புதிய மாவட்ட செயலகக் கட்டடத் தொகுதிற்குச் செல்வதற்கான இலகு பாதை அமைப்பது தொடர்பான கலந்துரையாடல்!

 புதிய மாவட்ட செயலகக் கட்டடத் தொகுதிற்குச் செல்வதற்கான இலகு பாதை அமைப்பது தொடர்பான கலந்துரையாடல்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் மாவட்ட செயலகத்திற்கான புதிய கட்டடத் தொகுதி மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவின் திராய்மடு பிரதேசத்தில் அமைக்கப்பட்டு வருகிறது.
இதற்கான இலகு பாதை அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட செயலாளர் கணபதிப்பிள்ளை கருணாகரன் ஏற்பாட்டில் கிராமிய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இப்புதிய கட்டடத் தொகுதி மட்டக்களப்பு நகர் மற்றும் மாவட்ட செயலகம் தற்போது இயங்கிவரும் மட்டக்களப்பு கோட்டைப் பகுயிலிருந்து வடக்காக சுமார் 10கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது.
இதனால் மட்டக்களப்பு மாவட்டத்தின் வடக்காக அமைந்துள்ள வாழைச்சேனை, தெற்கில் காணப்படும் களுவாஞ்சிக்குடி மற்றும் மண்முனை மேற்கிலுள்ள வவுணதீவு போன்ற தூரப் பிரதேசங்களிலிருந்து சேவை நாடி வருகைதரும் மக்களின் எண்ணிக்கை எதிர்காலத்தில் அதிகமாக இருக்கும் என்பதனால், இலகு மற்றும் குறுந்தூர வீதிகளை அமைத்தல், அகலப்படுத்துதல் மற்றும் பாரிய, கனரக வாகனங்கள் செல்வதற்கு ஏற்ற தரத்தில் வீதியினை மேம்படுத்துதல் போன்ற விடயங்கள் தொடர்பாக இதன்போது ஆராயப்பட்டது.
அத்துடன் தூர பிரதேசங்களிலிருந்து கடமைக்காக வருகை தரும் உத்தியோகத்தர்களுக்கும் குறுகிய நேரத்தில் புதிய மாவட்ட செயலகத்திற்கு சமுகமளிப்பதற்கும், புதிய வீதிகளை அமைப்பதற்கான சாத்தியவள கூறுகள் தொடர்பாக உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டது.
இந் நிகழ்வில் கிழக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் உதவிப் பணிப்பாளர் யு.யுவநாதன், மாவட்டத்தின் பிரதேச செயலாளர்கள், மாநகரசபையின் பிரதி ஆணையாளர், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் உத்தியோகத்தர்கள், வீதி அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள், இலங்கை போக்குவரத்துக்கு சபை அதிகாரிகள், நகர அபிவிருத்தி அதிகார சபையின் அலுவலர்கள் எனப் பல உயரதிகாரிகளும் கலந்து கொண்டு தமது ஆலோசனைகளை முன்வைத்தனர்.



Comments