறமையை வெளிக்காட்டி மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் எமது நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
குறித்த கௌரவிப்பு நிகழ்வின்போது நிருத்திய கலாலய ஆசிரியர் வசந்தி நேரு, பாரதகலாலயா ஆசிரியர் சுபித்ரா கிருபாகரன், அக்ஷயஷேத்ரா ஆசிரியர் நித்யா விக்னேஸ்வரன், கலாசாதனாலயா அமைப்பின் ஆசிரியர் வாசுகி பார்த்தீபன் உள்ளிட்ட இவர்களது மாணவிகள் 40 பேரும் இதன்போது பாராட்ட கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
இதன்போது விழித்தெழு பெண்ணே அமைப்பின் பணிப்பாளர் சசிகலா நரேந்திரன் அவர்களின் சிறந்த சேவையினை பாராட்டி கௌரவிக்கப்பட்டதுடன், வர்ணம் (உலக சாதனை) நடனம் அரங்கேற்றப்பட்டுள்ளது.
இந் நிகழ்வில் நடன ஆசிரியர்கள், நடன கலைஞர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.











Comments