வியாஸ்காந்த் ஆட்டநாயகன் : 2 தடவைகள் சம்பியனான ஜெவ்னா கிங்ஸ் 3 ஆவது தடவையாக இறுதிப் போட்டியில்.....

வியாஸ்காந்த் ஆட்டநாயகன் : 2 தடவைகள் சம்பியனான ஜெவ்னா கிங்ஸ் 3 ஆவது தடவையாக இறுதிப் போட்டியில்.....


 ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் நடத்தப்பட்டு வரும் 3 ஆவது லங்கா பிறீமியர் லீக் இருபது 20 கிரிக்கெட் அத்தியாயத்தின் இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கு ஜெவ்னா கிங்ஸ் முதலாவது அணியாக தகுதிபெற்றது.

முதல் இரண்டு LPL அத்தியாயங்களில் சம்பியனான ஜெவ்னா கிங்ஸ் 3ஆவது தடவையாக தொடர்ச்சியாக  இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது.

கொழும்பு ஆர்.பிரேமதாச விளையாட்டரங்கில்  (21) நடைபெற்ற முதலாவது தகுதிகாண் போட்டியில் கண்டி பெல்கன்ஸை எதிர்த்தாடிய ஜெவ்னா கிங்ஸ், டக்வேர்த் லூயிஸ் முறைமை பிரகாரம் 24 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

யாழ். மைந்தன் விஜயகாந்த் வியாஸ்காந்த், தெற்கு வீரர் மஹீஷ் தீக்ஷன ஆகிய இருவரும் துல்லியமாக பந்துவீசி கண்டி பெல்கன்ஸுக்கு நெருக்கடியைக் கொடுத்து தமது அணிக்கு இலகுவான வெற்றி கிடைக்க வழிவகுத்தனர். இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த கண்டி பெல்கன்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 143 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் பெத்தும் நிஸ்ஸன்க (35), கமிந்து மெண்டிஸ் (26), நஜிபுல்லா ஸத்ரான் (22), சாமிக்க கருணாரட்ன (14ஆ.இ.) ஆகியோர் தங்களாலான அதிகப்பட்ச பங்களிப்பை வழங்கினர். ஜெவ்னா கிங்ஸ் பந்துவீச்சில் விஜயகாந்த் வியாஸ்காந்த் 4 ஓவர்களில் 30 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றி தனது விக்கெட் எண்ணிக்கையை 13ஆக உயர்த்திக்கொண்டார். மஹீஷ் தீக்ஷனவும் திறமையாகப் பந்துவீசி 4 ஒவர்களில் 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

144 ஓட்டங்களை வெற்றி இலகக்காகக் கொண்ட பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஜெவ்னா கிங்ஸ், ஆட்டம் மழையினால் தடைப்படலாம் என்பதை அறிந்து அதிரடி வேகத்தில் ஓட்டங்களைக் குவித்த வண்ணம் இருந்தது. ஜெவ்னா கிங்ஸ் 5.1 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 63 ஓட்டங்களைக் குவித்திருந்தபோது மழை பெய்ததால் ஆட்டம் தடைப்பட்டது. அப்போது டக்வேர்த் லூயிஸ் முறைமைப் பிரகாரம் 47 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருக்க வெண்டிய ஜெவ்னா கிங்ஸ் 16 ஓட்டங்களால் முன்னிலையில் இருந்தது. மழை விட்டதும் மீண்டும் ஆட்டம் தொடர்ந்த போது இரண்டாவது தடவையாகவும் மழை குறுக்கிட்டு ஆட்டம் தடைப்பட்டது.

அப்போது ஜெவ்னா கிங்ஸ் 11 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 98  ஓட்டங்களைப்  பெற்றிருந்தது. ஆனால், டக்வேர்த் லூயிஸ் முறைமைப்படி ஜெவ்னா கிங்ஸுக்கு 11 ஓவர்களில் 75 ஒட்டங்களே  வெற்றி இலக்காக தேவைப்பட்டிருந்தது. இதற்கு அமைய ஜெவ்னா கிங்ஸ் 24 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

துடுப்பாட்டத்தில் அவிஷ்க பெர்னாண்டோ 21 ஓட்டங்களையும் துனித்வெல்லாலகே ஆட்டமிழக்காமல் 19 ஓட்டங்களையும் அதிகப்பட்சமாக பெற்றனர். வைட்களாக 19 உதிரிகள் கிடைத்தன.வியாஸ்காந்த் ஆட்டநாயகனாகத் தெரிவானார்.

Comments