இன்று சூரிய கிரகணம், யார் கவனமாக இருக்க வேண்டும்?

 இன்று சூரிய கிரகணம், யார் கவனமாக இருக்க வேண்டும்?

2022ம் ஆண்டின் பகுதி சூரிய கிரகணம் – நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீசுபக்ருத் வருஷம் – தக்ஷிணாயனம் – சரத் ரிது – துலா ரவி – ஐப்பசி மாதம் 08 ஆம் திகதி (25.10.2022) செவ்வாய்க்கிழமை – அமாவாசை திதி – ஸ்வாதி நக்ஷத்ரத்தில் மாலை மணி 5.14 க்கு ஆரம்பித்து மாலை மணி 5.42 க்கு முடிவடைகிறது. கேது க்ரஸ்தமான இந்தப் பகுதி சூர்ய கிரகணம் தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவில் தெரியும்.

சூரியன் – சந்திரன் – பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் போது கிரகணம் என்பது ஏற்படும். அறிவியல் படி சந்திரனானது சூரியனுக்கும் பூமிக்கும் இடையே வரும் போது சந்திரனால் சூரியன் மறைக்கப்படுவதால் பூமியில் உள்ள நம் கண்களுக்கு சூரியன் தெரியாமல் போகின்றது. இதையே சூரிய கிரகணம் என்கிறோம். கிரகணம் என்றால் பற்றுவது என்று பொருளாகும். அமாவாசையன்றுதான் இந்தச் சூரிய கிரகணம் நிகழும்.

முழு சூரிய கிரகணத்துக்கும் பகுதி சூரிய கிரகணத்துக்கும் என்ன வித்தியாசம்?

முழுவதுமாக சூரியனை சந்திரன் மறைக்கும் போது பூமி இருளாகும். வெப்பநிலையிலும் கூட கடும் மாறுபாடு ஏற்படும். அதனால்தான் சந்திர கிரகணத்தை விட சூரிய கிரகணத்திற்கு அதிக முக்கியத்துவமும் அளிக்கப்படுகிறது. பல பேர் பயப்படுவதும் அதற்குத்தான். பகுதி சூரிய கிரகணம் என்பது சந்திரன் சூரியனுடைய ஒரு பகுதியை மட்டும் மறைக்கும் போது ஏற்படுவது. இந்தக் கிரகணமானது இந்தியாவில் தெரியும்.

ஜோதிட ரீதியாக ராகு அல்லது கேதுவின் பாகையில் சூரியன் – சந்திரன் இணையும் போது சூரிய கிரகணம் ஏற்படும். சூரியன் சந்திரன் ஒரே பாகையில் இருக்கும் போது அமாவாசையாகும். அதேபோல் சூரியனும் சந்திரனும் நேர்கோட்டில் பயணிக்கும் போது ராகுவையோ அல்லது கேதுவையோ தொடும் போது சந்திர கிரகணம் ஏற்படும். சூரியனும் சந்திரனும் நேர்கோட்டில் அதாவது 180 பாகையில் இருப்பது பௌர்ணமியாகும்.

தற்போது ராகுவின் சாரம் பரணி 2ஆம் பாதத்திலும் கேதுவின் சாரம் ஸ்வாதி 4ஆம் பாதத்திலும் நிற்க – ஒடோபர் 25ஆம் திகதி அமாவாசை அன்று சூரியனும் சந்திரனும் இணைந்து ஸ்வாதி நக்ஷத்திரத்தில் சந்திக்கும் போது கிரகணம் ஏற்படுகிறது.

விதிகள் – இந்த விதிகளானது எந்தக் காலத்திலும் பின்பற்ற வேண்டியவை:


1. வெறும் கண்களால் கிரகணத்தை பார்க்கக் கூடாது.

2. அதற்கென இருக்கக்கூடிய கண்ணாடிகளைக் கொண்டு பார்க்கலாம்.

3. கர்ப்பிணிகள் கிரகண சமயத்தில் வெளியில் செல்லக்கூடாது.

4. கிரகண நேரத்தில் உணவு சாப்பிடக் கூடாது.

5.முடிந்தவரை குலதெய்வத்தையும் – முன்னோர்களையும் – இஷ்ட தெய்வத்தையும் வணங்குதல் நலம்.

6. 1 வயது குறைவான குழந்தைகளை வெளியில் அழைத்துச் செல்லக்கூடாது.

7. கிரகணம் முடிந்தவுடன் வீட்டை கோமியம் – மஞ்சள் பொடி கலந்த நீரினால் சுத்தம் செய்வது நன்மை தரும்

8. கிரகணத்திற்குப் பிறகு எந்தெந்த நக்ஷத்ரகாரர்களுக்கு பிடித்திருக்கிறதோ அவர்கள் சாந்தி பரிகாரம் செய்து கொள்வது அவசியம்.

9. கிரகணம் நடக்கும் போது உணவுப் பொருட்களில் தர்ப்பை புல் போட்டு வைத்திருப்பது நலம் பயக்கும்.

10. கிரகணம் ஆரம்பிக்கும் போது தர்ப்பணம் செய்ய வேண்டும்.

கிரகண தோஷங்கள்

1. ஜெனன கால ஜாதகத்தில் ராகு, கேது இருக்கும் அதே ராசிகளில் கிரகண தோஷம் ஏற்பட்டால் தோஷம் ஏற்படும். உதாரணமாக தற்போது ராகு மேஷ ராசியிலும் கேது துலா ராசியிலும் சஞ்சரிக்கிறார்கள். யாருக்கெல்லாம் பிறக்கும் போது ஜெனன கால ஜாதகத்தில் மேஷம் அல்லது துலாத்தில் ராகுவோ கேதுவோ இருந்தால் கிரகண தோஷம் ஏற்படும்.

2. கிரகணம் ஏற்படும் மாதங்களில் பிறந்தவர்களுக்கும் தோஷம் ஏற்படும். உதாரணமாக தற்போது கிரகணம் ஏற்படுவது ஐப்பசி மாதத்தில். எனவே யாரெல்லாம் ஐப்பசி மாதத்தில் பிறந்திருக்கிறார்களோ அவர்களுக்கு தோஷம் ஏற்படும்.

3. கிரகணம் ஏற்படும் ராசிகளில் பிறந்தவர்களுக்கு தோஷம் ஏற்படும். உதாரணமாக தற்போது கிரகணம் ஏற்படுவது ஸ்வாதி நக்ஷத்திரத்தில். எனவே துலா ராசியில் பிறந்தவர்களுக்கு தோஷம் ஏற்படும்.

4. இதைத் தவிர கிரகணம் ஏற்படும் நக்ஷத்திரங்களில் பிறந்தவர்களுக்கும் அந்த நக்ஷத்திரத்தின் ஜென்மாதி ஜென்ம மற்றும் அனுஜென்ம நக்ஷத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் தோஷம் ஏற்படும். உதாரணமாக அக்டோபர் 25ஆம் திகதி நிகழக்கூடிய பகுதி சூரிய கிரகணமானது ஸ்வாதி 4ஆம் பாதத்திலும் பரணி 2ஆம் பாதத்திலும் நிகழ்கிறது. எனவே பரணி – பூரம் – பூராடம் மற்றும் திருவாதிரை – ஸ்வாதி – சதயம் ஆகிய நக்ஷத்ரகாரர்களுக்கும் தோஷம் ஏற்படும்.

பரிகாரம் செய்து கொள்ள வேண்டிய நட்சத்திரங்கள் – திருவாதிரை, சித்திரை, ஸ்வாதி, விசாகம், சதயம்.

சொல்ல வேண்டிய மந்திரம்

சூரியனுடைய மந்திரமான ஆதித்யஹ்ருதயம் மற்றும் சிவனுடைய தோத்திரங்கள் – சிவபுராணம் – ருத்ரம் ஆகியவை சொல்லலாம். முடியாதவர்கள் ஓம் நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை சொல்லலாம். மேலும் அபிராமி அந்தாதியும் சொல்லலாம்.

Comments