மட்டக்களப்பு மாநகர சபையால் மழைநீர் வழிந்தோடுவதற்கான முன் ஆயத்தபணிகள் முன்னெடுப்பு.....

 மட்டக்களப்பு மாநகர சபையால் மழைநீர் வழிந்தோடுவதற்கான முன் ஆயத்தபணிகள் முன்னெடுப்பு.....



மார்கழி மழை காலம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் மழையினால் வெள்ள அனர்த்தம் ஏற்படாமல் வெள்ளநீர் வீடுகளுக்குள் செல்லாமல் தடுப்பதற்காகவும், சுற்றாடலை சுத்தப்படுத்தும் நோக்கோடும் மழை நீர் விரைவாக வாவிக்குள் தடையின்றிச் செல்வதற்காக பிரதான வடிகான்கள் துப்பரவு செய்யும் பணியினை மட்டக்களப்பு மாநகர சபை ஊழியர்களால்   (02) ஆரம்பிக்கப்பட்டது.

மழை நீர் தேங்குவதனாலும், பொது மக்கள் நீர் நிலைகளில் குப்பகைளை வீசி அசுத்தப்படுத்துவதனாலும் டெங்கு நுளம்பு பரவும் சூழல் ஏற்பட்டு  நோயின் தாக்கம் தற்போது நகரில் அதிகரித்துள்ள நிலையில் பாலமீன் மடு மற்றும் மட்டக்கழி கிராம அபிவிருத்திச் சங்கம் மாநகரசபை உறுப்பினர் சசிகலா விஜயதேவாவிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க  மட்டக்களப்பு மாநகரசபையின் டெங்கு ஒழிப்பு விஷேட படையணி, சுகாதார மற்றும் வேலைப்பகுதி ஊழியர்கள் உள்ளிட்ட 40 பேர் கொண்ட குழுவினர் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு சுகாதார மேற்பார்வையாளர்களின் வழிகாட்டலில்  வடிகான், மட்டிக்கழி சிறுவர் பூங்கா மற்றும் பிரதான வீதியை அண்டிய மரம், செடி, கொடிகள் வெட்டப்பட்டு சுற்றாடல் துப்பரவு செய்யப்பட்டன.

இங்கு துப்பரவுப் பணியில் கலந்து கொண்ட சுற்றாடல் பாதுகாப்புப் பொலிசார் மற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களிடம் நீர் நிலைகளை அசுத்தப்படுத்துவோர் மற்றும் சுற்றாடலில் கழிவுகளை எழுந்தமானமாக வீசுவோர் மீது சட்ட நடவடிக்கை மூலம் தண்டப்பணத்தை அறவிட்டு அசுத்தப்படுத்துவோரைக் கட்டுப்படுத்துமாறு இப்பணிகளை முன்னெடுத்து வெற்றிகரமாக செயற்பட்டுவரும் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவான் கேட்டுக் கொண்டார்.

இப்பணிகளில் மாநகர ஆணையாளர் நா.மதிவண்ணன், பிரதி ஆணையாளர் உ.சிவராஜா, சுகாதார நிலையியற் குழுவின் தலைவர் கே.ரகுநாதன், அமிர்தகழி வட்டார உறுப்பினர் த.இராஜேந்திரன், மாநகரசபை உறுப்பினர்கள், கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.






 

Comments