மகிழ்ச்சிகர மாணவர் பயணத் திட்டத்தின் ஆறாவது செயற்பாடு!!

 மகிழ்ச்சிகர மாணவர் பயணத் திட்டத்தின் ஆறாவது செயற்பாடு!!



சிவாநந்த நண்பர்கள் வட்டத்தால் 'மகிழ்ச்சிகர மாணவர் பயணம்'  எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படும் ஆறாவது மாதாந்த  பாடசாலைத் திட்டம் கல்லடி வேலூர் சக்தி  வித்தியாலயத்தில் பாடசாலை முதல்வர் ஆறுமுகம் இராசு தலைமையில் (20) இடம்பெற்றது.

பாடசாலை மாணவர்களின் அடிப்படைத் தேவைகளுக்கு உதவும் முகமாக 'மகிழ்ச்சிகர மாணவர் பயணம்' எனும் தொனிப்பொருளில் சிவானந்தாவில் படித்த நண்பர்களின் மாதாந்தச் செயற்பாடாக மேற்படி திட்டமானது நடைபெற்றுக் கொண்டு வருகிறது. 

அதன்படி இம்மாதத்திற்கான திட்டத்தில் கல்லடி வேலூர் சக்தி வித்தியாலயம் தெரிவுசெய்யப்பட்டு வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட சுமார் 60 மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கப்பட்டது. 

அவுஸ்திரேலியாவில் வசிக்கும் சமூக சேவகரும் சிவானந்த நண்பருமான ரவீந்திரன் ரஜீந்திரன்  அவர்களின் நிதி அனுசரணையில் மகிழ்ச்சிகர மாணவர் பயணத்தின் ஆறாவது திட்டம் பாடசாலையின் அதிபர் ஆறுமுகம் இராசு தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. 

மகிழ்ச்சிகர மாணவர் பயணத் திட்டத்தினை   கலாநிதி  க.விவானந்தராஜா மற்றும்  கு.புவதாஸ் பாடசாலை விளையாட்டுத்துறை பயிற்றுவிப்பாளர் கார்த்திகேயன் ஆகியோர் ஒருங்கிணைப்பினை மேற்கொண்டிருந்தனர்.

பாடசாலைக்கான வலயக் கல்வி பணிமனையின் இணைப்பாளர் நிரஞ்சன் அவர்கள் நிகழ்வில் அதிதியாகக் கலந்து சிறப்பித்ததோடு உரையினையும் ஆற்றியிருந்தார். 

கல்வியினை ஆதாரமாகக் கொண்டு மாணவர்கள் எவ்வாறு வாழ்வை வளப்படுத்தலாம் என்பதையும் வறுமையை எவ்வாறு  கல்வியால் முறியடிக்கலாம் என்பதை கலாநிதி து.பிரதீபன் பல ஆதாரங்களுடன் மாணவர்களுக்கு விளக்கினார். 

மகிழ்ச்சிகர மாணவர் பயணத்தில் சமத்துவம், சகோதரத்துவம் என்பனவற்றின் முக்கியத்துவம்  மற்றும்  ஏற்றத்தாழ்வில்லா மாணவர் மகிழ்ச்சிச் சூழலை உருவாக்குதல்  பற்றி பல ஆக்கபூர்வமான  கருத்தியல்களைத் தாங்கிய உரையினை கலாநிதி த.விவானந்தராசா விளக்கியிருந்தார். 

அ.சித்தாத்தன் சிறுவர் மேம்பாட்டில் கவனிக்கப்படவேண்டிய ஆழமான கருத்துக்களைக் கூறியதோடு நன்றியுரையினையும் வழங்கினார்.

பாடசாலை அதிபர்,  ஆசிரியர்கள், நண்பர்கள் வட்ட அங்கத்தவர்கள் மற்றும் அனுசரணையாளர் ரஜீந்திரனின் குடும்ப உறவுகள் அனைவராலும் மாணவர்களுக்கான பாதணிகள் வழங்கப்பட்டன. 

1998 சாதாரண தரம், 2001 உயர்தர நண்பர்களால் நடைபெற்று வரும் இந் நிகழ்வானது அடுத்த மாதம் தொடக்கம் 1997 க.பொ.த சாதாரண தரம் மற்றும் 2000 க.பொ.த உயர்தர நண்பர்களும் இணைந்து சிவானந்த நாமத்தில் அமையப் பெறும் ஓர் காத்திரமான அமைப்பின் பெயரில் இடம்பெறுமென்பதும் குறிப்பிடத்தக்கது.







   

Comments