றஹ்மத் நகரில் ஆழ்துளைக்கிணறு அமைக்கப்பட்டு குடிநீர் விநியோகம்......

 றஹ்மத் நகரில் ஆழ்துளைக்கிணறு அமைக்கப்பட்டு குடிநீர் விநியோகம்......



கோறளைப்பற்று மேற்கு பிரதேசத்தில் குடிநீர் பிரச்சினைகளை எதிர்கொண்டு வரும் கிராமத்து மக்களது குடிநீர் தேவைகளை நிறைவேற்றும் வகையில் பல்வேறு வேலைத்திட்டங்கள் பிரதேச சபையினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எரிபொருள் விலையேற்றம், எரிபொருள் தட்டுப்பாடு போன்ற சவால் மிக்க சூழ்நிலையில் தவிசாளரின் பணிப்புரைக்கு அமைவாக பல கிராமங்களுக்கு தண்ணீர் பௌசர்கள் மூலம் குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குடிநீர் விடயத்தில் மக்கள் நிரந்தரமான தீர்வினை பெற்றுக்கொள்ளும் வகையில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் ஊடாக குடிநீர் குழாய் பதிக்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கு மேலதிகமாக அரச சார்பற்ற நிறுவனங்கள் ஊடாக பொருத்தமான இடங்களில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டு குடிநீர் விநியோகிக்கப்படுகின்றன.

கடந்த வாரம் றஹ்மத் நகர் கிராமத்தில் எம்.ஐ.றிஸ்வி மௌலவி அவர்களின் முயற்சியின் பயனாக ஜே.ஜே நிறுவனத்தினால் நிர்மானிக்கப்பட்ட ஆழ்துளைக் கிணற்றை மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கும் நிகழ்வில் கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.நௌபர், மஜ்மா நகர் கிராம சங்க தலைவர் ஏ.எல்.சமீம், றஹ்மத் நகர் ஜும்ஆபள்ளிவாயல் நிர்வாகத்தினர் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர்.




Comments