ஒக்டோபர்-17லும்-மாசிலாமணி நடேசராஜா அவர்களும்.....

ஒக்டோபர்-17லும்-மாசிலாமணி நடேசராஜா அவர்களும்.....



 'இருந்தாலும் மறைந்தாலும் பெயர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்' இது ஒரு பாடலின் வரி இதில் இருக்கும் உண்மையான விடயத்தை கொண்ட ஒரு மனிதர் தான் மாசிலாமணி நடேசராசா அவர்கள். இன்று அவர் இப்பூமியில் அவதரித்த நாள் (2022.10.17) இந்நாளில் மீண்டும் ஒரு முறை அவரைப் பற்றி  எனக்கு எழுதக் கிடைத்தற்கு முதல் இறைவனுக்கு நன்றி கூற வேண்டும்.

ஒக்டோபர்-17 இன்றைய நாள் சமுர்த்தி அபிவிருத்தி தினைக்களத்தினால் அன்றே  வறுமை ஒழிப்பு தினம் என அறிவிக்கப்பட்டிருந்தது, என்ன ஒற்றுமை சிந்தித்து பாருங்கள் சமுர்த்தி திட்டத்திற்கே தன் வாழ்நாளை அர்ப்பணம் செய்த மாமனிதர் மாசிலாமணி நடேசராஜா அவர்கள் இவ்வுலகில் அவதரித்ததும் ஒக்டோபர்-17.

    வாழைச்சேனையை பிறப்பிடமாகக் கொண்ட இவர் தம் கல்வியை வந்தாறுமூலை மகா வித்தியாலத்தில் கற்று பட்டதாரி ஆனார். சிறைச்சாலை அதிகாரியாக கடமையாற்றி வந்த இவர் அதிலிருந்து விடைபெற்று சமுர்த்தி திட்டம் ஆரம்பமான போது வடகிழக்கு மற்றும் மலையக பகுதிகளுக்கான திட்டமிடல் பணிகளை செயற்படுத்துபவராக அறிமுகமானார்.

 வடகிழக்கின் சமுர்த்தியின் தந்தை என வர்ணிக்கப்பட்ட இவர் சமுர்த்தி திட்டத்தின் ஆரம்ப கட்ட முன்னேற்பாடுகளான சமுர்த்தி உத்தியோகத்தர் நியமனம் தொடக்கம், அவர் ஓய்வு பெறும் வரை சமுர்த்திக்காக தன் வாழ்வை அர்பணித்து வாழ்ந்து வந்த ஒரு சிறந்த மனிதர். இதனால் பல சமுர்த்தி உத்தியோகத்தர்களின் வாழ்வில் இவர் மறைந்தாலும் இன்றும் ஓர் ஒளிக்கீற்றாக திகழ்கின்றார். நடையில் ஒர கம்பீரம்,  உடையில் ஒரு நேர்த்தி, பார்வையில் ஒரு மிரட்டல் கொண்ட இவரை யாரும் பார்த்தால், அவர்களுக்கு இவர் மேல் முதலில் பயமே  ஏற்படும், ஆனால் இவருடன் நெருங்கி பழகினால் தான் தெரியும் இவரின் அன்பும் பாசமும். தனக்கு தெரிந்தவற்றை பலருக்கும் தெரியப்படுத்துவது மாத்திரமின்றி மும் மொழிகளிலும் தேர்ச்சி பெற்ற ஒரு மகத்தான உயர்ந்த மனிதன் மொழி பெயர்ப்பில் தனக்கென்று ஒரு பாணியை வைத்து பலரும் சுவாரஸ்சியமாக கேட்கும் வண்ணம் செயற்படும் இவருக்கு நிகர் இவரே. சமுர்த்தி திட்டம் ஆரம்பிக்கப்பட்ட போதிலிருந்து இருந்து தான் ஓய்வு பெறும் வயது வரை சமுர்த்திக்காக அர்பனித்து பணியாற்றிய ஒரு நல்ல மனிதர்.

  யாருக்கும் சமுர்த்தி விடயம் தொடர்பாக பிரச்சனையா? இவரை நாடி தம் பிரச்சனைகளை தீர்காதவர்கள் சமுர்த்தியில் யாரும் இருக்க மாட்டர்கள். இவர் சமுர்த்தி திட்டத்தின் முதுகெழும்பாக வடகிழக்கில் செயற்பட்டதை தேசிய மட்டத்தில் இருந்த பணிப்பாளர்களே உணர்ந்து இவருக்கு பல அதிகாரங்களை வழங்கி செயற்படுத்த வைத்தனர்.

சமுர்த்தி வங்கி குறுநிதியம்இ வாழ்வாதாரம், உட்கட்டமைப்பு, ஆன்மீகம், போன்றவற்றை நிலை நிறுத்தி, சமுர்த்தி திட்டத்தை தினம் தினமாய் வடிவமைத்து செயற்படுத்திய ஒரு திட்ட செயல்பாட்டாளர் ஆவார்.

மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தமட்டில் தான் பிறந்த மாவட்டம் எனும் எனக்கருத்தைக் கொண்டு பல வேலைத்திட்டங்களையும், செயற்பாடுகளையும் நடைமுறைப்படுத்திய செயல் வீரன் தான் இவர். புதிது புதிதாக பல சமுர்த்தி வேலைத்திட்டங்களை மட்டக்களப்பில்  நடைமுறை படுத்திய வெற்றி கண்டவர். மட்டக்களப்பு மாவட்டத்தில் இவரால் நடாத்தப்பட்ட மாபெரும் வாழ்வாதார சுயதொழில் கண்காட்சியை யாரால் தான் மறக்க முடியும். அது மாத்திரமன்றி வாழ்வாதாரத்தை மேம்படுத்த பயனாளிகளுக்கு ஆட்டோ வழங்கி சாதனை படைத்தவர். சமுர்த்தி வங்கிகளை கணனி மயமாக்கலின் அன்றைய முன்னோடியாக செயற்பட்டவர், வெள்ள அனர்த்தம் ஏற்பட்ட போது மக்களுக்கான நிவாரணத்தை பிற மாவட்டத்தில் இருந்து கொண்டு வந்தது மாத்திரமின்றி, உத்தியோகத்தர்களுக்கு வெள்ள அனர்த்த இடர் கடன் வழங்க முன்னின்று உழைத்தவர், வறிய மாணவர்களின் கல்வி வளர்சிக்கு உதவியவர் மற்றும் திவிநெகும வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க மிக மும்முரமாக செயற்பட்ட செயல் வீரன்.

பணி நேரத்தில் கர்சிப்பவராகவும், பணி முடிந்த பின் எப்போதும் நகைச்சுவையாளராகவும் இருக்கும் இவரிடம் சகல சமுர்த்தி உத்தியோகத்தர்களும் பயம் கூர்ந்த அன்பையே வெளிப்படுத்தி வந்தனர். சமுர்த்தி உத்தியோகத்தர்களை இந்த இலங்கை முழுவதும் சுற்றுலாவாக அழைத்துச் சென்று தான் கண்டவற்றை யாவரும் அறிய வேண்டும் எனும் உன்னத நோக்கை கொண்டு எல்லோரையும் மகிழ்வித்த ஒரு பொக்கிசம் தான் இவர். 

இவரின் ஓய்வு காலம் நெருங்கி வருவதை உணர்ந்த ஒவ்வொரு பிரதேச செயலக சமுர்த்தி உத்தியோகத்தர்களும் அவரை அழைத்து கண்ணீர் மல்க விடைகொடுத்ததை யாரும் மறக்கவோ மறுக்கவோ முடியாது அப்பேற்பட்ட ஒரு நல்ல மனிதராக இவர் எல்லோர் மனதிலும் பதிந்திருந்ததை அவதானிக்க முடிந்தது.

காலத்தின் முடிவு என்று ஒன்று இருக்கின்றது அது யாரையும் விட்டு வைப்பதாக இல்லை அதுவும் அவரை தேடியே வந்தது. நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர் சில காலம் நோய்வாய் பட்டிருந்து இயற்கையை எய்தினார். இவரின் மகத்தான சேவைக்கு சமுர்த்தி உத்தியோகத்தர்கள் கண்ணீர் மல்க விடை கொடுத்ததை யாராலும் இன்றும் மறக்க முடியாத உண்மை .......

 'இருந்தாலும் மறைந்தாலும் பெயர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்'

என்றும் அன்புடன்......

பா.ஜெயதாசன்

சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்

மாவட்ட செயலகம், மட்டக்களப்பு.

2022.10.17

இவரால் நடாத்தப்பட்ட உற்பத்தி மற்றும் வர்த்தக கண்காட்சி










வாழ்வாதார உதவிகள் வழங்கிய போது



வெள்ள நிவாரணம் பெற்றுத்தந்த போது 



கல்விக்கு உதவிய போது


நிகழ்வுகளில் கலந்து கொண்ட போது



திவிநெகும வேலைத்திட்டம் ஆரம்பித்த போது




சமுர்த்தி வங்கி கணனி மயமாக்கலின் போது









Comments