காட்டு யானைகளின் தாக்குதலிலிருந்து மக்களை பாதுகாக்க மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் விசேட கவனம்!!

 காட்டு யானைகளின் தாக்குதலிலிருந்து மக்களை பாதுகாக்க மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் விசேட கவனம்!!



மட்டக்களப்பு மாவட்டத்தில் காட்டு யானைகளின் தாக்குதல்கள் அதிகரித்துவரும் நிலையில் அண்மைக் காலத்தில் போரதீவுப்பற்று, வெல்லாவெளிப் பிரதேசத்தில் யானைகளின் தாக்குதல் அதிகரித்துள்ளது. இதனைக் கட்டுப்படுத்துமகமாக வன ஜீவராசிகள் திணைக்களத்திற்கு வாகனம் மற்றும் ஏனைய உதவிகளை வழங்குவது தொடர்பில் மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம் இன்றையதினம் மாவட்ட செயலகத்தில் கிராமிய வீதிகள் இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்துவரும் யானைகளின் தாக்குதல்களிலிருந்து மக்களைப் பாதுகாப்பது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படட்டுள்ளது.

வெல்லாவெளிப் பிரதேசத்துக்குட்பட்ட தமது அலுவலகத்திற்கு தற்போது வாகன வசதி இன்மையால் தாம் பல அசௌகரியங்களை எதிர்நோக்கிவருவதுடன் யானைகளின் நடமாட்டத்தினைக் கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை எடுப்பதில் பாரிய இடர்பாடுகள் இருப்பதாகவும் வன ஜீவராசிகள் திணைக்களத்தின் அதிகாரி சுட்டிக்காட்டியிருந்தார்.

வன ஜீவராசிகள் திணைக்களத்திற்குத் தேவையான வாகன வசதிகளை ஏற்படுத்தித் கொடுப்பதுடன் அதற்குரிய எரிபொருளினையும் வழங்குவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுப்பதாக கிராமிய வீதிகள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் இதன்போது குறிப்பிட்டுள்ளதுடன், அதற்குரிய தீர்மானமும் இதன்போது நிறைவேற்றப்பட்டுள்ளது.

Comments