மட்டு.மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக விவசாய நிலங்கள் மூழ்கும் நிலை......

 மட்டு.மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக விவசாய நிலங்கள் மூழ்கும் நிலை......

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக விவசாய நிலங்கள் மூழ்கும் நிலையேற்பட்டுள்ளதனால் வெள்ள நிலைமையினை கட்டுப்படுத்தும் வகையில் முகத்துவாரத்தின் ஊடாக வெள்ள நீரை கடலுக்குள் வெளியேற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மாலை வேளையில் பெய்துவரும் கடும் மழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் தாழ் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இதன்காரணமாக விவசாய நிலங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதுடன் சில இடங்களில் வீதிகள் ஊடாகவும் வெள்ள நீர் பாயும் நிலையினை காணமுடிகின்றது. இதனை கருத்தில்கொண்டு மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பிரதேசசபைக்குட்பட்ட பெரியகல்லாறு வாவியின் ஊடாக வெள்ள நீரை கடலுக்குள் வெளியேற்றும் வகையில் முகத்துவாரம் வெட்டும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் காட்டு வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில் வெள்ள நீரை வெளியேற்றம்போதே விவசாயிகளை காப்பாற்றமுடியும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் கொண்டு வந்த தீர்மானத்தின் அடிப்படையில் இன்றைய தினம் முகத்துவாரம் வெட்டப்பட்டுள்ளது.

கல்லாறு முகத்துவாரம் நீண்டகாலமாக வெட்டப்படாத காரணத்தினால் விவசாயிகள் காணிகள் பாதிக்கப்படுவதுடன் இப்பகுதியில் உள்ள மீனவர்களும் பாதிக்கப்படுவதாகவும் அத்துடன் இப்பகுதியில் உள்ள வாவிக்கரையை அண்டிய பகுதிகளில் துர்நாற்றம் வீசுவதன் காரணமாக இதனை வெட்டவேண்டிய அவசியம் உள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

Comments