உத்தேச தேர்தல் சட்ட மறுசீரமைப்புக்கள் தொடர்பான விழிப்புணர்வூட்டும் கருத்தரங்கு............
உத்தேச தேர்தல் சட்ட மறுசீரமைப்புக்கள் தொடர்பான விழிப்புணர்வூட்டுவதற்கான கருத்தரங்கு வழக்கறிஞர் நிமல் ஜி. புஞ்சிஹேவா தலைமையில் நொச்சிமுனையில் இடம்பெற்றது.
தேர்தல் சட்ட மறுசீரமைப்புகள் தொடர்பாக விசேட பாராளுமன்ற தெரிவுக்குழுவினால் பாராளுமன்றத்திற்கு முன் மொழிவுகளை துரிதமாக சட்டவாக்கப்படுத்துவதற்குத் தேவையான சமூக பின்புலத்தை அமைப்பதற்கும் இது தொடர்பான விழிப்புணர்வை சமூகத்தில் ஏற்படுத்துவதற்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தீர்மானத்திற்கு அமைவாக தேர்தல் முறைமைகளுக்கான சர்வதேச மன்றம் (IFES), ஜனநாயக மறுசீரமைப்பு தேர்தல்கள் கற்கைகள் நிறுவனம் (IRES) ஆகிய நிறுவனங்களின் அனுசரணையில் இந்நிகழ்வு இடம் பெற்றது.
இலங்கையில் உள்ள அனைத்து மாவட்டம் தோறும் தேர்தல் ஆணைக்குழுவினால் இக் கலந்துரையாடல் இடம் பெற்று வருகின்றது. அதன் அடிப்படையில் 19வது மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இக்கலந்துரையாடல் இடம் பெற்றுள்ளது.
தற்போதைய தேர்தல் நடைமுறையை சீர்திருத்த வேண்டிய அவசியம் மற்றும் சிவில் சமுகத்தின் பங்கு தொடர்பாக இதன்போது ஆராயப்பட்டது.
இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டவர்களிடமிருந்து கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகள், ஆலோசனைகள் பெறப்பட்டதுடன், காலத்தை கடத்தி தேர்தலை நடத்துதல், தேர்தல் செலவினை கட்டுப்படுத்தல், இளம் பிரதிநிதிகளை உள்வாங்குதல், பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரித்தல், மாவட்ட எல்லை நிர்ணயம் போன்ற மேலும் பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.
விசேட தேவைக்குரியவர்களின் தேவைகள் மற்றும் உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கு பாராளுமன்றத்தில் தமக்கு ஒரு பிரதிநிதித்துவம் வேண்டும் என்றும் பரிந்துரை இதன்போது முன்வைக்கப்பட்டது.
இந்நிகழ்வின் நோக்கத்தினை தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க விளக்கியத்துடன், ஜனநாயக மறுசீரமைப்பு தேர்தல்கள் கற்கைகள் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க தற்கால தேர்தல் செயன்முறையை மறுசீரமைப்பதற்கான தேவையும் அதற்கான சிவில் சமூகத்தின் பொறுப்புகள் தொடர்பாக விரிவாக விபரித்திருந்தார்.
இதன்போது மட்டக்களப்பு மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர் எம்.பி.எம். சுபியான் உள்ளிட்ட மேலும் பல உயர் அதிகாரிகள் இதன்போது கலந்துகொண்டுள்ளனர்.
Comments
Post a Comment