மட்டக்களப்பு மாவட்டத்தின் இவ்வாண்டிற்கான இரண்டாவது அபிவிருத்திக் குழுக் கூட்டம்!!
மட்டக்களப்பு மாவட்டத்தின் இவ்வாண்டிற்கான இரண்டாவது அபிவிருத்திக் குழுக் கூட்டம் பாராளுமன்ற உறுப்பினரும் கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் இன்று (04) திகதி மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரனின் ஏற்பாட்டில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம், இராசமாணிக்கம் சாணக்கியன், கிழக்கு மாகாண பிரதம செயலார் ஆர்.எம்.பீ.எஸ்.ரத்னாயக ஆகியோர் பிரசன்னமாயிருந்தனர்.
குறிப்பாக இம்மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் பெரும்போக நெற்செய்கைக்குத் தேவையான இரசாயன மற்றும் சேதன உரத்தினை விரைவாகப் பெற்றுக் கொடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டு அதற்கான முன்னாயத்த செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும் இதன்போது கடந்த ஆண்டில் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாகவும் இவ்வாண்டு நடைமுறைப்படுத்துவதற்காக முன்மொழியப்பட்டுள்ள திட்டங்களுக்கான அனுமதியினை பெற்றுக்கொள்வது தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
மேலும் இம்மாவட்டத்தின் பொருளாதாரம், விவசாயம், நீர்ப்பாசனம், கல்வி, சுகாதாரம், சமுர்த்தி, சுற்றாடல் உட்பட அனைத்து திணைக்களங்கள் சார் விடயங்களும் ஆராயப்பட்டதுடன் அவற்றில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
இக்கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந், காணிப்பிரிவிற்கான மேலதிக அரசாங்க அதிபர் நவரூபரஞ்ஜனி முகுந்தன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணியமூர்த்தி, உள்ளுராட்சி சபைகளின் தவிசாளர்கள், மாவட்ட பொலிஸ் மற்றும் இராணுவ தரப்பு பிரதானிகள், பிரதேச செயலாளர்கள், ஏனைய திணைக்களங்களின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
Comments
Post a Comment