மார்ச் - 21 சர்வதேச வனங்களின் தினம்.....

 மார்ச் - 21 சர்வதேச வனங்களின் தினம்.....



காடுகள் அழிக்கப்படுவதால் உலகில் வெப்பநிலை கூடுகிறது.  காடுகளின் அவசியத்தை உணர்த்த ஐரோப்பா  கூட்டமைப்பு 1971 நவம்பர் கூடி  மார்ச் 21ஐ உலக காடுகள் தினமாகக் கொண்டாடுமாறு கேட்டுக்கொண்டது.  இதனை உலக நாடுகள் அனைத்தும் ஏற்றுக் கொண்ட  மார்ச் - 21 தினத்தை சர்வதேச வன தினமாக கொண்டாடுகின்றன.

இக்காடுகள் தொடர்பான ஒரு கட்டுரையை நோக்குவோம்.

நேற்றைய மரங்களை பாதுகாப்போம் இன்றைய மரங்களை பராமரிப்போம் நாளைய மரங்களை பதியமிடுவோம் - இது மரமொழி

நம்மையும் நம் சந்ததியினரை பாதுகாக்க இயற்கை நமக்கு தந்திருக்கும் வரமே மரங்கள். மரங்கள் துாய்மை கேட்டை குறைக்கும் தன்மை உடையன. நமது வாயு மண்டலத்தில் சுமார் 95 சதவீத காற்று, பூமியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 12 கிலோ மீட்டர் உயரம் வரை வியாபித்துள்ளது. இந்த காற்று, சூரிய கதிர்களின் தாக்கத்தால் எடை குறைந்து மேலும் உயரச் செல்லும். நமது சுற்றுப்புற சீர்கேட்டால் காற்றில் கலந்துள்ள பலவகையான அசுத்த வாயுக்களின் அடர்த்தியாலும், மாசுபடிவதாலும் காற்றினால் உயர எழும்பி செல்லும் நிலை குறைந்து வருகிறது. இதனால் பூமியின் மேற்பரப்பு எளிதில் சூடாக வாய்ப்பு உள்ளது. பல்வேறு வகையான பசுந்தாவரங்கள், மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் அழிய வாய்ப்பு உள்ளது. சுமார் ஆயிரம் ஆண்டுகளாக உருவான ஒரு அங்குல வளமான மேல்மண், சில ஆண்டுகளிலேயே வளம் குன்றிவிடுகிறது. இதை நீங்கள் அறிவீர்களா?

மரமும் மாசும் : வானளாவிய மரங்கள் அண்டவெளியில் உள்ள மாசு மற்றும் துாசிகளை அகற்றவல்லன. காற்றில் கலந்துள்ள அசுத்த வாயுக்களான கரியமில வாயு, கார்பன் மோனாக்சைடு, கந்தக டை ஆக்சைடு போன்றவற்றை மரங்கள் கிரகித்து பயனுள்ள வாயுக்களாக மாற்றுகின்றன. கரியமில வாயுவின் அளவை குறைத்து, பிராண வாயுவின் (ஆக்சிஜன்) அளவை அதிகரிக்கச் செய்கின்றன. ஒரு ஏக்கரில் உள்ள மரங்கள், ஒன்றரை டன் கரியமில வாயுவை கிரகித்து ஒரு டன் பிராண வாயுவை வெளிப்படுத்துகின்றன. அதுமட்டுமின்றி 20 டன் துாசியை அப்புறப்படுத்தவல்லன. மரங்களின் மாசு நீக்கும் திறனானது காற்றின் வேகம், மரங்களின் உயரம், அடர்த்தி, சூரியஒளியின் தன்மை மற்றும் மாசுக்கள் நீரில் கரையும் தன்மையை பொறுத்தது. தொழிற்சாலைகள், வாகன போக்குவரத்து, மக்கள் கூட்டம் மற்றும் ஒலிபெருக்கியினால் வரும் சப்தங்களை குறைக்கவல்லன மரங்கள். பத்து மீட்டர் அகலமுடைய மரத்தொகுப்பு 1.6- - 1.8 'டெசிபல்' வரையான சப்தங்களின் அளவை குறைக்கவல்லவை. நகரங்களில் உள்ள குடியிருப்புகளை சுற்றி 200 மீட்டர் மரத்தொகுப்புகள் அமைப்பதால், குடியிருப்போர் நிசப்தமான வாழ்க்கை வாழமுடியும்.

மரங்கள் காற்றின் வேகத்தை குறைக்கவல்லது. நன்கு உயர்ந்து வளர்ந்துள்ள மரம் காற்றின் வேகத்தை 10 சதவீதம் குறைக்க வல்லது. இதன் தாக்கம் காற்று செல்லும் திசையில் அம்மரத்தின் உயரத்தை போல 20 மடங்கு துாரத்திற்கும், காற்று வரும் திசையில் மூன்று மடங்கு துாரத்திற்கும் இருக்கும். மனிதகுலம் மற்றும் கால்நடைகளின் பெருக்கம், தொழிற்சாலைகளின் வளர்ச்சி மற்றும் நாகரிகத்தின் பெயரால் காடுகள் அழிவதாலும் உலக தட்பவெப்ப நிலையில் அதிக மாற்றங்கள் நடைபெறுவதாக அறிவியலாளர்கள் கூறுகின்றனர். இப்பேரழிவிலிருந்து உலகை, உலகமக்களை மீட்க உதவ வல்லன மரங்கள். மரங்கள் கரியமிலவாயு, நைட்ரஸ் ஆக்சைடு ஆகியவற்றின் அளவை குறைப்பதால் வெப்பநிலை பெரிதும் கட்டுப்படுத்தப்படுகிறது.

மரத்தின் மதிப்பு : 50 வயதுடைய ஆரோக்கியமான மரத்தின் மதிப்பு ரூ. 23 லட்சம். நன்கு வளர்ந்த மரம் இயற்கையை குளிர்விப்பதால், ஐந்து குளிர்விப்பானில் இருந்து பெறும் குளிர்ச்சியைத் தருகிறது. அதன் மூலம் கிடைக்கும் வருமானம் ரூ.2 லட்சம். பல்வேறு சிறு பிராணிகளுக்கும், வண்ணத்து பூச்சிகளுக்கும் உறைவிடமாக விளங்குகிறது. இதன் மதிப்பு ரூ.8 லட்சம். பிராண வாயுவை உற்பத்தி செய்வதன் மூலம் கிடைக்கும் மதிப்பு ரூ.6 லட்சம். மண்ணின் சத்தை அதிகரித்து, மண்வளத்தை கூட்டுவதால் கிடைக்கும் மதிப்பு ரூ.2.5 லட்சம். இதுதவிர நிழலாக, கால்நடைகளுக்கு தீவனமாக, மரப்பொருட்களாக, எரிபொருளாக, காற்றின் துாசு, மாசு, ஒலியை குறைப்பதன் மூலம் கிடைக்கும் லாபம் ரூ.4.5 லட்சம். சராசரி உயரம், வயதுடைய மரம் இரண்டு குடும்பங்கள் வெளியிடும் கரியமில வாயுவை எடுத்துக்கொண்டு, பிராண வாயுவை அளிக்க வல்லது. 

இக்காடுகளின் அருமையை உணர்ந்து புதிய மரங்களை நாமே உருவாக்குவோம் என்பதை  மையப்படுத்தி 21.03.2022 அன்று மட்டக்களப்பு மாவட்டத்திலும் இலங்கை வன பரிபாலன இலாகா உத்தியோகத்தர்கள், Pakkiyam Foundation அமைப்புடன் இணைந்து மண்முனை மேற்கு மங்கிக்கட்டு கிராம அபிவிருத்திச் சங்கத்தின் பங்களிப்புடன் மட்/மண்முனை மேற்கு/மங்கிக்கட்டு அரசினர் கலவன் பாடசாலையில் மரநடுகைச் செயற்பாட்டில் ஈடுபட்டனர் இதன் போது பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் மாணவ சிறார்களுடன் கைகோர்த்த சிறந்த விடயமாக இருந்தது





Comments