வெபர் அடிகளாரும் மட்டக்களப்பும் (04).............

வெபர் அடிகளாரும் மட்டக்களப்பும் (04)............. 

வெபர் மைதானம் எத்தனையாம் ஆண்டு திறக்கப்பட்டது என்கின்ற விபரம் எனக்கு சரியாக தெரியவில்லை, அதனால் தான் நான் அந்த ஆண்டை குறிப்பிடவில்லை. இதனால் தான் மீண்டும் ஒரு முறை கேட்டுக் கொள்கின்றேன் பாதர் வெபர் அடிகளார் அவர்களின் நினைவேடுகளை சேகரித்து வெபர் மைதானத்தில் அவருக்காக  ஒரு அருங்காட்சியகத்தை உருவாக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன். இம்மைதனத்திற்கு வெபர் மைதானம் என பெயர் வைப்பதில் 1967ம் ஆண்டில் மட்டக்களப்பு மாநகர சபையின் நகரபிதாவாக இருந்து செ.இராசதுரை அவர்களால் மாநகர சபையில் பிரேரனை கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

 ஏற்கவே நான் குறிப்பிட்டது போன்று 1965ல் மட்டக்களப்பு மக்களுக்கு ஓர் துயரச் செய்தி காதில் எட்டியது அது தான் பாதர் வெபர் அடிகளாருக்கு தொண்டைபுற்று நோய் ஏற்பட்டுள்ளதான செய்தியாகும்.  அவர் வைத்தியர்களின் ஆலோசனையின் மத்தியில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. அப்போது மட்டக்களப்பு வைத்திய சாலையில் இன்நோய்க்கான வசதிகள் இல்லை என்றும், உடனடியாக இவரை கொழும்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கான பணிகளும் மேற் கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதன் போது இவரிடம் விளையாட்டை பயின்ற மாணவர்கள் மாத்திரமன்றி மட்டக்களப்பு மக்களே இவரின் நோய் பற்றி கவலைகளை தெரிவித்து தங்கள் தங்கள் இறைவனிடம் பிரார்த்தனையில் ஈடுபடத் தொடங்கினர்.

கனீர் என்ற குரலில் பேசிக் கொண்டிருந்தவருக்கா  இந்த நிலை எனவும் பேசிக் கொண்டனர். ஓர் இரு நாட்களில் ஓர் செய்தி மட்டக்களப்பில் பரவியது பாதர் வெபரை அமெரிக்கா கொண்டு செல்லப் போகிறார்களாம் என்கின்ற செய்தி தான் அது. அவர் அங்கு போனால் திரும்பவும் வருவாரா? மாட்டாரா? என எல்லோரும் கேள்விகளுக்கு மேல் கேள்விகளை ஒருவர் மேல் ஒருவர் தொடுத்த வண்ணம் இருந்தனர். கொழும்பில் இருந்து வந்த அறிவித்தலின் பிரகாரம் அவர் தன் 51வது வயதில்  அமெரிக்காவிற்கு புற்று நோய் சிகிச்சைக்காக சென்றார். அவர் அமெரிக்காவில்  புற்றுநோய்க்கான சிகிச்சையை பெற்றுக் கொண்டிருந்த போது அவரது உறவுகள், நண்பர்கள் அவரை அமெரிக்காவிலேயே தங்கிவிடுமாறு வற்புறுத்தியதுடன், உன் இலங்கை பயணம் போதும் எனவும் தெரிவிக்க. அவர் சத்திரசிகிச்சை பெற்றிருந்த போதிலும் தன் கஸ்டமான குரலினால் கூறினாராம், நான் இலங்கையில் பணி செய்யவில்லை நான் மட்டக்களப்பில் தான் பணி செய்கிறேன். என்னை நம்பி ஆயிரக்கனக்கான வீர, வீராங்கனைகள் உள்ளார்கள, அது மாத்திரமன்றி என்னை நம்பி ஓர் பாரிய பணியும் உள்ளது. அதை நான் நிறைவேற்ற வேண்டும் எனவே நான் மட்டக்களப்பு செல்ல வேண்டும் என்னை யாரும் தடுக்க வேண்டாம் என்று கூறி, ஓர் முடிவை மிகவும் திட்டவட்டமாக அன்றே கூறி இருந்தார், நான் இறந்தால் என்னை மட்டக்களப்பிலேயே புதைத்து விடுங்கள் என்றும் கூறி இருந்தாரம். எவ்வளவு பாசம் அவருக்கு மட்டக்களப்பு மண்ணின் மக்கள் மீது அவருக்கு.

சில மாதங்களின் பின் மட்டக்களப்பை நோக்கிய பயணத்தை ஆரம்பித்து இங்கு வந்து சேர்ந்தார் பாதர் வெபர் அடிகளார். அவரின் வருகைக்காக மட்டக்களப்பு மக்கள் பிராத்தனையில் ஈடுபட்டதாக தகவல்கள் கூறுகின்றன. கனீர் என்ற குரலுடன் வலம் வந்த அவர் குரல் சற்று கரகரத்த குரலுடன் பேசுவதற்கு இறைவன் அருள் கொடுத்திருந்தார். இவரை காண பல்லாயிரம் மக்கள் ஒன்று கூடியதாகவும் இவரை கண்டதுடன் பலர் கண்ணீர் விட்டு அழுதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவரின் மற்றுமொரு சுவாரஸ்சியமான விடயத்தை பற்றி அடுத்த தொடரில் பார்ப்போம்....

தொடரும்......

 

Comments