டிச 14 நள்ளிரவு முதல் பிரத்தியேக வகுப்புகள், கருத்தரங்குகள், செயலமர்வுகளை நடத்துவதற்கு தடை....

டிச 14 நள்ளிரவு முதல் பிரத்தியேக வகுப்புகள், கருத்தரங்குகள், செயலமர்வுகளை நடத்துவதற்கு தடை....

எதிர்வரும் டிசம்பர் 14 நள்ளிரவு முதல் தரம் 5 புலமைப்பரிசில் தொடர்பான பிரத்தியேக வகுப்புகள், கருத்தரங்குகள், செயலமர்வுகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்படுவதாக, பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை டிசம்பர் 18 நடைபெறவுள்ளதனால், வழமை போன்று குறித்த பரீட்சை நிறைவடையும் வரை இத்தடை அமுலில் இருக்குமென திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

டெங்கு நோய் பரவலை கட்டுப்படுத்த விசேட திட்டம்:

இதேவேளை, குறித்த பரீட்சைகள் இடம்பெறும் பாடசாலைகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைக்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

அதற்கமைய, பரீட்சை நடைபெறும்‌ காலப்பகுதியில்‌ பரீட்சை நிலையங்களாக அமைக்கப்பட்டிருக்கும் பாடசாலைகளில் டெங்கு ஒழிப்பு புகை அடிப்பதற்கான பணிகளை மேற்கொள்வதற்காக இதுவரையில்‌ உரிய அதிகாரிகளுக்கு அறிவித்தல்‌ வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, கல்வி அமைச்சின்‌ வழிகாட்டலின்‌ கீழ்‌ மாகாண சுகாதார சேவைப்‌ பணிப்பாளர்களையும்‌, மாவட்ட சுகாதார சேவைப்‌ பணிப்பாளர்களையும்‌ தொடர்பு கொண்டு மாகாண கல்விப்‌ பணிப்பாளர்கள்‌, வலயக்‌ கல்விப்‌ பணிப்பாளர்கள்‌, உரிய பாடசாலை அதிபர்கள்‌ ஆகியோர்‌ ஊடாக டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை செயற்படுத்துமாறு, பரீட்சைகள் ஆணையாளர் எல்.எம்.டி. தர்மசேன அறிவுறுத்தியுள்ளார்.

அந்த வகையில், 2015 ஓகஸ்ட் 12ஆம் திகதி 1927/49 எனும் அதி விசேட வர்த்தமானி அறிவித்தலுக்கமைய/ 1968ஆம் ஆண்டின் 25ஆம் இலக்க திருத்தப்பட்ட பகிரங்க பரீட்சைகள் சட்டத்தின் 22ஆம் பிரிவிற்கமைய, தரம் 05 - புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான குறித்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தடைவிதிக்கப்படும் குறித்த காலப்பகுதியில்,

1.பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான பிரத்தியேக வகுப்புகளை நடாத்துதல், ஒழுங்குபடுத்தல்.

2.பாடங்கள் தொடர்பான விரிவுரைகள், கருத்தரங்குகள், செயலமர்வுகளை நடாத்துதல்.

3.குறித்த பரீட்சைகள் தொடர்பான மாதிரி வினாப்பத்திரங்களை அச்சிடுதல், விநியோகித்தல்

4.குறித்த பரீட்சைகள் தொடர்பான அனுமான வினாக்களை வழங்குவதாகவோ, அது போன்ற மாதிரி வினாக்களை வழங்குவதாகவோ சுவரொட்டிகள், துண்டுப்பிரசுரங்கள், பதாகைகள் போன்றவற்றை நேரடியாக அல்லது இலத்திரனியல் ஊடகங்கள், அச்சு ஊடகங்கள் ஊடாக வெளியிடுதல், அவ்வாறானவற்றை வைத்திருத்தல் ஆகியன குற்றங்களாகும்.

Comments