மட்டக்களப்பில் விளையாட்டு துறையில் சாதனை படைத்த வீர வீராங்கனைகளுக்கு வர்ணவிருதுகள்!!

 மட்டக்களப்பில் விளையாட்டு துறையில் சாதனை படைத்த வீர வீராங்கனைகளுக்கு வர்ணவிருதுகள்!!



மட்டக்களப்பு மாவட்ட செயலகம் முதல்தடவையாக பெருமையுடன் நடாத்திய வர்ண விருதுகள் வழங்கும் பிரபாண்டமான நிகழ்வு மட்டக்களப்பில் மிகவும் கோலாகலமாக இடம்பெற்றுள்ளது.

கடந்த 2019 ஆண்டு தொடக்கம் 2021 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள் மாகாண மட்டம், தேசிய மட்டம் மற்றும் சர்வதேச ரீதிகளில் வெற்றி பெற்று மட்டக்களப்பு மாவட்டத்துக்கு பெருமை சேர்த்த சாதனை வீர வீராங்கணைகளை கௌரவிக்கும்  வர்ண விருதுகள் - 2022  நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் அவர்களின் தலைமையில்  (13) திகதி மாலை தேவநாயகம் மண்டபத்தில்  நடைபெற்றது.  இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுணர் அனுராதா ஜஹம்பத் அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன், குறித்த நிகழ்விற்கு முதன்மை விருந்தினர்களாக கிராமிய வீதி அபிவிருத்து மற்றும் உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன்,கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் வல்லிபுரம் கனகசிங்கம், சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் புளோரன்ஸ் பாரதி கெனடி உள்ளிட்டோர் கலந்து சிறப்பித்துள்ளனர்.

தேசிய, மாகாண, மாவட்டம் மற்றும் சர்வதேச ரீதியில் விளையாட்டு துறையில் வெற்றியீட்டி சாதனை படைத்த விளையாட்டு வீர வீராங்கனைகள் இதன் போது பாராட்டி நினைவுச்சின்னங்கள் வழங்கி அதிதிகளால் கௌரவிக்கப்பட்டுள்ளனர். இதன்போது மாவட்டத்தில்  அர்ப்பணிப்புடன் செயற்பட்ட உத்தியோகத்தர்கள், விளையாட்டு பயிற்றுனர்கள், விளையாட்டு உத்தியோகத்தர்கள், உற்பத்தித் திறன் போட்டியில் தேசிய ரீதியில் வெற்றி பெற்றுள்ள பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்கள் மற்றும் அனுசரனையாளர்கள் இதன் போது சிறப்பு விருதுகள் வழங்கி அதிதிகளினால் கௌரவிக்கப்பட்டிருந்தனர். 

அத்தோடு 2021 ஆம் ஆண்டு தேசிய ரீதியில் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் உயிரியல் விஞ்ஞான துறையில் அகில இலங்கை ரீதியில் முதலாவது இடத்தை பெற்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த மட்டக்களப்பு புனித மிக்கேல். கல்லூரி தேசிய பாடசாலையின் மாணவன்  தமிழ்வாணன் துவாரகேஷ், பௌதிக விஞ்ஞான துறையில் அகில இலங்கை மட்டத்தில் நான்காவது இடத்தையும் மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தையும் சாதித்த செங்கலடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் மாணவன் லோகிதன்  கிசோபன் ஆகிய இரு மாணவர்களும் இதன்போது விசேட நினைவுச்சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்கள்.

இதன்போது மாவட்ட செயலகத்திற்கென ஒரு கீதம் இயற்றப்பட்டு வெளியீட்டு வைக்கப்பட்டதுடன், "வெற்றி நினைவு மலர்" வெளியிடும் இதன்போது இடம்பெற்றுள்ளது. இதன்போது வெற்றி நினைவு மலரின் சிறப்புப் பிரதிகள் அதிதிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டதுடன், மாவட்ட செயலக கீதத்தினை இயற்றி இசையமைப்பதற்காக சகல வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்கிய ஓய்வு நிலை கிராம உத்தியோகத்தர் சயனெளிபவன் மற்றும் இசையமைத்து பாடிய சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் உள்ளிட்ட விரிவுரையாளர்களும் இதன்போது பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டுள்ளனர். 

மண்முனை வடக்கு கலாசார மத்திய நிலையம் மற்றும் சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் மாணவர்களினால் அழகிய கண்கவர் கலைப்படைப்புக்கள் இதன் அரங்கேற்றப்பட்டதுடன், கராட்டி தற்காப்பு கலை தொடர்பான மாணவர்களின் நிகழ்வும் அரங்கேற்றப்பட்டிருந்தது. குறித்த நிகழ்விற்கு மேலதிக அரசாங்க அதிபர்களான சுதர்சனி ஸ்ரீகாந்த்,  நவரூபரஞ்ஜனி முகுந்தன் (காணி / விளையாட்டு),  மாவட்ட செயலக பிரதம கணக்காளர் இந்திராவதி மோகன், உதவி மாவட்ட செயலாளர் ஏ. நவேஸ்வரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணியமூர்த்தி, மாவட்ட செயலக கணக்காளர் எம். வினோத், மாவட்ட செயலக நிருவாக உத்தியோகத்தர் கே.தயாபரன், மாவட்ட செயலக பொறியியலாளர் ரீ.சுமன், மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன், மாவட்ட செயலக விளையாட்டு உத்தியோகத்தர் வீ.ஈஸ்வரன், மாவட்ட செயலகத்தின் கிளைத்தலைவர்கள் உள்ளிட்ட  மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள், சாதனை மாணவர்களின் பெற்றோர் என பெருமளவிலானோர் இதன்போது கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்துள்ளனர்.





















Comments