04.நீல் சண்முகம் சிறந்த சுழல் பந்து வீச்சாளராக திகழ்ந்த ஒருவர்..... இலங்கை கிரிக்கெட் அணியில் விளையாடிய தமிழர்கள்...........

 04.நீல் சண்முகம் சிறந்த சுழல் பந்து வீச்சாளராக திகழ்ந்த ஒருவர்.....  இலங்கை  கிரிக்கெட் அணியில் விளையாடிய தமிழர்கள்........... 

இலங்கையில் 1960 தொடக்கம் 1974 காலப்பகுதியில் சிலோன் அணிக்காக தன் மாயாஜால சுழல் பந்து வீச்சு மூலம் கலக்கிய ஒரு வீரர் தான் டன்கீர்க் நீலோந்திரன் சண்முகம் என்பவர் ஆவார். இவர் 1940ம் ஆண்டு மே 13 திகதி கொழும்பில் பிறந்தார். கல்கிசை சென் தோமஸ் கல்லூரியிலும், கொழும்பு பல்கலைகழகத்திலும் தன் கல்வியை தொடர்ந்த இவர் தன்னை ஒரு ஓவ் ஸ்பின் (சுழல் பந்து) வீச்சாளராகவே தன்னை நிரூபித்து அணியில் இடம் பிடித்துக் கொண்டார். வலது கை பந்து வீச்சாளராகவும், வலது கை கீழ் நிலை துடுப்பாட் வீரராகவும் தன்னை நிலை நிறுத்திய வீரர் ஆவார்.

 இவர் 1958ல் மைக்கல் திசேராவின் தலைமையின் கீழ் மௌன்ட் லெவன்யா புனித தோமஸ் கல்லூரிக்கும், 1959ல் டெனிஸ் பேர்னாட்டின் தலைமையில் ரோயல் கல்லூரிக்கும் எதிராகவும் பாடசாலை சமரில் களம் கண்டவர் என்பது குறிப்பிடத்தக்க விடமாகும்.   1964ல் பாகிஸ்தான் A அணியை பி சரா ஓவல் மைதானத்தில்  அதிகாரபூர்வ மற்ற டெஸ்ட் போட்டியில் சிலோன் அணி வெற்றி பெறுவதற்கு 28 ஓட்டங்களுக்கு 04 விக்கெட்டுக்களை கைப்பற்றி இருந்தார். 1964-65 காலப்பகுதியில் இந்தியாவிற்கான சுற்றுப்பயணத்தை மேற் கொண்டு உத்தியோகபூர்வமற்ற முதல் வெற்றியை சிலோன் அணி பெற்றுக் கொண்ட போது  இலங்கை அணியில் இடம்பிடித்த ஒரு வீரர் ஆவார். இதனைத் தொடர்ந்து 1966-67 காலப்பகுதியில் பாகிஸ்தானுக்கான சுற்றுத் தொடரிலும் தன்னை இணைத்துக் கொண்ட வீரர் ஆவார்.


1967ல் பி.சரா ஓவல் மைதானத்தில் மேற்கிந்திய தீவு அணிக்கெதிராக நடைபெற்ற 04 நாள் அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் 10 இலக்க வீரராக களம் வந்து 72 ஓட்டங்களை பெற்று தன்  அதிக பட்ச ஓட்டங்ளை பதிந்து கொண்டார்.

இவரது வாழ்கையில் மறக்க முடியாத தருனமாக 1969 அக்டோபரில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி அமைந்தது, அப்போட்டியில் முதல் இனிங்சில் 47 ஓட்டங்களுக்கு 05 விக்கெட்டுக்களையும் இரண்டாம் இனிங்சில் 43 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களையும் கைப்பற்றி இருந்தார். மிக முக்கிய விடயம் என்னவென்றால் அக்காலத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட அவுஸ்ரேலிய துடுப்பாட்ட வீரரான பில் லாரியை இரண்டு இனிங்சிலும் ஆட்டமிழக்கச் செய்துள்ளார், இப்போட்டியானது வெற்றி தோல்வியின்றி முடிவுக்கு வந்தது. இதுவே இவரது சிறந்த பந்து வீச்சாக இருந்து வருவது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

 இவர் 1984ல் இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற் கொண்ட இலங்கை அணி மற்றும் 1984-85ம் காலப்பகுதியில் அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணத்தை மேற் கொண்ட இலங்கை அணிக்கு முகாமையாளராகவும் கடமையாற்றியுள்ளார். இவர் முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணித்தலைவர் கேணல்  ஃபபிரெட்டிக் டி சாராமின் மகளான நீச்சல் வீராங்கனையும், டெனிஸ் வீராங்கனையான ஓஸா டி சாராவை மணந்தார் இவருக்கு 03 பிள்ளைகள் மூத்தவர் சண்முகம் அனூக் கோல்ப் வீரராகவும், சண்முகம் டெவின் நீச்சல் வீரராகவும் திகழ்ந்தனர். இருந்த போதிலும் இவரின் மகளான  தீபிகா சண்முகம் அவர்கள் இலங்கையில் இருந்து ஓலிம்பிக் போட்டிகளுக்கு சென்ற முதல் பெண் வீராங்கனை எனும் பெருமையை தக்க வைத்துள்ளார். நீல் சண்முகம் அவர்கள் ஒரு சிறந்த கோல்ப் வீரராகவும் தன்னை நிரூபித்துள்ளார். இவரின் சகோதரரான டென்னிஸ் ரவீந்திரன் சண்முகம் அவர்களும் இலங்கை அணிக்காக விளையாடிய வீரர் ஆவார்.

இவர் மொத்தமாக 21 முதல்தர போட்டிகளில் விளையாடி 593 ஓட்டங்களை பெற்றுள்ளதுடன், அதிகபட்டசமாக 72 ஓட்டங்களை பெற்று ஒரு அரை சதத்தை கடந்துள்ளார். இவர் 55 விக்கெட்டுக்களை கைப்பற்றி சிறந்த பெறுபேராக 47 ஓட்டங்களுக்கு 05 விக்கெட்டுக்களை கைப்பற்றி 13 பிடிகளை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்க விடயமாகும். 

 இவர்  பின் நாட்களில் இலங்கை தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தின் இயக்குணராக கடமையாற்றி இருந்தார். புற்று நோயால் பாதிக்கப்பட்ட இவர் தொடர்ச்சியாக 04 வருடங்கள் நோயினால் பல இன்னல்களின் மத்தியில் வாழ்ந்து 2014 ஏப்ரல் 22 அன்று தனது 73 வயதில் இவ்வுலகை விட்டு சென்றார்.

இலங்கை அணிக்காக விளையாடிய மற்றுமொரு தமிழரை பார்த்து விட்டோம் மற்றுமொருவரை தேடும் வரை உங்களிடம் இருந்து விலகி செல்கின்றேன் மீண்டும் சந்திப்போம்........






Comments