வணக்கம் மருமக்களே வணக்கம் மாமா......

 வணக்கம் மருமக்களே வணக்கம் மாமா......

வணக்கம் மருமக்களே வணக்கம் மாமா இந்த சொற்களுக்கு சொந்தக்காரர் யாருமல்ல சிறுவர்களின் மாமா, கதை சொல்லும் மாமா, வானொலி மாமா, மகாபாரத்தின் மாமா என பல வயதெல்லை கடந்தவர்களாலும் போற்றப்பட்டு இன்று எம்மை விட்டு பிரிந்த சிவலிங்கம் மாஸ்டர் அவர்கள் தான்.




எனக்கு நல்ல நினைவிருக்கின்றது அந்த காலத்தில் தொலைகாட்சி பெட்டிகள் இல்லை வானொலி தான் எங்கள் சாம்ராஜ்ஜியம். சரியாக ஞாயிற்றுக்கிழமை பகல் 11.30 மணிக்கு சிறுவர் நிகழ்ச்சி இலங்கை வானொலியில் ஒளிபரப்பாகும். அப்போது ஒரு மாமா கதை சொல்வார் அதை நாம் கேட்க வானொலி பெட்டிக்கு அருகில் இருப்போம். அப்போது அவர் மந்திர கதைகள், மயாஜால கதைகள், பயங்கர கதைகள் போன்றவற்றை மிகவும் சுவாரஸ்சியமாவும், பயங்கரமாகவும், ஒலிநயத்துடனும்; கூறுவார். கதை முடிந்தவுடன் மீண்டும் அடுத்த வாரம்  சந்திப்போம் வணக்கம் மருக்களே என்பார் நாமும் வணக்கம் மாமா என்போம். காலம் நகர இவர் மட்டக்களப்பை தான் சேர்ந்தவர்  என்பதை அறிந்து கொண்டேன்.

 

இதன் பின் அவரின் கதைகளை நேரடியாக கேட்பதற்காக மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்திற்கு நடையாக சென்று கதைகளை கேட்போம். எனக்கு இவரின் கதைகளில் மகாபாரத கதை தான் மிகவும் பிடிக்கும் அதிலும் குதிரை ஓட்டத்திற்கு அவர் உடனே பாவிக்கும் உக்தி பக்கத்தில் இருக்கும் டயரியை எடுத்து அதற்கு ஏற்றால் போல் போடும் தாளம், மற்றும் மகாபாரத்தில் வீமனின் கதாபாத்திரத்தை வீரமாகவும், நகைச்சுவையாகவும் சித்தரிப்பதில் நாமே நம்மை மெய்மறந்து போய்விடுவோம். பெரியவர் என்ன சிறியவர் என்ன யார் வேண்டுமானாலும் என்ன சோகத்தில் இருந்தாலும் இவரது காதை சொல்லும் பாங்கினை கேட்டால் சிரித்தே விடுவார்கள்.

 

நான் அரசடி மகா வித்தியாலத்தில் கல்விகற்ற போது பல தடவை சிவலிங்கம் மாஸ்டரின் கதையை கேட்டுள்ளேன.; மாஸ்டர் ஒரு சைக்கிளில் தான் வருவார் எப்போதும் வேட்டி வாலாமணி(ஜிப்பா) அணிந்து தான் வருவார். அமைதியான நடையுடன் வருவதை நாம் கண்டால் எமக்கு ஒரே குதுகலம் தான். மாஸ்டர் வந்திருக்கார் மாஸ்டர் வந்திருக்கார் கதை சொல்லப்போர் என்று அங்கலாய்ப்போம். அதே போல் எல்லோரையும் அழைத்து அவர் கதை சொல்வார். மகிழ்ச்சியான தருமாக அது இருக்கும்.

பிற்காலத்தில் அரசடி நூலகத்திலும் சிறுவர்களுக்கான கதைகளை கூறிக் கொண்டே இருந்தார். இன்றும் என் மனதில் மகாபாரம் ஓடுகின்றது என்றால் அதற்கு ஒரு முக்கிய காரணம் மாஸ்டர் சிவலிங்கம் அவர்கள் தான். தன் வாழ்வில் மற்றவர்களை சிரிக்க வைத்து முக்கியமாக சிறுவர்களை சிரிக்க வைத்து இன்பம் கண்டவர். 

மட்டக்களப்பு மண்ணின் அக்காலத்தில் நடமாடும் ஒரு நேரடி வானொலி, தொலைக்காட்சியாக  தம் வாழ்நாளை எமக்காக தந்து அர்பணித்தவர் தான் இவர்.

 இவரை நாம்; இன்று இழந்து நிற்கின்றோம் இவரின் இழப்பு எமக்கு பேரிழப்பாகும் இவரின் சாதனைகளை மிஞ்ச இப்பாரினில் யாரும் இனி தஞ்சமென வர மாட்டார். வாழ்க உம் புகழ்.......


Comments