அரசின் நிவாரண உதவியை பெற நீங்கள் தகுதியானவரா ? என்ன செய்யவேண்டும் ?
ஏற்கனவே மக்கள் பெறுகின்ற சமுர்த்தி உதவி, முதியோர்களுக்கான கொடுப்பனவு, பாடசாலை மாணவர்களுக்கான கொடுப்பனவு, சில நோயாளிகளுக்கான கொடுப்பனவு என்பனவற்றை பெறுகின்றவர்களும் அவற்றை புதிதாக பெறுவதற்கு தான் தகுதியானவர்கள் என எண்ணுபவர்களும் இம்மாதம் 28 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்கவேண்டும். எவ்வாறு விண்ணப்படிவங்களை பூர்த்தி செய்வது சமர்ப்பிக்கவேண்டும் என்பதனை தெளிவுபடுத்துகிறார் நிதி அமைச்சின் மேலதிக பணிப்பாளர் மற்றும் நிதி அமைச்சின் கீழ் இயங்குகின்ற சமூக நலன் துறைகள் நன்மைகள் சபையின் மேலதிக ஆணையாளர் சீனிவாசன் கிரிதரன்
அரசாங்கத்தின் நிவாரண உதவிகளை பெறுகின்ற தரப்பினரான சமுர்த்தி உதவி பெறுவோர், முதியோர் உதவி கொடுப்பனவை பெறுவோர், நோயாளர்களுக்கான கொடுப்பனவர்களை பெறுவோர் மற்றும் சிறுவர்களுக்கான கொடுப்பனவை பெறுவோரும் புதிதாக இவ்வாறான உதவிளை பெற தகுதியுடையோர் என எண்ணுபவர்களும் கிராம சேவகர் ஊடாக இந்த விண்ணப்பிக்க வேண்டும் என அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. அதற்கான இறுதி திகதியாக இம்மாதம் 28 ஆம் திகதி நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் 28 ஆம் திகதிக்கு முன்னர் தாம் அரசாங்கத்தின் நிவாரண உதவிகளை பெறுகின்றதுக்கு தகுதியானவர்கள் என மக்கள் கருதுமிடத்து கிராமசேர்களிடம் சென்று அந்த விண்ணப்ப படிவத்தை பெற்று அதனைப் பூர்த்தி செய்து கிராமர் சேவகர் ஊடாக பிரதேச செயலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
அதாவது ஏற்கனவே தற்போது சமுர்த்தி உதவி, வயது மூப்பு கொடுப்பனவு, சிறுவர்களுக்கான கொடுப்பனவு மற்றும் நோயாளர்களுக்கான கொடுப்பனவை பெறுவோரும் கூட மீண்டும் தாம் இதனை பெற தகுதியாக இருக்கின்றோம் என்பதை நிர்ணயத்து விண்ணப்பிக்க வேண்டியிருக்கிறது. அவ்வாறு மீண்டும் கிடைக்கின்ற விண்ணப்பங்களை ஒரு பொறிமுறையின் கீழ் பரிசீலித்து அவர்கள் இந்த உதவி பெறுவதற்கு தகுதியானவர்களா என்பது ஆராயப்பட்டு மீண்டும் அந்த உதவி வழங்கப்பட இருக்கின்றது. இவ்வாறு மீண்டும் விண்ணப்பிக்குமாறு கோருவதற்கு காரணம் அவ்வாறான உதவிகளை பெறுவதற்கு வெளியே மேலும் பலர் இருப்பதாகவும் அவர்களை உள்வாங்க வேண்டும் என்பதும் அதேபோன்று தற்போது உதவிகளை பெறுகின்றவர்களில் சிலர் அதற்கு தகுதியற்றவர்களாக இருப்பதாகவும் அவர்களை நீக்கவுமே என தெரிவிக்கப்படுகிறது.
எனவே அது தொடர்பான ஒரு சுத்திகரிப்பு செய்யும் நடவடிக்கையாக அல்லது அவர்களது தகுதியை மீள் பரிசீலிக்கும் ஒரு விடயமாக இந்த பொறிமுறை உருவாக்கப்பட்டிருப்பதாக அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. இந்த செயற்பாட்டை நிதியமைச்சின் கீழ் இயங்கும் சமூக நலன் துறைகள் நன்மைகள் சபை முன்னின்று செய்கின்து. ஏற்கனவே 20 இலட்சத்துக்கு மேற்பட்டோர் இதற்கு விண்ணப்பித்திருக்கின்றனர். தொடர்ந்து தாம் இந்த அரசாங்கத்தின் நிவாரண உதவிகளை பெறுவதற்கு தகுதியானவர்கள் என்ற கருதும் மக்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் நாம் நிதி அமைச்சின் மேலதிக பணிப்பாளர் மற்றும் நிதி அமைச்சின் கீழ் இயங்குகின்ற சமூக நலன் துறைகள் நன்மைகள் சபையின் மேலதிக ஆணையாளர் சீனிவாசன் கிரிதரனை தொடர்பு கொண்டு வினவினோம்.
கேள்வி: எவ்வாறு இந்த மீள் விண்ணப்ப செயல்பாடுகள் இடம்பெற வேண்டும் அதற்கு மக்கள் என்ன செய்ய வேண்டும் ? நிதியமைச்சு எவ்வாறு அதில் தொடர்புபடுகின்றது?
பதில்: நிதியமைச்சின் கீழ் சமூக நலன் துறைகள் நன்மைகள் சபை என்று ஒன்று இயங்கிக் கொண்டிருக்கின்றது. 2002 ஆம் ஆண்டு 24 ஆம் இலக்க சட்டத்தின் கீழ் இந்த சபை உருவாக்கப்பட்டு இயங்கிக் கொண்டிருக்கிறது. அதாவது இந்த சட்டத்தின் பெயர் நலன் புரி அணுகூலங்கள் சட்டமாகும். இந்த சட்டத்தின் மூலமே ஒருவர் அரசாங்கத்தின் நிவாரண உதவிகளை பெறுவதற்கு எவ்வாறு தகுதி அடைகின்றார் என்பதை தெரிவு செய்யும் செயற்பாடு இடம்பெறும்.
வறுமைக் கோட்டிற்குள் வாழ்கின்ற மக்கள் பெறுகின்ற சமுர்த்தி உதவி, முதியோர்களுக்கான கொடுப்பனவு, பாடசாலை மாணவர்களுக்கான கொடுப்பனவு, சில நோயாளிகளுக்கான கொடுப்பனவு என்பவற்றுக்கான சரியான தகுதியான நபர்களை தெரிவு செய்வதற்கான வழிமுறைகளையே இந்த சட்டம் செய்கிறது.
இந்த கொடுப்பனவுகளை பெறுகின்ற பயனாளர்களை தெரிவு செய்வது, அவர்கள் தகுதியானவர்களா என்பதை பரிசீலித்தல், அவர்கள் எவ்வாறு இந்த உதவியை பெற வேண்டும் என்பதை தீர்மானித்தல் என்பவற்ற இந்த நலன்புரி அனுகூலங்கள் சட்டம் தெளிவாக குறிப்பிடுகிறது.
கேள்வி: ஏன் தற்போது இந்த உதவிகளை ஏற்கனவே பெற்றுக் கொண்டிருக்கின்ற மக்களையும் புதிதாக தாம் உதவிகளை பெறுவதற்கு தகுதியானவர்கள் என்று எண்ணுகின்ற மக்களையும் மீண்டும் விண்ணப்பிக்குமாறு அரசாங்கம் கோருகிறது?
பதில்: அதற்குக் காரணம் மிக நீண்ட காலமாக இந்த ஒரு உதவி கொடுப்பனவர்களை பெற்றுக் கொண்டிருக்கின்றவர்களின் வருமானம் தற்போது அதிகரித்திருக்கலாம். மேலும் புதிதாக இந்த கொடுப்பனவை பெறுவதற்கு தகுதியானவர்கள் சமூகத்தில் இருக்கலாம். எனவே கொடுப்பனவை பெறக்கூடிய தகுதியானவர்களை தேர்வு செய்ய வேண்டிய தேவை எங்களுக்கு காணப்படுகிறது.
தகுதியற்ற நபர்கள் கூட இதனை பெற்றுக் கொள்ளும் சில சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன. எனவே தான் இப்பொழுது இந்த உதவியை பெறுகின்றவர்களும் இனியும் தான் அரசாங்கத்தின் நிவாரண உதவிகளை பெறுவதற்கு தகுதியானவர் என எண்ணுகின்றவர்களும் அரசாங்கத்தின் நிவாரண உதவி திட்டத்துக்குள் இணைந்து கொள்வதற்காகவே மீண்டும் விண்ணப்பிக்குமாறு அரசாங்கம் கோரியுள்ளது. எனவே அவர்கள் இந்த விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதன் மூலம் தான் தகுதியானவரா என்பதை நிரூபித்து இந்த உதவிகளை பெறலாம்.
கேள்வி: அப்படியானால் வழங்கப்படுகின்ற இந்த உதவிகள் கொடுப்பனவுகளை பெறுவதற்கு தகுதியானவர்கள் யார் என்பது தற்போது மீள் பரிசீலனை அல்லது மீள் சுத்திகரிப்பு செய்யப்படுகிறது என்று கூறினால் சரியா ?
பதில்: ஆம் அது சரியான விடயம்.
கேள்வி: தற்போது சமூகத்தில் இருக்கின்ற ஒருவர் தான் அரசாங்கத்தின் நிவாரண உதவிகளை பெறுவதற்கு தகுதியானவர் என்று கருதும் பட்சத்தில் அவர் என்ன செய்ய வேண்டும்?
பதில்: தான் அரசாங்கத்தின் குறித்த நிவாரண உதவிகளை பெறுவதற்கு தகுதியானவர் என்று கருதுகின்றவர், இந்த விண்ணப்பத்தை உடனடியாக பூர்த்தி செய்து பிரதேச செயலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். நாங்கள் இது தொடர்பாக பத்திரிகைகளில் விளம்பரங்களை செய்திருக்கின்றோம். அந்த விளம்பர மாதிரிகளை பெற்று அதனை நிரப்பி கிராம சேவகர் ஊடாக பிரதேச செயலகத்தில் சமர்ப்பிக்கலாம். அல்லது கிராம சேவகரிடம் விண்ணப்ப படிவத்தை பெற்று அதனை நிரப்பி கிராம சேவகர் ஊடாக பிரதேச செயலகத்தில் சமர்ப்பிக்கலாம். மேலும் விண்ணப்ப படிவத்தில் கிராம அலுவலர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகர்த்தர், சமூக அபிவிருத்தி உத்தியோகர்த்தர், பொருளாதார அபிவிருததி உத்தியோகத்தர், முதியோர் உரிமை ஊக்குவிப்பு உத்தியோகத்தர், சமூக பாதுகாப்பு உத்தியோத்தர் ஊடாக விண்ணப்பப்படிவத்தை அத்தாட்சிபடுத்துவதும் அவசியமாகும்.
கேள்வி: பிரதேச செயலகத்தில் யாரிடம்விண்ணப்படிவத்தை கையளிப்பது?
பதில்: பிரதேச செயலகத்தில் நலன்புரி நன்மைகள் சபையின் உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களிடம் இந்த விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்கலாம். அங்கு அந்த விண்ணப்பத்தின் சகல தகவல்களும் எமது பொறிமுறையின் ஊடாக காணப்படுகின்ற தகவல் தொகுதி முறைமைக்குள் உள்ளடக்கப்பட்டு விடயங்கள் சரிபார்க்கப்பட்டு மீள்பரிசீலிக்கப்பட்டு தகுதியானவர்களின் பட்டியல் வெளியிடப்படும். அதாவது அரசாங்க நிவாரண உதவிகளை பெற்றுக்கொள்வதற்கான தகுதியானவர்களின் பட்டியல் இதன் ஊடாக வெளியிடப்படும்.
கேள்வி: விண்ணப்ப படிவத்தை பயனாளிகள் தயாரித்து நிரப்பி அனுப்ப வேண்டுமா? அல்லது அதனை யாரிடமாவது பெற்றுக்கொள்ள முடியுமா ?
பதில்: விண்ணப்ப்பபடிவத்தை பிரதேச செயலகத்தில் பெற்றுக் கொள்ள முடியும். அல்லது பத்திரிகை விளம்பரத்தை பெற்று அதில் இருக்கின்ற மாதிரி விண்ணப்ப படிவம் போன்று தயாரித்து அதனை நிரப்பி அனுப்ப முடியும்.
கேள்வி: அதனை பூரணப்படுத்தி கிராமசேர்களிடம் ஒப்படைக்க வேண்டுமா? அல்லது நேரடியாக பிரதேச செயலகத்தில் சமர்ப்பிக்கலாமா?
பதில்: விண்ணப்பப்படிவத்தை நன்றாக பூரணப்படுத்தி கிராம சேவை சேவகரிடம் ஒப்படைக்க வேண்டும். கிராம சேவகர் ஊடாகவே பிரதேச செயகலத்தில் ஒப்படைக்க வேண்டும்.
கேள்வி: விண்ணப்ப படிவங்களை சமர்ப்பதற்கான இறுதித் திகதி எப்போது?
பதில்: விண்ணப்பங்களை அனுப்பும் இறுதி திகதியாக 28 ஆம் திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த திகதியில் நிரப்பி அத்தாட்சிபடுத்தி சமர்ப்பிக்கின்ற விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்படும். 39 இலட்சம் மக்கள் இவ்வாறு அரசாங்கத்தின் நிவாரண உதவியை பெறுவதற்கு இலங்கையில் தகுதியாக இருக்கின்றார்கள் என்று கருதுகின்றோம். அவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் எமக்கு கிடைக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம். அதனால் எமக்கு இன்னும் விண்ணப்பங்கள் வர வேண்டி இருக்கின்றன.
கேள்வி: இறுதியாக பொது மக்களுக்கு என்ன கூற விரும்புகிறீர்கள் ?
பதில்: விண்ணப்ப படிவத்தை உரிய தகுதிக்குள் பூரணப்படுத்தி கிராம சேவகர் ஊடாக பிரதேச செயலகத்தில் ஒப்படையுங்கள். இந்த விண்ணப்பங்கள் யாவும் நேர்த்தியாகவும் நேர்மையாகவும் வெளிப்படை தன்மையுடனும் பரிசீலனை செய்யப்பட்டு பயனாளிகள் அறிவிக்கப்படுவார்கள். அதேநேரம் தற்போது நாங்கள் 28ஆம் திகதியை இறுதியாக நிர்ணயத்துள்ளோம். ஆனால் அதன் பின்னரும் கூட இந்த திட்டம் தொடர்ச்சியாக நீடித்துக் கொண்டிருக்கும். அதில் புதியவர்களை இணைப்பதும் தகுதியற்றவர்களை நீக்குவதுமாக நாம் ஒரு செயல்பாட்டை மேற்கொண்டு வருவோம். மேலும் ஒருவர் விண்ணப்பித்து எமது பரிசீலினையின் பின்னர் அந்த நிவாரண கொடுப்பனவு கிடைக்கவில்லையாயின் அந்த பயனாளிக்கு தான் ஏன் இதில் உள்வாங்கப்படவில்லை என்பது குறித்து ஆட்சேபனம் தெரிவிப்பதற்கான உரிமையும் காணப்படுகின்றது. அதனையும் பயனாளி மேற்கொள்ள முடியும். அதன் பின்னர் அது அரசாங்க அதிபர் மட்டத்தில் பரிசீலிக்கப்பட்டு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.
Comments
Post a Comment