தெய்வேந்திரா சேர் ஒரு அமைதியின் பேழை......
1982ம் ஆண்டு காலகட்டத்தில் தெய்வேந்திரா மாஸ்டர் என்றால் எமக்கு இரண்டு பேர் தான் எம் கண்களின் முன் நின்றாடும் ஒன்று கணிதம் படிப்பிற்கும் தெய்வேந்திரா மாஸ்டர் மற்றுமொருவர் விஞ்ஞானம் படிப்பிற்கும் தெய்வேந்திரா சேர் தான். இந்த இரு இமையங்களில் இருந்து இன்று நாம் விஞ்ஞான பாடம் கற்பித்த பொன் தெய்வேந்திரா சேர் அவர்களை இழந்து நிற்கின்றோம்.
எனக்கு நன்றாக ஞாபகம் இருககின்றது நான் 8ம் வகுப்பு அரசடி மகா வித்தியாலத்தில் (தற்போது மஹாஜனா கல்லூரி) கல்வி கற்ற போது, புதிதாக ஒரு விஞ்ஞான பாடம் கற்பிப்பதற்காக ஒரு ஆசிரியர் வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. வந்து விட்டார் என்றார்கள் நாங்கள் பார்ப்போம் என் சென்று பார்த்தோம் ஒரு மெலிதான உடல்வாகு, அந்தக்கால டவுசர், ஒரு முழு நீள சேட் அணிந்து, தோலில் அந்தக்கால நீள நீண்ட பையுடன் அறிமுகம் ஆனார். மிகவும் சாதுவாக உரையாடுபவராக இருந்தார் அப்போது இவருடன் இணைந்து அன்மையில் இறைபதம் இடைந்த ரவீந்திரன் சேர், பீலிக்ஸ் மாஸ்டர் போன்றோரும் அரசடி பாடசாலையில் இணைந்தனர்.
மாணவர்களான எம்முடன் இணைந்த இவர்கள் கல்வியை மாத்திரமல்ல விளையாட்டு, கலை நிகழ்வுகள் என பல்வேறு நிகழ்வுகளில் மாணவர்களோடு மாணவர்களாக செயற்பட்டனர். ஆரம்பத்தில் எங்களுக்கு சண்முகநாதன் ஆசிரியரியை தான் விஞ்ஞான பாடம் கற்பித்து வந்தார். பின்னர் தெய்வேந்திரா சேர் வந்தவுடன் 9ம் தரம் தொடக்கம் O/L வரை அவரே எமக்கு விஞ்ஞான பாடம் கற்பித்தார். திருமலை வீதியில் தன் தாயரின் வீட்டில் விஞ்ஞான பாடம் ரியூசன் கொடுத்து விஞ்ஞான பாடம் கற்பித்தார். அப்போது நான் கேட்டேன் சேர் நாங்களும் உங்கட வீட்ட விஞ்ஞானம் படிக்க வரவா என்று, அவர் சொன்னார் என்னட்ட தானேடா பள்ளியில படிக்கிறீங்க அங்கையும் வந்து ஏன்டா, வேறு எங்கயாவது போங்கடா என்றார் அவரின் மனநிலையை பாருங்க எப்படி நல்லவர் என்று. அன்று அரசடியில் கல்வி கற்ற பலர் இன்று நல்நிலையில் இருப்பதற்கு இவரும் ஒரு காரணம் எனலாம். நான் அறிந்த மட்டில் கோபம் வராத ஓர் ஆசிரியர், அமைதியான சுபாவம் கொண்ட ஓர் ஆசிரியர், நேர்த்தியான நடை கொண்ட ஓர் ஆசிரியர், அடக்கமான ஓர் சிரிப்பு கொண்ட ஓர் ஆசிரியர், எல்லோருடனும் மரியாதையுடன் பழகிய ஓர் ஆசான் தான் தெய்வேந்திரா சேர் அவர்கள்.
வாழ்க்கை: அக்காலத்தில் மட்டக்களப்பில் மிகவும் பிரசித்தி பெற்ற சித்த வைத்தியர்களான பொன்னுத்தரை மற்றும் ஈஸ்வரவடிவு ஆகியோருக்கு கடை குட்டியாக 1954.11.08ம் திகதி பிறந்தார். மட்டக்களப்பு கோட்டைமுனை மகா வித்தியாலத்தில் (தற்போது இந்துக்கல்லூரி) தன் கல்வி கற்ற போது, கல்வியில் மாத்திரமின்றி விளையாட்டில் கூட தம்மை ஒரு சிறந்த வீரரராக வெளிப்படுத்தி இருந்தார். இருந்த போதிலும் விஞ்ஞான பாடத்தில் அதிதி விருப்பங்கொண்ட இவர் ஆசிரியர் தொழில் கிடைப்பதற்க முன்னர் லபுக்கனையில் ஒரு பாமசியில் பணியாற்றிய வரலாறும் உண்டு.
இதன் பினனர் தன்னை ஒரு முழுநேர ஆசிரியராக நிலை நிறுத்திக் கொண்டார். மட்டக்களப்பு கருவப்பங்கேணி பாடசாலையில் தன் முதல் நியமனத்தை பெற்றுக் கொண்ட இவர், பின்னர் மட்டக்களப்பு அரசடி மகாவித்தியாலத்தில் நீண்ட காலமாக ஓர் விஞ்ஞான ஆசிரியராக கற்றல் நடவடிக்கையில் ஈடுபட்டார். இதன் பின்னர் மட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரியில் ஆசிரியராகவும், பின்னர், பிரதி அதிபராகவும் கடமையாற்றி கொண்டிருந்த போது, தான் கல்வி கற்ற பாடசாலையான கோட்டைமுனை மகா வித்தியாலத்திற்கு (இந்து கல்லூரிக்கு) இவரின் ஆசான்களில் ஒருவரான சௌந்தரராஜன் சேர் அவர்கள் அதிபர் நிலையில் இருந்து ஓய்வுபெறும் நிலை வந்ததால் இப்பாடசாலைக்கு அதிபராக பொறுப்பேற்று கொள்ளும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. எனவே அதிபராக கடமையேற்று தன் ஓய்வுநிலை வரும் வரை கடமையாற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
மட்டக்களப்பின் பிரபல ஆசிரியையான நிரஞ்சலாவை என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு தனஞ்சயன், கிருத்திகா என இரு பிள்ளைகள் உள்ளனர். அன்னாரின் நல்லடக்கம் 16.12.2022 அன்று மாலை 3.00 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளன. அன்னாரின் ஆத்மா சாந்தியடைய நாமும் பிரார்த்திப்போம்.இறுதி காலம் வரை தன் கையோப்பத்தை தமிழிலேயே ஒப்பமிட்ட ஓர் உன்னதமானவர் இவர் எனக்கு ஆசானான கிடைத்ததை பெருமையடைகின்றேன்.
என்றும் உங்கள் மாணவன்
பா.ஜெயதாசன்.
Comments
Post a Comment