பேரணியில் துப்பாக்கிச்சூடு; இம்ரான் காலில் பாய்ந்த குண்டுகள்... மருத்துவமனையில் அனுமதி எனத் தகவல்!

 பேரணியில் துப்பாக்கிச்சூடு; இம்ரான் காலில் பாய்ந்த குண்டுகள்... மருத்துவமனையில் அனுமதி எனத் தகவல்!



பாகிஸ்தானில் பேரணி நடத்திவரும் இம்ரான் கான் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பாகிஸ்தானில் கடந்த ஏப்ரல் மாதம் எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மூலம் பிரதமர் பதவியை இழந்த இம்ரான் கான், அப்போதிலிருந்தே விரைவில் தேர்தலை நடத்த வேண்டும் என வலியுறுத்திவருகிறார். இந்த நிலையில், பாகிஸ்தானில் பேரணி நடத்திவரும் இம்ரான் கான் மீது இன்று துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த சில நாள்களாகவே இம்ரான் கான், கூடிய சீக்கிரம் தேர்தல் நடத்தக் கோரி இஸ்லாமாபாத்தில் பேரணி நடத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக, வஷீராபாத்தில் (03) பேரணியாகச் சென்ற இம்ரான் கான் மீது திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருக்கிறது. இதில், அவர் கட்சியின் உறுப்பினர்கள் நான்கு பேர் காயமடைந்திருக்கின்றனர். இருப்பினும், இந்தத் துப்பாக்கிச்சூட்டில், அதிர்ஷ்டவசமாக இம்ரான் கான் காயங்களுடன் உயிர் தப்பியிருக்கிறார். மேலும், அவரின் காலில் துப்பாக்கியால் சுடப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியான வண்ணம் இருக்கின்றன. அதோடு துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை போலீஸார் தேடிவருவதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து ஊடகங்களிடம் பேசிய அவரின் மூத்த உதவியாளர் ஒருவர், இது அவரைக் கொல்லும் முயற்சி' என்று கூறியிருக்கிறார். முன்னதாக இரண்டு நாள்களுக்கு முன்னர், இம்ரான் கான் நடத்திய பேரணியில், அவரைப் பேட்டியெடுக்கச் சென்ற பத்திரிகையாளர் ஒருவர், இம்ரான் கான் பயணித்த வாகனத்தின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



Comments