அகில இலங்கை பெட்மின்டன் வெற்றிக் கிண்ண திறந்த போட்டி 2022.........

 அகில இலங்கை பெட்மின்டன் வெற்றிக் கிண்ண திறந்த போட்டி 2022.........



இலங்கை பெட்மின்டன் சங்கத்தின் அனுசரணையில், கிழக்கு மாகாண பெட்மின்டன் சங்கத்தினால், அகில இலங்கை பெட்மின்டன் வெற்றிக் கிண்ண திறந்த போட்டி இன்று(14) முதல் எதிர்வரும் 18ஆம் திகதி வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன் ஆரம்ப வைபவம் இன்று(14) மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் கிழக்கு மாகாண பெட்மின்டன் சங்கத்தின் தலைவர் எம். எச். எம் மன்சூர் தலைமையில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் தடவையாக இப்போட்டி நடாத்தப்படுகின்றது. இதனால் இப்பகுதி வீரர்கள் மேலும் தமது திறமைகளை வெளிப்படுத்துவதற்கு சந்தர்ப்பங்களைப் பெறுகின்றனர். அத்துடன் இந்நிகழ்வில் நாட்டின் பல மாவட்டங்களைச் சேர்ந்த, பெட்மின்டன் வீர வீராங்கனைகள் பங்குபற்றித் தமது திறமைகளைப் பரீட்சிக்கவுள்ளனர்.
இவ்வாரம்ப விழாவிற்கு மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவிகளின் பேண்ட் வாத்திய இசையுடன் அதிதிகள் வரவேற்கப்பட்டனர். பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் திரு. ரி. சரவணபவன் மற்றும் கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் என். எம். நௌபீஸ் அவர்களும் பங்குபற்றினர்.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் காணிப் பிரிவின் மேலதிக அரசாங்க அதிபர் நவரூபரஞ்சினி முகுந்தன் விசேட அதிதியாகக் கலந்துகொண்டார். இவ்வைபவத்திற்கு விசேட விருந்தினர்களாக மட்டக்களப்பு மாவட்ட செயலக மாவட்ட விளையாட்டு அதிகாரி வி.ஈஸ்பரன், மட்டக்களப்பு வலயக் உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.லவகுமார், இலங்கை பெட்மின்டன் சங்கத்தின் தொழில்நுட்பக் குழு அங்கத்தவர் சஞ்சீவ விஜேசேகர மற்றும் உதவிச் செயலாளர் அலியார் பைசல், இன்னும் அரச மற்றும் தனியார் உத்தியோகத்தர்கள் பங்கேற்று சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.




Comments