மட்டக்களப்பு மாநகர சபையின் பாதீடு 08 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!!
மட்டக்களப்பு மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டிற்கான பாதீடு 08 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாநகரசபையின் 68 வது சபை அமர்வும் 11 வது விசேட பொதுக் கூட்டமும் மாநகர முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் இடம்பெற்றது.
முதல்வரின் சம்பிரதாய பூர்வமான வருகையினைத் தொடர்ந்து மாநகர கீதம் இசைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டதனைத் தொடர்ந்து, சபை அமர்வானது மாநகர முதல்வர் தியாகராஜா சரவணனின் உரையுடன் ஆரம்பமாகியிருந்தது.
இதன் போது முதல்வரின் உரையினை தொடர்ந்து, கடந்தகால மற்றும் எதிர்கால அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பாக பிரதி முதல்வர் க.சத்தியசீலனின் உள்ளிட்ட உறுப்பினர்களினால் உரைகள் நிகழ்த்தப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து பாதீடு தொடர்பான பகிரங்க வாக்கெடுப்பு இடம்பெற்றிருந்தது. இதில் பாதீட்டிற்கு ஆதரவாக 21 வாக்குகளும், எதிராக 13 வாக்குகளும், நடுநிலையாக 2 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன், மாநகர சபையின் 38 உறுப்பினர்களுள் ஒரு உறுப்பினர் சமூகமளிக்காத நிலையில் மற்றுமொரு உறுப்பினரிற்கான இடம் வெற்றிடமாக காணப்படுகின்றது.
இதன்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் 18 உறுப்பினர்களும், தமிழர் விடுதலை கூட்டணியின் ஒரு உறுப்பினரும், சுயேற்சை குழு உறுப்பினர் ஒருவரும், தமிழர் விடுதலை கூட்டணியின் ஒரு உறுப்பினருமாக 21 உறுப்பினர்கள் பாதீட்டிற்கு ஆதரவாக வாக்களித்து பாதீட்டினை நிறைவேற்றியுள்ளனர்.
அதேவேளை தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் 05 உறுப்பினர்களும், ஈ.பி.டீ.பீ கட்சியின் ஒரு உறுப்பினரும், ஐக்கிய தேசிய கட்சியின் ஒரு உறுப்பினரும், தமிழர் விடுதலை கூட்டணியின் 03 உறுப்பினர்களும், சுயேற்சை குழுக்கள் சார்பில் 02 உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஒரு உறுப்பினருமாக 13 உறுப்பினர்கள் பாதீட்டிற்கு எதிராக வாக்களித்திருந்ததுடன், ஐக்கிய தேசிய கட்சியின் 02 உறுப்பினர்கள் நடுநிலை வகித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இவ் அமர்வில் பிரதி முதல்வர் க.சத்தியசீலன், உறுப்பினர்கள், ஆணையாளர், பிரதி ஆணையாளர், கணக்காளர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்ததுடன், பார்வையாளர் அரங்கில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னால் மாகாண சபை உறுப்பினருமான பூபாலப்பிள்ளை பிரசாந்தன் உள்ளிட்ட மேலும் பலர் சமூகமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment