கிழக்கு மாகாண வரலாற்றில் முதல்தடவையாக மட்டக்களப்பில் இடம்பெற்ற பறங்கியர் கலாச்சார தின விழா!!
கிழக்கு மாகாண கலாசார அலுவல்கள் திணைக்களமும் மட்டக்களப்பு மாவட்ட பறங்கியர் கலாசார யூனியனும் இணைந்து கிழக்கு மாகாணத்தில் முதல்தடவையாக ஏற்பாடு செய்த பறங்கியர் கலாச்சார தின விழா (06) திகதி ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.
கிழக்கு மாகாண கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் சரண்யா சுதர்ஷன் தலைமையில் சின்ன உப்போடையிலுள்ள போர்த்துகிஸ் பறங்கியர் அறக்கட்டளை சமூக மற்றும் கலாசார மையத்தின் மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம விருந்தினராக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் கலந்து சிறப்பித்தார்.
அத்தோடு குறித்த நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக அருட்தந்தையர்கள், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.வாசுதேவன், கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னால் உபவேந்தரும் பேராசிரியருமான சாமஸ் ராகல், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் பிரதம கணக்காளர் எஸ்.நேசராஜா, மட்டக்களப்பு மாவட்ட செயலக கலாசார இணைப்பாளர் த.மலர்ச்செல்வன், பறங்கியர் கலாச்சார ஒன்றியத்தின் தலைவர் டெரி ஸ்டொக்கர்ஸ், மண்முனை வடக்கு பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் வளர்மதி ராஜ் உள்ளிட்ட ஏனைய பிரதேச செயலகங்களின் கலாசார உத்தியோகத்தர்கள் என மேலும் பலர் அதிதிகளாக கலந்து சிறப்பித்துள்ளனர்.
பறங்கியர் சமூகத்திற்கே உரித்தான பாரம்பரிய இசை இசைக்கப்பட்டு அதிதிகள் வரவேற்கப்பட்டதனைத் தொடர்ந்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த பறங்கியர் சமூகத்திற்கே உரித்தான பாரம்பரிய உணவு வகைகளின் கண்காட்சியை அதிதிகள் பார்வையிட்டதனைத் தொடர்ந்து, பறங்கியர் சமூகத்தின் பாரம்பரிய கலாச்சார நிகழ்ச்சிகளுடன் ஆரம்பமாகிய நிகழ்வில் விசேட விதமாக கப்பிறிஞ்சா மற்றும் லன்ஷஸ் ஆகிய நடனங்கள் அரங்கேற்றப்பட்டது.
அதனைத்தொடர்ந்து சிறப்பு விருந்தினர் உரைகள், பிரதம விருந்தினர் உரை என்பன இடம்பெற்று, பறங்கியர் சமூகத்தின் கலை கலாசார பண்பாட்டு அம்சங்களை வளர்ப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட சிரேஸ்ட கலைஞர்கள் இதன்போது பிரதம அதிதி உள்ளிட்ட அதிதிகளினால் நினைவுச்சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment