மட்டு.சிவாநந்தா தேசிய பாடசாலை விளையாட்டு மைதானத்தில் மாபெரும் தொழிற்கல்வி சந்தை!!
முதன் முறையாக கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோனமலை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் மாபெரும் தொழிற்கல்வி சந்தையை கிழக்கு மாகாணக் கல்வித்திணைக்களம் 'திறன்மிகு ஊழியப்படையால் தொழிலுலகை வெல்வோம்' எனும் தொனிப்பொருளில் நடத்தத் திட்டமிட்டுள்ளது.
அதனடிப்படையில், இம்மாதம் மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் பின்வரும் திகதி அடிப்படையில் இம்மாபெரும் தொழிற்கல்விசந்தை நடாத்தப்படவுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்மாதம் நவம்பர் 08, 09 மற்றும் 10ஆம் திகதிகளில் மட்டக்களப்பு சிவாநந்தா தேசிய பாடசாலை விளையாட்டு மைதானத்திலும், அம்பாறை மாவட்டத்தில் இம்மாதம் நவம்பர் 15, 16 மற்றும் 17ஆம் திகதிகளில் நிந்தவூர் மாவட்ட தொழில்பயிற்சி நிலையத்திலும் திருகோணமலை மாவட்டதில் இம்மாதம் நவம்பர் 22, 23 மற்றும் 24ஆம் திகதிகளில் திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வாரா இந்துக்கல்லூரி விளையாட்டு மைதானத்திலும் நடாத்தத்திட்டமிடப்பட்டுள்ளது.
இத்தொழிற்கல்விச் சந்தையினூடாக, உயர்தரப்பிரிவில் கல்வி பயிலும் மாணவர்கள் அவர்களது உள்ளார்ந்த திறன்களை இனங்காணவும், ஏனையோர் உயர்கல்வி வாய்ப்புகளை அறியவும், திறனை வளர்க்கத்தக்க தொழிற்பயிற்சி நிலையங்களை அடையாளம் காணவும், தொழில் வழங்குனர்கள் மற்றும் சுய முயற்சியாளர்களைக் கண்டறியவும் அவர்களது அனுபவங்களைப் பெறத்தக்கதோர் அரிய சந்தர்ப்பமாகும்.
உயர்தரப் பிரிவில் கல்வி பயிலும் மாணவர்கள், உயர் கல்வியைக்கற்ற விரும்புவோர், தொழித்றிறனை வளர்க்க ஆர்வமாயுள்ளோர், சுயதொழில் முயற்சிகளில் ஈடுபடவுள்ளோர் மற்றும் தொழில் வாய்ப்புகளைத்தேடும் அனைவரும் கலந்து பயனடையுமாறு அன்புடன் அழைக்கின்றனர் ஏற்பாட்டுக் குழுவினரான கிழக்கு மாகாண கல்வித்திணைக்களத்தினர்.
Comments
Post a Comment