மட்டு அரசாங்க அதிபர் வெற்றி கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டி - 2022

 மட்டு அரசாங்க அதிபர் வெற்றி கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டி  - 2022



மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலகங்களுக்கிடையில்  அரசாங்க அதிபர் வெற்றி கிண்ண கிரிக்கெட்  சுற்றுப் போட்டி - 2022 இன்று (23)  ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

14 பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் ஊழியர்களின் உடல், உள வலிமையை அதிகரிப்பதற்காக  மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ்   இக்கிரிக்கெட் சுற்றுப் போட்டிகள் (23) முதல் இடம்பெறவுள்ளது.

இப்போட்டித் தொடரின் முதல் சுற்று போட்டிகள் ஒரே நாளில்  நாவற்குடா ஜீவஒளி மைதானம், சிவானந்தா மைதானம், மண்முனைப்பற்று ஆரையம்பதி ஏசீயன் விளையாட்டு மைதானம் மற்றும் விஸ்வகலா மைதானம் ஆகிய நான்கு மைதானங்களில் ஏற்பாடு செய்யப்பட்டு இடம்பெற்றுள்ளன.

இதனடிப்படையில் இன்றைய போட்டிகளாக நாவற்குடா ஜீவஒளி  விளையாட்டு மைதானத்தில்   மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந் தலைமையிலும், காத்தான்குடி பிரதேச செயலாளர் யூ.உதயஸ்ரீதரின் பங்குபற்றுதலுடன் மாவட்ட செயலக அணிக்கும், காத்தான்குடி பிரதேச செயலக அணிக்குமிடையிலான போட்டியும், கல்லடி சிவானந்த விளையாட்டு மைதானத்தில்   உதவி மாவட்ட செயலாளர்  ஏ. நவேஸ்வரன்  தலைமையில்  வெல்லாவெளி  பிரதேச  செயலக அணிக்கும், வாகரை பிரதேச செயலக  அணிக்குமிடையிலான போட்டியும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. இம்மைதானத்தில் மற்றுமொரு போட்டி கோறளை பற்று மத்தி பிரதேச செயலக  அணிக்கும் களுவாஞ்சிக்குடி  பிரதேச  செயலக அணிக்கும் இடையில்  இடம்பெற்றது.

மேலும் மண்முனைப்பற்று ஆரையம்பதி ஏசீயன் விளையாட்டு மைதானத்தில் மாவட்ட காணிப்பிரிவிற்கான மேலதிக அரசாங்க அதிபர்  நவரூபரஞ்ஜினி முகுந்தன் தலைமையில், மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் என்.சத்தியானந்தியின் பங்குபற்றுதலுடன் மண்முனை வடக்கு பிரதேச செயலக அணிக்கும்இ மாவட்ட செயலக B அணிக்குமிடையிலான போட்டியும் நடைபெற்றுள்ளது.

இதுதவிர ஆரையம்பதி விஸ்வகலா மைதானத்தில் ஏறாவூர் நகர் பிரதேச செயலக அணிக்கும், மண்முனை பற்று ஆரையம்பதி பிரதேச செயலக அணிக்குமிடையிலான போட்டி மாவட்ட சமுர்த்தி திணைக்கள பணிப்பாளர் எஸ். புவனேந்திரன் தலைமையில் ஆரம்பமானது.

இப்போட்டித் தொடரின் கால் மற்றும் அரை இறுதிப் போட்டிகள் நாளை (24) திகதி இடம்பெறவுள்ளதுடன் இறுதிப்போட்டி மற்றும் பரிசளிப்புவிழா என்பன எதிர்வரும் வெள்ளிக்கிழமை (25) இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.













Comments