அம்கோர் நிறுவனத்தின் புதிய வேலைத்திட்டம் கிழக்கு மாகாண ஆளுநர் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.......

 அம்கோர் நிறுவனத்தின் புதிய வேலைத்திட்டம் கிழக்கு மாகாண ஆளுநர் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.......



அம்கோர் தேசிய தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் புதிய வேலைத்திட்டம் ஒன்று கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் அவர்களின் தலைமையில் (21) அன்று திருகோணமலையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கிழக்கு மாகாண சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர். எம். பி.எஸ்.ரட்நாயக்க, அம்கோர் நிறுவனத்தின் ஸ்தாபகரும் பணிப்பாளருமான ப.முரளிதரன், IOM நிறுவனத்தின் கிழக்கு மாகாண திட்ட ஒருங்கிணைப்பாளர் மேரி மயூரன் லம்பேர்ட், ஆளுநரின் செயலாளர் எல்.பி. மதநாயக்க, கிழக்கு மாகாண அமைச்சின் செயலாளர்கள், பொலில் பொறுப்பதிகாரி, பிரதேச செயலாளர்கள், அரச திணைக்கள தலைவர்கள் உட்பட பெருமளவானோர் கலந்து கொண்டனர்.
இலங்கையில் பல்வேறு மனிதாபிமான வேலைத்திட்டங்களை செயற்படுத்திவரும் அம்கோர் தேசிய தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினால் IOM நிறுவனத்தின் நிதியுதவியில் மனித வியாபாரத்திற்கு எதிரான இந்த வேலைத்திட்டம் திருகோணமலை மாவட்டத்தில் செயற்படுத்தப்படவிருக்கின்றது.
மனித வியாபாரத்திற்கெதிராக அரச மற்றும் சமூக மட்ட அமைப்புக்களை வலுப்படுத்துவதன் மூலம் அச்செயற்பாட்டிற்கு கூடிய விளைவை ஏற்படுத்தல் (Strengthening Government and CSO capacity to combat trafficking in persons to create a greater impact- IMPACT PROJECT) என்பதே இவ்வேலைத்திட்டமாக அமையப்பெற்றுள்ளது.
மனித வியாபாரம் என்றால் என்ன, இலங்கை மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் மனித வியாபாரத்தின் போக்கு, மனித வியாபாரத்தை தடுக்க அம்கோர் நிறுவனம் மேற்கொள்ளும் செயற்பாடுகள் உள்ளிட்ட பல விடயங்கள் இதன்போது அம்கோர் நிறுவனத்தால் தெளிவு படுத்தப்பட்டன.
மனித வியாபாரம் குறித்தான தெளிவை மக்கள் மத்தியில் கொண்டு செல்லல், அரச மற்றும் சமூக மட்ட அமைப்புக்களை இது குறித்து தெளிவூட்டல், பாதிக்கப்பட்டவர்களை இனங்காணல், அவர்களுக்கு தேவையான சேவை மற்றும் உதவிகளை வழங்கல் மற்றும் மாவட்டத்தில் மனித வியாபாரத்திற்கெதிராக வலுவாக ஒன்றிணைந்து செயற்படல் என்பன இதன் நோக்கமாக உள்ளன.
மனித வியாபாரத்தினை ஒழிக்க வேண்டியதன் அவசியம் குறித்து ஆளுநர் கருத்துக்களை பரிமாறியதுடன் மாவட்டத்தில் மனித வியாபாரத்தினை ஒழிக்க பிரதம செயலாளர் தலைமையில் தேவையான பொறிமுறையை ஏற்படுத்துமாறு அறிவுறை வழங்கினார்.




Comments