நாட்டில் 96 இலட்சம் பேர் வறுமையில் : மரணிக்காமலிருக்க 4 பேர் கொண்ட குடும்பத்தின் செலவு 60 ஆயிரம் ரூபா - ஹர்ஷ டி சில்வா
நாட்டில் 96 இலட்சம் பேர் வறுமையில் : மரணிக்காமலிருக்க 4 பேர் கொண்ட குடும்பத்தின் செலவு 60 ஆயிரம் ரூபா - ஹர்ஷ டி சில்வா.......
இலங்கையின் மொத்த சனத் தொகை 220 இலட்சமாகும். அதில் 96 இலட்சம் பேர் தற்போது வறுமையின் பிடியில் உள்ளனர் என புள்ளிவிபரங்களின் ஊடாக கணிப்பிட முடிந்துள்ளது. அவ்வாறான பின்னணியில், மரணிக்காமல் வாழ ஒரு நபருக்கு தேவைப்படும் தலா வீத சக்தி வள நுகர்வு (கிலோ கலோரி) 2030 ஆகும். அதனை பெற்றுக்கொள்ள மட்டும் கொழும்பில் 4 பேர் கொண்ட ஒரு குடும்பம் 60 ஆயிரம் ரூபாவை மாதம் செலவழிக்க வேண்டியுள்ளது.
இவ்வாறான நிலையில், அரசாங்கம் எந்த பகுப்பாய்வுகளும் இன்றி கோட்டா அரசாங்கம் செய்த அதே பிழையை மீண்டும் செய்து நடைமுறை சாத்தியமற்ற புதிய வரிகளை விதித்துள்ளது. இது பாரிய பிரச்சினைகளை தோற்றுவிக்கும்.' என ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். கொழும்பில் ( 23) அவர் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த விடயங்களை அவர் புள்ளி விபரங்களுடன் ஒப்புவித்தார்.
நாட்டில் நாம் நினைத்ததை விட வறுமை கோலோச்சி உள்ளது. 2019 ஆம் ஆண்டு, அதாவது கோட்டாபய ராஜபக்ஷவிடம் நாட்டை ஒப்படைக்கும் போது நாட்டின் வறுமை நிலை 3.2 ஆக இருந்தது. எனினும் புதிய சுட்டெண் பிரகாரம் 2022 ஆகஸ்ட் மாதம் இலங்கையின் வறுமை நிலையானது 14.3 வீதமாக அதிகரித்துள்ளது.வறுமை என்பது, உணவு, உடை, உறைவிடம், பாதுகாப்பான குடிநீர், கல்வி பெறும் வாய்ப்பு, பிற குடிமக்களிடம் மதிப்புப் பெறுதல் போன்றவை உட்பட்ட, வாழ்க்கைத் தரத்தைத் தீர்மானிப்பவற்றை இழந்த நிலையாக நவீன சுட்டெண்களில் கணிக்கபப்டுகின்றது. எனினும் இந்த 14.3 வீதம் எனும் இலங்கையின் வறுமை நிலையானது.அவை எதனையும் கருத்தில் கொள்ளாது வெறுமனே வருமானம் மற்றும் செலவை மட்டும் மையப்படுத்தி கணிக்கப்பட்டுள்ள நிலையாகும்.
அதன்படி, ஒரு மனிதன் மரணிக்காமல் உயிர் வாழ்வதற்கு தேவையான மிகக் குறைந்த அளவிளான சக்தி வள நுகர்வு (கிலோ கலோரி) அளவிடப்படுகின்றது. மக்கள் அதனை சோறு, மா உணவுப் பண்டங்கள், பழங்கள், பானங்கள், சிலர் சொக்லேட் வகைகள் உள்ளிட்ட பல உணவுகள் ஊடாக பெற்றுக்கொள்கின்றனர். அதன்படி ஒரு மனிதன் மரணிக்காமல் இருக்க குறைந்த பட்சம் 2030 கிலோ கலோரியை எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த தொகையை பெற கடந்த 2019 ஆம் ஆண்டு 4 பேர் கொண்ட ஒரு குடும்பம் மாதம் 27,864 ரூபாவை செலவழிக்க வேண்டி இருந்தது. ஆனால் இன்று ( 2022 ஆகஸ்ட் மாத நிலவரப்படி) அதே நான்கு பேர் கொண்ட குடும்பம் 53,840 ரூபாவை செலவழிக்க வேண்டி உள்ளது. கொழும்பில் இந் நிலைமை மேலும் மாற்றமானதாகும். கொழும்பில் ஒரு குடும்பம் 60 ஆயிரம் ரூபா வரை செலவு செய்ய வேண்டியுள்ளது.
இலங்கையின் சனதொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் தரவுகள் படி, உணவுப் பணவீக்கம் 133 வீதமாகும். இது ஒவ்வொரு நாளும் கூடிச் செல்லும். அப்படியானால் கொழும்பில் இன்று உயிர் வாழ்வதற்காக மட்டும் பெற்றுக்கொள்ளக் கூடிய மிகக் குறைந்தபட்ச கலோரி நுகர்வுக்காக செலவு செய்ய வேண்டிய தொகை 65 ஆயிரத்தை தாண்டி இருக்கும்.
இலங்கையின் சனத் தொகை 220 இலட்சமாகும். அப்படியானால், 2019 ஆம் ஆண்டு இலங்கையின் வருமை நிலை 3.2 என்பது அப்போது 30 இலட்சம் பேர் வறுமையின் கீழ் வாழ்ந்துள்ளனர். அந் நிலைமை தற்போது 14.3 வீதமாக அதிகரித்துள்ளமையானது மொத்த சனத் தொகையில் 96 இலட்சம் பேர் வறுமையில் வாடுவதாக அர்த்தமாகும். இது 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது 3 மடங்கு அதிகரிப்பாகும்.
இவ்வாறானதொரு பின்னணியிலேயே நாம் இன்று வரி மற்றும் பொருளாதார மறுசீரமைப்புக்கள் தொடர்பில் ஆராய வேண்டியுள்ளது. 2020 ஆம் ஆண்டு நாம் சர்வதேச நாணய நிதியத்தை நாடுமாறு கூறினோம். ஆனால் கேட்கவில்லை. இப்போது நிலைமை மாற்றமானது. சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தம் பிரகாரம் வரி வருமாணத்தை அதிகரிக்க வேண்டும் என சிலர் கூறுகின்றனர். அதற்காக வேறு வழியின்றி வரிகளை அதிகரித்துள்ளதாக கூறுகின்றனர். ஒரு இலட்சம் ரூபா வருமானம் பெறும் ஒருவரும் வருமான வரி செலுத்த வேண்டியுள்ளது. நிலைமையை கொஞ்சம் சிந்திக்க வேண்டும். 4 பேர் கொண்ட குடும்பத்துக்கு மரணிக்காமல் இருக்கவே 60 ஆயிரம் தேவைப்படும் நிலையில், கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, வீட்டு வாடகை என அடிப்படை வசதிகளை கூட ஒரு இலட்சம் ரூபாவால் நிறைவேற்ற முடியாது. அப்படி இருக்கையில் அவர்கள் வருமான வரி செலுத்த வேண்டும் என்பது நடைமுறை சாத்தியமா?
2019 இல் கோட்டாபய ராஜபக்ஷ வரி குறைப்பினை செய்த போது, எந்த பகுப்பாய்வுகளையும் செய்யாது முன்னெடுத்தார். அதே தவறை இந்த அரசாங்கம் இப்போது வரி அதிகரிப்பை முன்னெடுக்கும் போது செய்கின்றது. மக்கள் தொடர்பில் ஆராயாமல்இ நடைமுறை சாத்தியமற்ற வகையில் வரி நடமுறைகளை, விகிதங்களை அரசாங்கம் மாற்றுகின்றது. இது அரசை மேலும் சிக்கலுக்குள்ளேயே தள்ளும். சர்வதேச நாணய நிதியம் வரி வருமானத்தை அதிகரிக்க வேண்டும் என நிபந்தை விதித்திருப்பின்இ அந்த நிபந்தனையை நிறைவேரறற சாதகமான வழிகள் உள்ளன. அதனை பகுப்பாய்வு செய்ய வேண்டும்.
ஒழித்து மறைத்து இதனைச் செய்ய முடியாது. வெளிப்படைத் தன்மையோடு ஆராய்ந்து, பகுப்பாய்வுச் செய்து வரி வருமானத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கலாம். உதாரணமாக, வங்கிகளில் சேமிப்புக்கள் தொடர்பில் 5 வீத வரியே தற்போது அறவிடப்படுகின்றது. இதனை 10 வீதமாக அதிகரித்தால் மட்டும் 75 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டலாம். இது மத்திய வர்க்கத்தை பாதிக்காது. பெரும்பாலும் செல்வந்த வர்க்கத்துக்கே இந்த வரியை செலுத்த வேண்டி ஏற்படும். இது பாதிப்பற்ற நடமுறை. இவ்வாறான பல வழிகள் உள்ளன. எம்முடன் கலந்து பேசுங்கள். மக்கள் மீது சுமையை சுமத்துவதை விடுத்து, வரி வருமானத்தை அதிகரிப்பதை மட்டும் ஆராயாது, செலவீனங்களை குறைப்பது குறித்தும் ஆராயுங்கள். 96 இலட்சம் பேர் வறுமை கோட்டின் கீழ் இருக்கும் நாட்டில் இத்தனை பெரிய அமைச்சரவை, இராஜாங்க அமைச்சுக்கள் எதற்கு. அதனை கட்டுப்படுத்துவதன் ஊடாக எவ்வளவு செலவுகளைக் குறைக்கலாம். இவை குறித்தும் ஆராய வேண்டும்.' என ஹர்ஷ டி சில்வா எம்.பி. குறிப்பிட்டார்.
Comments
Post a Comment