மட்டக்களப்பு மாவட்டம் கிழக்கின் சம்பியன்.....

 மட்டக்களப்பு மாவட்டம் கிழக்கின் சம்பியன்.....



கிழக்கு மாகாண விளையாட்டு விழாவின் 2022ம் ஆண்டுக்கான சம்பியனாக மட்டக்களப்பு மாவட்டம் வெற்றிவாகை சூடிக்கொண்டது.

கிழக்கு மாகாண விளையாட்டு விழா நிகழ்வுகள் கடந்த 22,23ம் திகதிகளில் கந்தளாய் லீலாரத்ன மைதானத்தில் நடைபெற்றது. ஆரம்பநாள் நிகழ்வுகளில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் கலந்து சிறப்பித்து போட்டிகளை ஆரம்பித்து வைத்த்தார்.
(23)ம் திகதி நிறைவு பெற்ற கிழக்கு மாகாண விளையாட்டு விழாவில் கிழக்கு மாகாணத்தினுடைய பல சாதனைகள் புதுப்பிக்கப்பட்டன. மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 200க்கு மேற்பட்ட வீர வீராங்கனைகள் இப்போட்டி நிகழ்ச்சிகளில் பங்குபற்றியிருந்தனர். அதன்படி சிறந்த சுவட்டு நிகழ்ச்சிக்கான வீராங்கனையாக அம்பாறை மாவட்டத்தினுடைய எதிரிவீர தெரிவுசெய்யப்பட்டார். அத்துடன் சிறந்த சுவட்டு நிகழ்ச்சிக்கான வீரராக திருகோணமலை மாவட்டத்தினுடைய A.நாசீக் தெரிவுசெய்யப்பட்டார். சிறந்த மைதான நிகழ்ச்சிக்கான வீராங்கனையாக மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த ஏ. தனுஷ்காவும் சிறந்த மைதான நிகழ்ச்சிக்கான வீரராக மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த S.ரதுஷனும் இதன்போது தெரிவு செய்யப்பட்டார்கள்.
கிழக்கு மாகாண விளையாட்டு விழாவினுடைய மிகச் சிறந்த மெய்வல்லுநர் நிகழ்ச்சியின் வீரராக ஈட்டியெரிதல் போட்டியில் கலந்துகொண்ட S.ரதுஷான் வெற்றிவாகை சூடினார். பெண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் 2ம் இடத்தை அம்பாறை மாவட்டமும் இப்போட்டியின் சம்பியனாக மட்டக்களப்பு மாவட்டமும் தெரிவாகியுள்ளது.
அதேபோன்று ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் 2ம் இடத்தை அம்பாறை மாவட்டமும் இப்போட்டியின் சம்பியனாக திருகோணமலை மாவட்டமும் தட்டிச் சென்றது. கிழக்கு மாகாண விளையாட்டு விழாவில் 2ம் இடத்தை அம்பாறை மாவட்டமும் சம்பியனாக மட்டக்களப்பு மாவட்டமும் தெரிவுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வெற்றிபெற்ற வீரவீராங்கனைகளுக்கு கிழக்கு மாகாண கல்வி விளையாட்டு அமைச்சினுடைய செயலாளர் H.E.M.W.G.திஸாநாயக்க சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கேடயங்களையும் சான்றிதழ்களையும் வழங்கி வைத்தார். கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட, விளையாட்டு திணைக்களத்தின் பணிப்பாளர் N.நௌபீஸ் தலைமையில் இடம்பெற்ற இவ்விளையாட்டு விழாவின் ஆரம்ப நாள் நிகழ்வுகளில் கிழக்கு மாகாணப் பிரதம செயலாளர் துஷித பி வணிகசிங்க, திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் B.H.N.ஜயவிக்ரம, கிழக்கு மாகாண அமைச்சினுடைய செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்துள்ளனர்.
இந்நிகழ்வுகளில் மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் V.ஈஸ்பரன் உள்ளிட்ட மாவட்டத்தில் கடமையாற்றும் விளையாட்டு உத்தியோகத்தர்களும், பயிற்றுவிப்பாளர்களும் கலந்துகொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.




Comments