இங்கிலாந்து வெற்றி பெற்றதால் அரை இறுதிக்கு 4 அணிகளுக்கு இடையில் போட்டி......
இங்கிலாந்துக்கும் நியூஸிலாந்துக்கும் இடையில் பிறிஸ்பேன் கபா விளையாட்டரங்கில் (01) நடைபெற்ற மற்றொரு முக்கிய ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண குழு 1 சுப்பர் 12 சுற்று கிரிக்கெட் போட்டியில் 20 ஓட்டங்களால் மிகவும் அவசியமான வெற்றியை இங்கிலாந்து ஈட்டிக்கொண்டது.
அணித் தலைவர் ஜொஸ் பட்லர், அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர் குவித்த அரைச் சதங்கள், கட்டுப்பாடான பந்துவீச்சு என்பன இங்கிலாந்தின் வெற்றிக்கு வழிவகுத்தன. இந்தப் போட்டி முடிவுடன் குழு 1இல் நியூஸிலாந்து, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா ஆகிய அணிகள் தலா 5 புள்ளிகளைப் பெற்று நிகர ஓட்ட வேக அடிப்படையில் முறையே 1ஆம், 2ஆம், 3ஆம் இடங்களை வகிக்கின்றன. இலங்கை 4 புள்ளிகளுடன் 4ஆம் இடத்தில் இருக்கிறது. இந்த 4 அணிகள் சம்பந்தப்பட்ட கடைசி போட்டிகளின் முடிவுகளே எந்த 2 அணிகள் அரை இறுதிகளில் விளையாட தகுதிபெறும் என்பதைத் தீர்மானிக்கும்.
நியூஸிலாந்துக்கு எதிரான இன்றைய போட்டியில் துடுப்பாட்டத்தைத் தெரிவு செய்த இங்கிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 179 ஓட்டங்களைக் குவித்தது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் தான் அரை இறுதிக்கான வாய்ப்பை அதிகரித்துக்கொள்ள முடியும் என அறிந்திருந்த இங்கிலாந்து ஆரம்பத்திலிருந்தே அதிரடியில் இறங்கி கணிசமான மொத்த எண்ணிக்கையைப் பெற்றது. அணித் தலைவர் ஜொஸ் பட்லர், அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகிய இருவரும் அதிரடியாக அரைச் சதங்கள் குவித்து 62 பந்துகளில் 81 ஓட்டங்களைப் பகிர்ந்து பலமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். இந்த வருட ஐபிஎல் இருபது 20 கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் 4 சதங்களைக் குவித்து அசத்திய ஜொஸ் பட்லர், உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் முதல் தடவையாக துடுப்பாட்டத்தில் பிரகாசித்து அரைச் சதம் குவித்தார். ஆப்கானிஸ்தான், அயர்லாந்து அணிகளுடனான 2 போட்டிகளில் (18,00) பிரகாசிக்கத் தவறிய பட்லர் இன்றைய போட்டியில் 47 பந்துகளில் (7 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள்) 73 ஓட்டங்களைக் குவித்தார்.
அவருக்குப் பக்கபலமாக துடுப்பெடுத்தாடிய அலெக்ஸ் ஹேல்ஸ் 40 பந்துகளில் (7 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ்) 52 ஓட்டங்களைப் பெற்றார். அவர்களை விட லியாம் லிவிங்ஸ்டன் 20 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் லொக்கி பேர்கசன் 45 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
180 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 159 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. அதிரடி ஆரம்ப வீரர்களான டெவன் கொன்வே (3), ஃபின் அலன் (16) ஆகிய இருவரும் ஆட்டமிழக்க நியூஸிலாந்து 28 ஓட்டங்களை மாத்திரம் பெற்று உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் முதல் தடவையாக தடுமாற்றத்தை எதிர்கொண்டது. ஆனால், அணித் தலைவர் கேன் வில்லியம்சன், இலங்கையை நையப்புடைத்த க்லென் பிலிப்ஸ் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 91 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை ஓரளவு நல்ல நிலையில் இட்டனர். கேன் வில்லிம்சன் 40 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்ததும் ஜேம்ஸ் நீஷான் வந்த வேகத்தில் 6 ஓட்டங்களுடன் வெளியேறினார். இதனை அடுத்து கடைசி 4 ஓவர்களில் நியூஸிலாந்தின் வெற்றிக்கு மேலும் 54 ஓட்டங்கள் தேவைப்பட்டது. மிகவும் திறமையாகத் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த க்லென் பிலிப்ஸ் 36 பந்துகளில் 4 பவண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 62 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்ததும் நியூஸிலாந்தின் வெற்றிக்கனவு கலைந்துபோனது. கடைசி ஓவரில் நியூஸிலாந்தின் வெற்றிக்கு 26 ஓட்டங்கள் தெவைப்பட அவ்வணியினால் 5 ஓட்டங்களையே பெறமுடிந்தது. மிச்செல் சென்ட்னர் 16 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார். பந்துவீச்சில் சாம் கரன் 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கிறிஸ் வோக்ஸ் 33 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
எஞ்சிய போட்டிகள்:
அயர்லாந்துக்கும் நியூஸிலாந்துக்கும் இடையிலான போட்டியும் அவுஸ்திரேலியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான போட்டியும் அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும்.
இலங்கைக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான போட்டி சிட்னி கிரிக்கெட் விளையாட்டரங்கில் எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறும்.
Comments
Post a Comment