இம்மாத இறுதியில் சுமார் 25000 அரச ஊழியர்கள் ஓய்வு!
இம்மாத இறுதியில் 60 வயதில் ஓய்வுபெறும் தீர்மானத்துடன், முழு அரச சேவையிலிருந்தும் சுமார் இருபத்தைந்தாயிரம் பேர் ஓய்வுபெற உள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்ன இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் முழு அரச சேவையிலும் சுமார் 15 இலட்சம் பேர் உள்ளதுடன், இருபத்தைந்தாயிரம் பேர் ஓய்வு பெறுவதனால் அரச சேவை வீழ்ச்சியடையாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பொதுப்பணித்துறையில் உள்ள பெரும்பாலான உயர் அதிகாரிகள், 60வது பிறந்த நாளை முன்னிட்டு, வரும், 31ம் திகதி ஓய்வு பெறுவார்கள் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், ஓய்வுபெறும் உத்தியோகத்தருக்கு மாற்றீடாக ஒருவர் இல்லாத சந்தர்ப்பங்களில் அரச சேவை ஆணைக்குழுவின் அனுமதியைப் பெற்று மேலும் ஒரு வருடத்திற்கு 60 வயதுக்கு மேற்பட்ட அதிகாரியைத் தக்கவைத்துக் கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளார்
அரச சேவையை 65 வருடங்களாக நீடிப்பதாக முன்னர் எடுக்கப்பட்ட தீர்மானம் தொழில்நுட்ப அறிவுடன் கூடிய உயர் பதவிகளுக்கு இளைய அதிகாரிகள் செல்வதற்கு இடையூறாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே ஆசிரியர் பணியில் உள்ள சுமார் 2000 பேர் 60 வயதில் ஓய்வு பெற உள்ள நிலையில், அதற்கு தகுதியானவர்களை நிரப்ப கல்வித்துறை அதிகாரிகளிடம் முறையான திட்டங்கள் இல்லை எனவும் இலங்கை ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த வெற்றிடங்களுக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்கப்படுபவர்களே நியமிக்கப்படுவதாகவும், சில சமயம் பல்கலைக்கழக பட்டதாரிகளை சேர்த்துக்கொள்வதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் எதிர்காலத்தைப் பொறுப்பேற்கப்போகும் குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுப்பவர்கள் ஆசிரியர்கள் என்றும், அவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியர்கள் ஓய்வு பெற்ற பின்னர், பாடசாலைகளை தேர்வு செய்து, தேவையான ஆசிரியர்களை உடனடியாக தேர்வு செய்ய வேண்டும் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி விசேட வைத்திய நிபுணர்கள் உட்பட 200 வைத்தியர்கள் ஓய்வு பெறவுள்ளமையினால் சுகாதார சேவையில் பாரிய பாதிப்புகள் ஏற்படக்கூடும் என அகில இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஜெயந்த பண்டார தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment