சுற்றாடல் வாரத்தையொட்டி ஆற்றின் படுக்கைகள் மற்றும் வீதிகளில் மக்களால் வீசப்பட்டருந்த கழிவுகள் அகற்றும் பணி முன்னெடுப்பு!!

 சுற்றாடல் வாரத்தையொட்டி ஆற்றின் படுக்கைகள் மற்றும் வீதிகளில் மக்களால் வீசப்பட்டருந்த கழிவுகள் அகற்றும் பணி முன்னெடுப்பு!!



மட்டக்களப்பு வாவியின் அழகை மேம்படுத்தும் நோக்கோடு சுற்றாடல் வாரத்தையொட்டி நகர பிரதேச ஆற்றின் படுக்கைகள், பொதுமக்கள் கூடுமிடங்கள் மற்றும் வீதிகளில் வீசப்பட்டிருந்த கழிவுகள் (25) சேகரிக்கப்பட்டதோடு முருங்கை மரக் கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன.

மட்டக்களப்பு லயன்ஸ் கழகம் மாவட்டம் 306/C2, லியோ கழகம், வின்சன்ட் ரைட்டஸ் மற்றும் சிசிலியா பாடசாலைகளின் லியோ கழகங்கள் மட்டக்களப்பு மாநகரசபையுடன் இணைந்து சுற்றாடலை துப்பரவு செய்யும் பணிகளை மேற்கொண்டிருந்தது.

மட்டக்களப்பு லயன்ஸ் கழகத்தின் தலைவர் லயன் T.குணராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நகர புதுப்பாலத்திலிருந்து ஊறணி சந்திவரையுள்ள ஆற்றங்கரையில் வீதியில் பயணிப்போரால் வீசப்பட்டிருந்த கழிவுகள் சேகரிக்கப்பட்டன. 

மீனினங்கள், நண்டு மற்றும் இறால்களின் பெருக்கத்திற்காக ஆற்றங்கரையில் நாட்டப்பட்டுள்ள  மரங்களுக்கிடையில் வீசப்பட்டிருந்த உக்கும் கழிவுகள் மற்றும் உக்காத கழிவுகள் தரம் பிரிக்கப்பட்டு மாநகரசபையினால் வழங்கப்பட்ட பைகளில் சேகரிக்கப்பட்டு மாநகரசபை கழிவகற்றும் வாகனத்தில் ஏற்றி திருப்பெருந்துறை கழிவு முகாமைத்துவ நிலையத்திற்கு அனுப்பப்பட்டன.

மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன், லயன்ஸ் கழகத்தின் திட்ட இணைப்பாளர் A.செல்வேந்திரன், லயன்ஸ் கழக உறுப்பினர்கள், மாநகரசபையின் சுகாதாரக் குழுவினர் மற்றும் பாடசாலைகளின் லியோ கழக மாணவர்கள் கலந்து கொண்ட  இந்நிகழ்வில் மாநகர முதல்வர் கலந்து கொண்டவர்களுக்கு முருங்கை மரக் கன்றுகளை வழங்கி வைத்தார்.

சுற்றாடல் அதிகாரசபையின் ஆலோசனைக்கிணங்க சுற்றாடல் வாரமானது கடந்த சனிக்கிழமை (17) முதல் நேற்று (25) வரை நாடெங்கிலும் அனுஷ்டிக்கப்பட்டமை குறிப்படத்தக்கது.






Comments