நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மூன்று அணியும் வெல்லும் பட்சத்தில் ரன்ரேட் அடிப்படையில் முதல் இரண்டு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறிவிடும். ஆனால்........
நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மூன்று அணியும் வெல்லும் பட்சத்தில் ரன்ரேட் அடிப்படையில் முதல் இரண்டு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறிவிடும். ஆனால்........
T/20 உலகக்கோப்பைத் தொடர் பரபரப்பான இறுதிக்கட்டத்தை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்திருக்கிறது. குழு 1-ல் இடம்பெற்றிருக்கும் அணிகள் அரையிறுதியில் இடம்பிடிப்பதற்கான கடைசி கட்ட ஆயத்தத்தில் இருக்கின்றனர்.
குழு-1 இருந்து 2 அணிகள் அரையிறுதிக்கு தகுதிப்பெறும். இங்கே சுவாரஸ்யமான விஷயம் என்னவெனில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து என மூன்று அணிகளும் சமமாக 5 புள்ளிகளை பெற்றிருக்கின்றனர். மூன்று அணிகளும் தங்களின் கடைசி சூப்பர் 12 போட்டியில் நாளையும், நாளை மறுநாளும் ஆடவிருக்கின்றனர். இந்த போட்டிகளின் முடிவை பொறுத்தே இந்த அணிகளுக்கான அரையிறுதி வாய்ப்புகள் முடிவாகும்.
மூன்றே அணிகள்; இரண்டே ஸ்பாட்; ஒரே போட்டி; சாதிக்கப்போகும் அணிகள் எவை?
மூன்று அணிகளும் ஒரே புள்ளியில் நின்று முட்டி மோதினாலும் நியூசிலாந்து அணி அரையிறுதிக்குச் செல்வதற்கான வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது. காரணம், அவர்களின் ரன்ரேட். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் போட்டியிலேயே நியூசிலாந்து அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியை பெற்றிருந்தது. அதன்மூலம் நல்ல ரன்ரேட்டையும் நியூசிலாந்து எட்டியது. அதை அப்படியே அடுத்தடுத்த போட்டிகளிலும் தக்க வைத்திருந்தது. இங்கிலாந்துக்கு எதிராக தோற்ற போதுமே ரன்ரேட்டில் பெரிய அடி இல்லை. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளை விட நியூசிலாந்தின் ரன்ரேட் நன்றாகவே இருக்கிறது. மேலும், நியூசிலாந்து அணி தனது கடைசி போட்டியில் அயர்லாந்தை எதிர்கொள்கிறது. வெற்றி வாய்ப்பு நியூசிலாந்துக்கு தான் அதிகம். வென்றுவிடும்பட்சத்தில் நியூசிலாந்து எந்த சிரமமும் இல்லாமல் அரையிறுதிக்கு தகுதிப்பெற்றுவிடும்.
ஆஸ்திரேலிய அணி தனது கடைசி போட்டியில் ஆஃப்கானிஸ்தானை எதிர்கொள்ளவிருக்கிறது. வெற்றி வாய்ப்பு ஆஸ்திரேலியாவுக்கு தான் அதிகம் எனினும் அவர்களுக்கு ரன்ரேட் ஒரு பெரிய பிரச்சனையாக இருக்கக்கூடும். ஏனெனில், இந்த மூன்று அணிகளில் ஆஸ்திரேலியாவிற்கு மட்டும்தான் ரன்ரேட் நெகட்டிவ்வாக இருக்கிறது. மேலும், நியூசிலாந்து VS அயர்லாந்து மற்றும் ஆஸ்திரேலியா VS ஆஃப்கானிஸ்தான் போட்டிகள் நாளையே நடைபெறுகிறது. இங்கிலாந்து VS இலங்கை போட்டி நாளை மறுநாள் தான் நடைபெறுகிறது. அதனால் ஆஸ்திரேலிய அணிக்கு எவ்வளவு ரன்ரேட் வேண்டும் எவ்வளவு ரன்கள் வித்தியாசத்தில் வெல்ல வேண்டும் என்பதெல்லாம் தெளிவாகத் தெரியாது. எவ்வளவு முடியுமோ அவ்வளவு அதிக வித்தியாசத்தில் வெல்ல வேண்டும்.
இங்கிலாந்து அணிக்கு ரன்ரேட் விஷயத்தில் அத்தனை அழுத்தம் இருக்காது. இருந்தாலும் அவர்கள் எதை நோக்கி செல்ல வேண்டும் என்கிற இலக்கு அவர்களுக்கு தெரிந்துவிடும். ஆகையால் பெரிய பிரச்சனை இருக்காது. ஆனால், இலங்கை அணியும் அவர்களின் ஸ்பின்னர்களும் சவாலளிக்கக் கூடும். அவர்களை மீறி இங்கிலாந்து வெல்ல வேண்டும்.
மூன்று அணிகளும் வெல்லும் பட்சத்தில் ரன்ரேட் அடிப்படையில் முதல் இரண்டு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறிவிடும். இந்த மூன்று அணிகளை தவிர குரூப் 1 இல் வேறு அணிகளுக்கு வாய்ப்பே இல்லையா? அப்படியெல்லாம் இல்லை. இலங்கை இங்கிலாந்தை வீழ்த்தும் பட்சத்தில் அவர்களுக்கும் ஒரு வாய்ப்பிருக்கிறது. ஆனால், அதற்கு ஆஃப்கானிஸ்தானோ அயர்லாந்தோ ஆஸ்திரேலியா அல்லது நியூசிலாந்தை வீழ்த்த வேண்டும். அது கொஞ்சம் கடினமான விஷயம்தான். அயர்லாந்து அணிக்குமே ஒரு வாய்ப்பிருக்கிறது. ஆனால், அதற்கு நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து என மூன்று அணிகளுமே தோற்க வேண்டும். அது ரொம்ப ரொம்ப கடினம். ஆக, சாத்தியமான வாய்ப்புகள் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மூன்று அணிகளுக்கு மட்டுமே இருக்கிறது.
Comments
Post a Comment