கவலைபடாதீங்க மாஸ் என்ட்ரி குடுப்பேன்... உயிரிழப்பதற்கு முன் மாணவி வைத்த வாட்ஸ்அப் ஸ்டேட்......
சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் கால்பந்து வீராங்கனை பிரியா. இவர் மாவட்ட மற்றும் மாநில அளவில் கால்பந்து போட்டிகளில் விளையாடி வந்துள்ளார். இளம் வீராங்கனையாக இருந்த பிரியாவுக்கு வலது காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், ரத்த ஓட்டம் தடைபட்டுள்ளது. இதன் காரணமாக கால் அகற்றப்பட்டிருந்த நிலையில், இளம் பெண் பிரியா உயிரிழந்துள்ளார்.
முன்னதாக, பெரியார் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று காலில் கட்டு போடும் போது அதனை அழுத்தமாக மருத்துவர்கள் கட்டியதால் மாணவி பிரியாவின் வலது காலில் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு ரத்த நாளங்கள் பாதிப்புக்கு உள்ளானது. இது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியதால், மிகப் பெரிய அளவில் அவதிப்பட்ட மாணவி பிரியாவை சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கே உன்னிப்பாக பிரியாவை மருத்துவர்கள் கவனித்து வந்த நிலையில், சிறுநீரக பாதிப்பு, ஈரல் பாதிப்பு, இதய பாதிப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டது. இதனிடையே, அவரது கால்களையும் மருத்துவர்கள் அகற்றி உள்ளனர். இந்த நிலையில், (15.11.2022) காலை 7:15 மணிக்கு சிகிச்சை பலனின்றி பிரியா உயிரிழந்தார்.
பெரியார் நகரில் உள்ள மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களின் கவனக்குறைவு தான் காரணம் என்பதும் தெரிய வந்ததாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். மேலும், உயிரிழந்த மாணவி பிரியாவின் குடும்பத்தினருக்கு நிவாரணம் மற்றும் சகோதரி ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.
மருத்துவர்களின் கவனக் குறைவால் மாணவி பிரியா உயிரிழந்த விஷயம், அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மத்தியில் கடும் வேதனையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. கால்பந்து விளையாட்டில் பெரிதாக சாதிக்க வேண்டும் என இருந்த மாணவியின் கனவுகள் அனைத்தும் புதைந்து போனதால் அனைவரும் நொந்து போயினர். தமிழகத்தில் கடும் அதிர்வலைகளை இந்த சம்பவம் ஏற்படுத்தி உள்ள நிலையில், மாணவி பிரியா கடைசியாக பகிர்ந்த வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் தற்போது பலரையும் கண் கலங்க வைத்துள்ளது.
மாணவி பிரியா பகிர்ந்த வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில், 'அனைத்து நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு. நான் சீக்கிரமாவே ரெடி ஆயிட்டு கம்பேக் கொடுப்பேன். எதுக்கும் பீல் பண்ணாதீங்க. என்னோட மாஸ் என்ட்ரி கொடுப்பேன். என்னோட கேம் என்ன விட்டு போகாது. நீங்க நான் ரிட்டன் வருவேன்னு நம்பிக்கையா இருக்கீங்க. லவ் யூ ப்ரெண்ட்ஸ் அண்ட் ஃபேமிலி' என குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில் மருத்துவமனையில் இருக்கும் போது பிரியா வைத்திருந்த வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் தொடர்பான ஸ்கிரீன்ஷாட்கள் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி பார்ப்போர் பலரையும் மனம் கலங்க வைத்து வருகிறது.
தன்னிடமிருந்து இந்த கேம் எப்போதும் விட்டு போகாது என கால்பந்து விளையாட்டை குறிப்பிட்டுள்ள பிரியா, நிச்சயம் திரும்பி வருவேன் என்று நம்பிக்கையுடன் குறிப்பிட்டிருந்த நிலையில் தற்போது உயிரிழந்தது கடும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.
Comments
Post a Comment