துடுப்பாட்டத்தில் கலக்கிய பாபர் அசாம் - ரிஸ்வான் கூட்டணி, இறுதிப்போட்டிக்கு முன்னேறிய பாகிஸ்தான்......

துடுப்பாட்டத்தில் கலக்கிய பாபர் அசாம் - ரிஸ்வான் கூட்டணி, இறுதிப்போட்டிக்கு முன்னேறிய பாகிஸ்தான்......

நியூசிலாந்திற்கு எதிரான வெற்றி மூலம் பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிட்டது. T20 உலகக்கோப்பையில் கடைசியாக 2009ல் பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தது. அதன் பிறகு, இப்போதுதான் மீண்டும் அந்த வாய்ப்பை பெற்றிருக்கின்றனர்.

T20 உலகக்கோப்பையில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான அரையிறுதிப் போட்டி நடந்து முடிந்திருக்கிறது. இந்தப் போட்டியை பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இறுதிப்போட்டிக்கும் முன்னேறியிருக்கிறது.

இந்த அரையிறுதிப்போட்டி சிட்னி மைதானத்தில் நடந்திருந்தது. இந்த மைதானத்தில் இந்த உலகக்கோப்பையில் இதற்கு முன் 6 போட்டிகள் நடந்திருந்தது. இந்த 6 போட்டிகளில் 5 போட்டிகளில் முதலில் துடுப்பெடுத்தாடிய அணியே வென்றிருந்தது. இதனால் இன்றைய போட்டியிலும் நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி துடுப்பெடுத்தாட தேர்வு செய்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 152 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது. முதல் ஓவரிலேயே ஒரு  விக்கெட்டை ஷாகீன் ஷா அஃப்ரிடி வீழ்த்தினார். கொஞ்சம் நின்று ஆடிய டெவான் கான்வேயை 20 ஓட்டங்களில் ஷதாப் கான் ரன் அவுட் ஆக்கினார். க்ளென் பிலிப்ஸ் நவாஸ் பந்தில் அவரிடமே பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.

நியூசிலாந்து அணியில் அபாயகரமான வீரர்கள் என கணிக்கப்பட்ட மூவரையுமே பாகிஸ்தான் வெறும் 8 ஓவர்களுக்குள்ளாக வீழ்த்திவிட்டது. நியூசிலாந்து அணியின் தலைவர் கேன் வில்லியம்சன் நிலைத்து நின்று ஆடினார். ஆனாலும் அவர்  சிறப்பாக துடுப்பெடுத்தாட  தொடங்கிய நேரத்தில் சரியாக அவரின் விக்கெட்டையும் ஷாகீன் ஷா அஃப்ரிடி வீழ்த்திவிட்டார். நியூசிலாந்து ஓரளவுக்கு நல்ல  ஓட்டங்களை எட்டியதற்கு டேரில் மிட்செல்லே காரணமாக இருந்தார். வில்லியம்சன் செய்திருக்க வேண்டியதை அவர் செய்திருந்தார். அரைசதம் அடித்து அணியைக் காப்பாற்றினார்.

பாகிஸ்தான் அணிக்கு 153 ஓட்டங்கள் தேவைப்பட்டது. போல்ட் வீசிய முதல் ஓவரின் முதல் பந்தையே ரிஸ்வான் பவுண்டரியுடன் தொடங்கினார். பாபர் அசாம் 10 ரிஸ்வான் இருவருமே முந்தைய போட்டிகளில் இல்லாத துடிப்போடு இங்கே ஆடினர். தொடக்கத்திலிருந்தே அட்டாக் செய்தனர். இந்த உலகக்கோப்பையில் இதுவரை இருவரிடமிருந்து ஏமாற்றம் மட்டுமே பரிசாக கிடைத்திருந்தது. இந்தப் போட்டியில்தான் அணிக்கு தேவையானதை செய்து கொடுத்தனர்.

இவர்கள் இருவரும் இணைந்தே 100 ரன்களை எட்டிவிட்டனர். தனித்தனியாக அரைசதத்தையும் கடந்துவிட்டனர். இவர்களே ஆட்டத்தை மொத்தமாக நியூசிலாந்திடமிருந்து பறித்தும் விட்டார்கள். ஆயினும் ஆட்டம் கடைசி ஓவர் வரை சென்றது. பரபரபெல்லாம் இல்லை. பல மிஸ் பீல்டுகளைச் செய்தது நியூசிலாந்து. பாகிஸ்தான் சுலபமாகவே 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுவிட்டது.

இந்த வெற்றி மூலம் பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிட்டது. T20 உலகக்கோப்பையில் கடைசியாக 2009 இல் அந்த அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தது. அதன்பிறகு, இப்போதுதான் மீண்டும் அந்த வாய்ப்பை பெற்றிருக்கின்றனர். 

Comments