முச்சக்கரவண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு..............

 முச்சக்கரவண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு............



தொழில்முறை பயணிகள் போக்குவரத்து முச்சக்கர வண்டிகளுக்கான வாராந்த எரிபொருள்  ஒதுக்கீட்டை (கோட்டாவை) 05 லீற்றரில் இருந்து  10 லீற்றராக அதிகரிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். இதன் முதற்கட்டமாக மேல் மாகாணத்தில் தொழில் சார்ந்த முச்சக்கரவண்டிகளை பதிவு செய்யும் பணிகள் நவம்பர் 1ஆம் திகதி முதல் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி  பணிமனையின் பிரதானியுமான  சாகல ரத்நாயக்கவுக்கும் தொழில்சார்ந்த முச்சக்கர வண்டி சங்க பிரதிநிதிகளுக்கும் இடையில்  (24) நடந்த கலந்துரையாடலின் போதே இந்த விடயங்கள் வெளியிடப்பட்டன. இதன்படி, எதிர்வரும் நவம்பர் மாதம் 6ஆம் திகதி முதல் மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து பயணிகள் போக்குவரத்து முச்சக்கரவண்டிகளுக்கும் வாரத்திற்கு 10 லீற்றர் எரிபொருள் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் ஏனைய மாகாணங்களில் இயங்கும்  பயணிகள் போக்குவரத்து முச்சக்கரவண்டிகளை பதிவு  செய்யும் நடவடிக்கை நவம்பர் 6 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை மேற்கொள்ளப்படவுள்ளது. அதன் பின்னர் அந்த முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் கோட்டாவை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது, இலங்கையில் 10 இலட்சத்து 80,000 முச்சக்கர வண்டிகள் உள்ளன. அவற்றில் சுமார் 400,000 முச்சக்கர வண்டிகள் தொழில்முறை பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடுவதாக முச்சக்கர வண்டி சங்கங்கள் தெரிவிக்கின்றன.

சுமார் 300,000 பயணிகள் போக்குவரத்து முச்சக்கர வண்டிகள்  பொலிஸில் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், 13 ஆம் திகதிக்கு முன்னர் அனைத்து பயணிகள் போக்குவரத்து முச்சக்கர வண்டிகளையும்  பதிவு செய்ய முடியாத பட்சத்தில் பொலிஸில் பதிவுசெய்து  முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் கோட்டாவை வழங்க இந்த கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது.  

இது தொடர்பில் மாகாண ஆளுநர்கள் மற்றும் மாகாண வீதிப் போக்குவரத்து அதிகார சபை அதிகாரிகளை துரிதமாக தெளிவுபடுத்த  திட்டமிடப்பட்டுள்ளது. மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன, ஜனாதிபதி தொழிற்சங்க பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய மற்றும் அதிகாரிகள்  இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

Comments