கோறளைப்பற்று வடக்கு - வாகரையில் இடம்பெற்ற பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டம்!!
கோறளைப்பற்று வடக்கு - வாகரை பிரதேச செயலகப் பிரிவினுடைய பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் (03) திகதி கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் இடம் பெற்றது.
குறித்த கூட்டத்தின்போது பல்வேறுபட்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டதுடன் அதற்கான தீர்மானங்களும் எடுக்கப்பட்டது.
அந்த வகையில் தற்போது நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியினைக் கருத்திற் கொண்டு மாவட்டத்தில் உணவு உற்பத்தியை ஊக்குவிப்பதன் அடிப்படையில் நீண்ட காலமாக அதற்குத் தடையாக இருக்கும் வன வள திணைக்களத்திற்கு சொந்தமான காணிகள் தொடர்பான வர்த்தமானி தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன் பொருளாதார ரீதியில் எமது மாவட்டத்திற்கு இலாபத்தை ஈட்டித்தரும் விவசாயம், மீன்பிடி, இறால் வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு போன்றவற்றிற்கு வனவள காணிகள் தடையாக இருக்கும் இடங்களை அடையாளப்படுத்தி அக் காணிகளை வனவள வர்த்தமானியில் இருந்து விடுவிப்பது தொடர்பான தீர்மானமும், நாட்டின் மின் உற்பத்தியை கருத்திற்கொண்டு வாகரை புனானை கிழக்கு பிரதேசத்தில் சூரிய மின் உற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கு தேவையான காணிகளையும் குறித்த வனவள காணிகளிலிருந்து ஒதுக்கீடு செய்வது தொடர்பிலும் விசேடமாக கலந்துரையாடப்பட்டது.
மேலும் அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் யானை தாக்குதலில் இருந்து மக்களையும், விவசாய நிலங்களையும் பாதுகாப்பது, வீதி அபிவிருத்திப் பணிகளை திட்டமிட்டு நடைமுறைப்படுத்துவது, பாடசாலையில் உள்ள ஆசிரியர் வெற்றிடங்களை நிவர்த்தி செய்வது, போதைப்பொருள் மற்றும் சட்ட விரோத மதுபான ஒழிப்பு, காணியில்லாதவர்களுக்கான காணிகளை வழங்குவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டு தீர்மானங்களும் எடுக்கப்பட்டது.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம், இராசமாணிக்கம் சாணக்கியன் உட்பட பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், தனியார் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், கிராம அபிவிருத்திச் சங்கங்க பிரதிநிதிகள், சனசமூக நிலையங்களின் பிரதிநிதிகள், துறைசார் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
Comments
Post a Comment